டக் நிக்கோல்ஸ் ஆபரேஷன் மொபைலைசேஷன் (ஆபரேஷன் மொபைலைசேஷன் ( OM ) என்பது ஒரு கிறிஸ்தவ மிஷனரி அமைப்பாகும்), மூலம் தன்னார்வத் தொண்டராக இருந்தார், மேலும் 1966 ஆம் ஆண்டின் இறுதியில் லண்டனில் நடந்த பயிற்சி மற்றும் மாநாட்டின் தூய்மைப்படுத்தும் குழுவில் இருந்தார். அவர் நடுஇரவு 12:30 மணியளவில் மாநாட்டு மையத்தின் முன் படிக்கட்டுகளைத் துடைத்துக்கொண்டிருந்தபோது, ஒரு முதியவர் நெருங்கி வருவதைக் கண்டார். OM மாநாடு இங்கு நடக்கிறதா என்று கேட்டார். சாதாரணமாக உடையணிந்து, ஒரு சிறிய பையுடன் இருப்பதைப் பார்த்த டக் நிக்கோல்ஸ், இவர் பழைய கால OM தன்னார்வலர் போல் இருக்கிறார், மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ளார் என நினைத்தார். டக் நிக்கோல்ஸ் அவர் தூங்குவதற்காக ஒரு இடத்தை ஆயத்தம் பண்ண முன்வந்தார்; மேலும் அவர் இரவு உணவு சாப்பிடவில்லை என்பதை அறிந்து, அதற்கு ஏற்பாடு செய்தார். டக் நிக்கோல்ஸ் எழுதுகிறார்: “அவர் சாப்பிட்டதும், நாங்கள் நல் ஐக்கியம் கொண்டோம், அவர் எங்கிருந்து வருகிறார் என்று கேட்டேன். அவரும் அவரது மனைவியும் பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் முக்கியமாக ஹிப்பிகள் மற்றும் அலைந்து திரிவோர் அருட்பணியில் பணியாற்றி வருவதாக அவர் கூறினார். அவருடன் பேசுவதும் அவருடைய பணியைப் பற்றியும் கிறிஸ்துவிடம் வந்தவர்களைப் பற்றியும் கேட்பது மிகவும் அருமையாக இருந்தது. அவர் சாப்பிட்டு முடித்தார், பின்பு இரவு நேரம் ஆனது. டக் நிக்கோல்ஸ் தவிர 50 புதிய பணியாளர்களுடன் சேர்ந்து அவர் தரையில் தூங்கினார்.
சிக்கல்:
அடுத்த நாள் காலை டக் நிக்கோல்ஸ் சிக்கலுக்கு ஆளானார்; "உன் பக்கத்தில் உறங்கிய அந்த மனிதர் யார் என்று உனக்குத் தெரியாதா?" என்று கேட்டனர். அவர் "டாக்டர் பிரான்சிஸ் ஷேஃபர், மாநாட்டின் பேச்சாளர்!" என தெரிய வந்தது. ஒரு பேச்சாளர் மாநாட்டிற்கு வருகிறார் என்றும், அவருக்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்ததும் அறியாமல் போனது வருத்தமே.
உருவாக்க வேண்டிய மாதிரி:
டக் நிக்கோல்ஸ் நினைவுகூருகிறார்; இந்தச் சந்தர்ப்பத்தைப் பற்றி நான் பலமுறை யோசித்தேன்; இந்த கருணையுள்ள, கனிவான, தாழ்மையான தேவ மனிதன், ஓஎம் பணியாட்களுடன் தரையில் தூங்குகிறார் என்றால் நானும் இப்படிப்பட்ட மனிதனாக இருக்க வேண்டும் என விரும்பினேன். நிச்சயமாக, பிரான்சிஸ் ஷேஃபரின் அறிவுத்திறனையோ, புத்தியையோ, ஞானத்தையோ நான் ஒருபோதும் அடையமாட்டேன். ஆனால் நான் இளையவர்களை அணுகி, மனத்தாழ்மையுடன் வாழ்வதன் மூலம் கிறிஸ்துவின் பெயர் மகிமைக்காக அவர்களுக்கு ஊழியம் செய்ய முடியுமே.
கர்த்தராகிய ஆண்டவரே நம் முன்மாதிரி:
மாம்சமாகி, சிம்மாசனத்தையும் மகிமையையும் ஒதுக்கி வைத்து, தன்னையே வெறுமையாக்கி, தன்னைத் தாழ்த்தி, பிதாவுக்குக் கீழ்ப்படிந்து, சிலுவையில் மரணம் அடையும்வரை மனிதனாக அவதரித்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிந்தையை விசுவாசிக்க வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார் (பிலிப்பியர் 2:5-9).
கர்த்தராகிய ஆண்டவரைப் போன்ற பணிவு எனக்கு உண்டா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்