சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார். ஆகாப் மற்றும் யோசபாத்தின் நாட்களில் சீரியா இஸ்ரவேலுடன் போரிட்டு வெற்றி பெற்றது (I இராஜாக்கள் 22:35-36). எனினும், மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான். மனத்தாழ்மையையும் உண்மையான தேவன் யார் என்பதையும் கற்பிக்க தேவன் எளிய மக்களைப் பயன்படுத்தினார் (2 இராஜாக்கள் 5:1-14).
1. அடிமை ஒரு தூதர்:
யுத்தத்தின் போது இஸ்ரவேல் தேசத்திலிருந்து பிடிபட்ட ஒரு அடிமைப் பெண் நாகமானின் வீட்டில் வேலை செய்துக் கொண்டிருந்தாள். மருத்துவரின் அறிக்கை அவனது மனைவிக்கு பயமாக இருந்திருக்கும். இதைக் குறித்து அவர்களால் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் அல்லது சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை. அப்படி தெரிந்தால் நாகமானை நகரத்திற்கு வெளியே நாடுகடத்தவும், சொத்துக்கள், உடைமைகள் மற்றும் பதவிகளை கைப்பற்றுவதில் பலர் மகிழ்ச்சி அடைவார்களே. அந்தச் சூழலில் தான், இஸ்ரவேலுக்குச் சென்றால், இஸ்ரவேலிலுள்ள ஜீவனுள்ள தேவன் அவனைக் குணமாக்க முடியும் என்று உண்மையுள்ள விசுவாசியான அடிமைப் பெண் நாகமானின் மனைவியிடம் பகிர்ந்துகொண்டாள். உண்மையைச் சொல்ல போனால் அந்த அடிமைப் பெண் தன், குடும்பம் மற்றும் தேசத்தின் அவலநிலைக்கு நாகமான் தானே காரணம் என கோபப்படுவதற்கு எல்லா நியாயங்களும் இருந்தன. ஆனாலும் அவள் இரக்கமும் மன்னிப்பும் கொண்டவள். அவள் தேவனின் அற்புதமான கருவியாக இருந்தாள். விரக்தியும் பெருமையும் கொண்ட நாகமான் அவளுடைய செய்தியை நம்பி, சீரியாவின் அரசனிடமிருந்து இஸ்ரவேல் ராஜாவுக்கு ஒரு பரிந்துரை கடிதத்தைப் பெற்றுக் கொண்டு இஸ்ரவேலுக்குச் செல்ல அலுவல் ரீதியான வழியைத் தேர்ந்தெடுத்தான்.
2. வேலைக்காரன் ஒரு தூதர்:
நாகமான் இஸ்ரவேலின் ராஜாவை அடைந்ததும், அக் கடிதம் கிடைக்கப் பெற்று வாசித்ததும் தனனுடைய ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். தன்னிடம் குணப்படுத்தும் வல்லமையோ அல்லது அற்புதம் செய்யும்படி எலிசாவிடம் கட்டளையிடும் திறனோ தனக்கு இல்லை எனக் கதறினான். எலிசா இஸ்ரவேலின் ராஜாவிடம் நாகமானை தன்னிடம் அனுப்பும்படி கூறினான். நாகமானோ எலிசா வந்து தன்னை தொட்டு குணமாக்குவார் என்று எதிர்பார்த்தான். ஆனால் எலிசாவோ அவனை யோர்தானில் ஏழுமுறை ஸ்நானம் பண்ணச் சொல்லி கேயாசியிடம் தெரிவித்து அனுப்பினான்.
3. பணிவிடைக்காரன் ஒரு தூதர்:
எலிசா தன்னை தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை மற்றும் அறிவுரைகளையும் எதுவும் வழங்கவில்லை என நாகமானுக்கோ எலிசா மீது மிகுந்த வருத்தம். சீரியாவிலேயே சிறந்த ஆறுகள் இல்லையா, எதற்காக யோர்தானில் மூழ்க வேண்டும்? என கோபித்தான். ஞானமுள்ள பணிவிடைக்காரன் ஒரு ஆசீர்வாதம் தான். ஆம், அப்போது அவன் வேலைக்காரன் நாகமானை வற்புறுத்தி, அவன் அகந்தையை சமாதானப்படுத்தி, காியத்தை எளிதாக்கி, செய்யக்கூடியளவில் மற்றும் சிக்கலற்ற பணியைச் செய்து முடித்தான். நாகமானும் அற்புதமாக குணமடைந்தான்.
அகந்தையுள்ள நாகமான் கர்த்தரால் தாழ்த்தப்பட்டான், உண்மையான தெய்வத்தால் குணமடைந்து ஏற்றுக் கொள்ளப்பட்டான்.
தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற நான் தாழ்மையுள்ளவனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்