ஒரு இளைஞன் விபத்துக்குள்ளானான். விபத்தின் காரணமாக அவனது இரு கைகளும் செயல் இழந்தது; இருப்பினும், இரண்டு கைகளையும் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அவன் ஒரு போதகரின் மகனாக இருந்ததால், வேதாகமத்தை நன்கு அறிந்தவனாக இருந்தான். அறுவை சிகிச்சைக்கு முன் படுக்கையில் இருக்கும் போது அவன் தேவனை நோக்கி கூப்பிட்டு கதறினான்; ஆண்டவர் அவன் அழுகையைக் கேட்டார். தேவன் அந்த இளைஞனை தனது ஊழியத்திற்கு அழைத்தார். அதற்கு அந்த இளைஞன்; "ஆண்டவரே, இராணுவம் ஆரோக்கியமானவர்களைத் தேர்ந்தெடுக்கும், திரைப்பட உலகம் மிகவும் அழகானவர்களைத் தேர்ந்தெடுக்கும், கார்ப்பரேட் உலகம் புத்திசாலிகளைத் தேர்ந்தெடுக்கும், இரண்டு கைகளும் இல்லாமல் நான் எப்படி ஊழியம் செய்ய முடியும்?" என்றான். ஆனாலும், அவன் கீழ்ப்படிந்தவனாய் தன் வாழ்க்கையை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தான். அறுவைசிகிச்சைக்குப் பிறகு நன்கு குணமடைந்து அற்புதமாக ஊழியம் செய்ய ஆரம்பித்தான்.
பழுதானதா?
பழுதற்ற பலியை தேவன் விரும்பினார் (யாத்திராகமம் 12:5). பலி எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் காரியங்களின் நிழலாக இருந்தது. "குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே" (1 பேதுரு 1:19); ஆம், கர்த்தராகிய இயேசு பழுதற்ற ஆட்டுக்குட்டி என்று பேதுரு எழுதுகிறான். அதாவது கர்த்தராகிய இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றும்படி பாவமில்லாமல் இருந்தார் (மத்தேயு 5:17). உன் அதிபதி பழுதடைந்த காணிக்கையை ஏற்றுக்கொள்வாரா? (மல்கியா 1:8). பாவிகள் என்ற முறையில், மனிதர்கள் திறமையானவர்கள் அல்லது போதுமானவர்கள் அல்ல, ஆனால் தேவன் தம்முடைய சித்தத்தைச் செய்வதற்கு ஒரு நபரை தகுதியுள்ளவராக ஆக்குகிறார் என்று பவுல் வலியுறுத்துகிறான். "எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது" (2 கொரிந்தியர் 3:5).
பலவீனம் முதல் முழுமை வரை:
பலவீனமான பாத்திரங்கள் மூலம் தேவன் தனது மகிமை, வல்லமை மற்றும் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறார். தன் மாம்சத்தில் ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அது தன்னை விட்டு அகல பவுல் விரும்பினான், ஆனால் அனுமதிக்கப்படவில்லை. மாறாக, தேவன் பவுலுக்கு கிருபையைக் கொடுத்தார், அது அவனது பலவீனத்தை அவரது வல்லமையினால் பரிபூரணமாக வடிவமைக்க உதவுமே (2 கொரிந்தியர் 12:9).
அர்ப்பணித்தல்:
மோசே தனது ஜனங்களான இஸ்ரவேலரை மேய்ப்பவனாக ஆவதற்கு, தனது கோல், மேய்ப்பன் என்ற அடையாளத்தை உட்பட அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டியிருந்தது. அவனது வாதங்கள் அனைத்தும் தேவனுக்கு முன்பாக ஒன்றுமில்லாமல் ஆனது (யாத்திராகமம் 4). மீட்பர் இந்த பூமிக்கு வருவதற்காக உயிர்களைப் பாதுகாக்க பசியுள்ளவர்களுக்கு உணவளிக்கும் தேவ நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, யோசேப்பு தன் வீட்டிற்கு திரும்பி செல்லும் தனது விருப்பத்தை அர்ப்பணிக்க வேண்டியிருந்தது (ஆதியாகமம் 45:5).
நீதியின் கருவிகள்:
தேவனிடம் சரணடைந்த மக்களை நீதியின் கருவிகளாக வடிவமைத்து கூர்மைப்படுத்துவதன் மூலம் தம் ஊழியத்திற்காக பயன்படுத்துகிறார் (ரோமர் 6:13). உண்மையில், ஒவ்வொரு விசுவாசியும் தனது செய்கைகளின் மூலமோ அல்லது கிரியையின் மூலமோ தேவனின் தலைசிறந்த படைப்பாக தங்களை வெளிப்படுத்துகிறார்கள் (எபேசியர் 2:10).
தலைசிறந்த படைப்பாக நான் என்னை தேவனிடம் அர்ப்பணித்துள்ளேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்