ஒரு சிறுவன் மங்கலான வெளிச்சம் கொண்ட தன் அறையில் திடீரென்று எதையோ பார்த்து பயந்து போனவனாய், அப்பா அப்பா என்று அலறினான். அந்த தகப்பனார் ஓடோடிச் சென்று பார்த்த போது, அவன் தனது அறைக்குள் ஒரு விசித்திரமான விலங்கைப் பார்த்ததாக கூறினான். விளக்குகளை போட்டு பார்த்த போது, அது ஒரு புதிய பொம்மை. யாரும் துரத்தாமலே துரத்துவதாக நினைத்து சிறுவன் தப்பியோடினான். பொல்லாதவர்கள் அப்படித்தான். "ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்" (நீதிமொழிகள் 28:1). துன்மார்க்கர்கள் பொதுவாக பயம், குற்ற உணர்வு, குழப்பம் மற்றும் கவலை ஆகியவற்றால் நிறைந்திருக்கிறார்கள். இந்த உள் வல்லமைகளினால் அவர்கள் விரக்தியடைகிறார்கள்; தேவனுடைய அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளாகிறார்கள். தேவன் இஸ்ரவேலை நீங்கள் பாவம் செய்தால், நியாயந்தீர்க்கப்படுவீர்கள் என்று எச்சரித்தார். இது இயற்கையாகவே துன்மார்க்கர்களுக்கு பொருந்தும். "அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்" (லேவியராகமம் 26:36). "துன்மார்க்கரோ, காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்" (சங்கீதம் 1:4).
நல்ல மனசாட்சி:
குற்ற உணர்ச்சியும் அவமானமும் துன்மார்க்கரை ஓடச் செய்யும். "துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்" (எபிரெயர் 10:22).
சத்தியத்தை அறிந்து கொள்ளல்:
நீதிமான்களுக்கு சத்தியம் தெரியும். சத்தியம் என்னவென்றால், தாங்கள் பாவிகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு உள்ளது; மேலும் தாங்கள் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறோம் (ரோமர் 5:1). எனவே, குற்ற உணர்வு இல்லை, பயம் இல்லை.
சரியானதை செய்:
நீதிமான்கள் எது சரி என்று பகுத்தறிந்து தேவ சித்தத்தைச் செய்கிறார்கள். நீதிமான்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்யும்போது, அவர்கள் தேவனால் பாதுகாக்கப்படுவார்கள். ஆபத்துகள் இருந்தாலும், அந்த கடினமான சூழ்நிலைகளை தேவன் ஜெயமாக மாற்றுகிறார்.
பயமில்லை:
நீதிமான்கள் தேவனுக்கு அஞ்சுவார்கள், வேறு எதற்கும் அஞ்ச மாட்டார்கள். மரணத்திற்கு அவர்கள் மீது அதிகாரம் இல்லை. நன்மையும் கிருபையும் நீதிமான்களை தொடரும் (சங்கீதம் 23:6).
கவனம்:
சிங்கங்கள் வழியில் வரும் எந்த மிருகத்தையும் உண்பதில்லை. அதற்கு விருப்பங்களும் தெரிவுகளும் உண்டு. இலக்கைத் தேர்ந்தெடுத்த பிறகு, சிங்கம் அதன் இரையைப் பின்தொடர்ந்து கொல்லும். நீதிமான்கள் ஒரு தரிசனத்தைக் கொண்டிருக்கிறார்கள், தேவன் கொடுத்த தரிசனத்தை இடைவிடாமல் நிறைவேற்றுகிறார்கள்.
நித்திய கண்ணோட்டம்:
நீதி என்பது தற்போதைய சூழ்நிலையில் மட்டும் இயங்குவதில்லை. அவர்கள் எப்போதும் நித்திய கண்ணோட்டத்தில் வாழ்கிறார்கள்.
பாதுகாப்பு:
கர்த்தர் நீதிமான்களைக் பாதுகாத்து, துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்கிறார் (சங்கீதம் 37:39). இந்த தெய்வீக பாதுகாப்பு, நீதிமான்களுக்கு சிங்கத்தைப் போல நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கிறது.
நான் சிங்கம் போல் தைரியமான நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்