பட்டதாரிகளான தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரும் திருச்சபையில் மிகவும் சுறுசுறுப்பாக தவறாமல் கலந்து கொண்டனர். இரண்டு மகன்களும் ஞாயிறு பள்ளி, விடுமுறை வேதாகம பள்ளி, கூடுகைகள்... போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்பார்கள். இந்த பிள்ளைகள் குறித்து அந்த பெற்றோருக்கு கனவு இருந்தது; அதாவது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும், வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை பெற வேண்டும், மேலை நாடுகளில் அதிக சம்பளம் கிடைக்கும் வேலைகளில் சேர வேண்டும் என்று லட்சியமாக இருந்தனர். இப்படியிருக்கையில் மூத்த மகன் எட்டாம் வகுப்பை எட்டியபோது, கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர், பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் அவனை ஞாயிறு பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுத்தனர். நாட்கள் செல்லச் செல்ல ஒழுக்கம் கடைப்பிடிப்பவர்களாக, இராணுவ அதிகாரிகளைப் போல கண்டிப்பானவர்களாக இருந்தனர் அந்த பெற்றோர்; அதுமட்டுமல்ல சின்ன தவறுகளுக்கு கூட இடமளிக்கவேயில்லை. மூத்த மகனோ எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனாலும், அவன் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரியில் சேர்த்து மேற்கத்திய நாடுகளுக்குச் அனுப்பினர். துரதிர்ஷ்டவசமாக, அந்த மகன் சிறந்து விளங்கவில்லை; மாறாக போதைக்கு அடிமையானான், கொஞ்ச நாட்களில் தற்கொலையும் செய்துகொண்டான்.
எச்சரிக்கை:
"என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்" (ஓசியா 4:6) என ஓசியா மூலம் தேவன் எச்சரித்தார்.
அறிவு குறைபாடு:
"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" (நீதிமொழிகள் 9:10). பயபக்தியுடன் வேதாகமத்தைப் படிப்பது ஞானத்தைத் தருகிறது. தேவனை, அவருடைய வார்த்தைகளை பொருட்படுத்தாதபோது, தேவனைப் பற்றிய அறிவு மறைந்துவிடும், மங்கி விடும்.
அறிவை நிராகரித்தல்:
இஸ்ரவேல் தேசம் அறிவை நிராகரிக்கலாம் ஆனால் தேவனுடன் உறவைப் பேணலாம், அவருடைய பாதுகாப்பு, அரவணைப்பு மற்றும் முன்னேற்பாடுகளை அனுபவிக்க முடியும் என்று நினைத்தார்கள்.
ஆசாரியனாக இருக்க தடை:
தேவனோடு எந்த உறவும் இல்லாதபோதும், தேவனைப் பற்றிய அறிவும் இல்லாதபோதும், இஸ்ரவேலர்கள் ஆசாரியராக எப்படி இருக்க முடியும்? தேவனை மக்களுக்கும் மக்களை தேவனுக்கும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஆசாரியத்துவத்திற்கு தேவன் நிராகரிக்க வேண்டியிருந்தது.
வேதத்தை மறப்பதா?:
மோசமான விஷயம் என்னவென்றால், மோசே பிரமாணம் இருப்பதை இஸ்ரவேல் தேசம் மறந்து விட்டது. பிரமாணத்தை முற்றிலும் புறக்கணித்தன் விளைவு பிரமாணத்தை முற்றிலும் மறக்கச் செய்தது.
மறக்கப்பட்ட பிள்ளைகள்:
வேதத்தை மறப்பதன் விளைவு ஆபத்தானது மற்றும் பேரழிவையும் தரும். ஆம், அடுத்த தலைமுறையை தேவன் மறந்து விடுவார். குழந்தைகள் தங்கள் உடன்படிக்கை ஆசீர்வாதத்தை இழக்கிறார்கள், மேலும் வாக்குத்தத்தங்கள் தேவ பிரமாணத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
நான் வேதாகமத்தை நிராகரித்துவிட்டேனா? எச்சரிக்கையாயிருப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்