ஆலோசனையை ஏற்பது எவ்விதம்?

ஒரு பெரிய தேவ ஊழியர் திடீரென்று மற்றவர்களை விமர்சிக்க ஆரம்பித்தார்.  யாரிடமும் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் அவரால் காண முடியவில்லை.  தேவன் மீதும் நம்பிக்கை இல்லை, மற்றவர்களையும் நம்ப முடியாத இயலாமை அவரை அவநம்பிக்கை, மனச்சோர்வு மற்றும் மற்றவர்களிடமிருந்தும் தூரமாக்கியது.  மனைவியையோ குழந்தைகளையோ பாராட்ட முடியவில்லை, உடன் வேலை செய்பவர்களும் அவரை தவிர்த்தனர்; தனிமையானார். சபை போதகர்கள் அவருக்கு ஆலோசனை வழங்க முயன்றனர், ஆனால் அவர் யாரிடமும் ஆலோசனை பெற விரும்பவில்லை. இறுதியில், அவர் தனது குடும்பத்தையும், ஊழியத்தையும், எதிர்காலத்தையும் இழந்தார். "ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி" (பிரசங்கி 4:13).

சிறந்தவர்:
சிலர் தங்களை உயர்ந்தவர்களாகவும் பெரியவர்களாகவும் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள்.  அவர்களை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை எனவும் எண்ணுகிறார்கள்.  எனவே, மற்றவர்களின் அறிவுரைகளையோ அல்லது ஆலோசனைகளையோ கேட்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை போலும்.

அறிந்தவர்:
அறிவு, ஞானம், புரிதல் ஆகியவற்றில் மற்றவர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.  ஒரு தச்சர் குடும்பத்தில் உள்ள இயேசுவிற்கு மீன் பிடிப்பது பற்றி என்ன தெரியும் என்று  பேதுரு நினைக்கவில்லை.  இயேசுவின் வார்த்தையின்படி அவன் வலையை வீசினான் (லூக்கா 5:5).

அனுபவமிக்கவர்:
பழைய ராஜா ஒரு முட்டாள் ராஜா ஆனார், ஏனென்றால் அவர் தனது அனுபவத்தை தனது முடிவுகளுக்கு அடிப்படையாகக் கருதினார்.  மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்க அவர் தயாராக இல்லை.  இதே போன்ற சூழ்நிலைகளை கடந்து வந்தவர்கள் நல்ல அறிவுரைகளை வழங்க முடியும்.

செல்வந்தர்:
ராஜா தன்னை பணக்காரன் மற்றும் புத்திசாலி என்று நினைத்தான், ஆனால் ஒரு முட்டாளாக மாறினான்.  இதற்கு நேர்மாறாக, ஏழை இளைஞர்கள் புத்திசாலிகளாக இருந்தனர், ஏனெனில் அவர்கள் கற்றுக்கொள்ளவும், ஆலோசனைகளைப் பெறவும், முன்னேறவும் தயாராக இருந்தனர்.

கேட்கும் திறனுள்ளவர்:
அறிவுரைகளை எடுத்துக்கொள்வது உண்மையில் ஒரு சிறந்த திறமை.  கேட்கத் தயாராக இருப்பதற்கு மிகுந்த பணிவு தேவை.  சுமந்த் மூல்கோகர் ஒரு ஆட்டோமொபைல் மோட்டார் வடிவமைப்பு பொறியாளர் ஆவார், அவர் இந்திய சாலைகளுக்கு சிறந்த வாகனத்தை வடிவமைக்க விரும்பினார்.  அவர் ஒரு மூத்த அதிகாரியாக இருந்தாலும், அவர் தினமும் மதிய உணவு நேரத்தில் சென்று ஒரு சிறிய ஹோட்டலில் டிரக் டிரைவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்.  இதனால் அவர்களோடு உரையாடி சிறந்த வாகனங்களில் ஒன்றின் வடிவமைப்பைப் பற்றிய நுண்ணறிவை பெற்றார், மேலும் அந்த வாகனத்திற்கு அவரது பெயரையே 'டாடா சுமோ' என அந்த நிறுவனம் பெயரிட்டது.  சாதாரண ஓட்டுநர்களின் பேச்சைக் கவனமாய் கேட்டார், தன்னை ஒரு சிறந்த வடிவமைப்பாளராகவும் புதுமை புனைவாளராகவும் மாற்றினார்.

உறுதியான முடிவுகள்:
மற்றவர்களுக்கு செவிசாய்ப்பதில் மனத்தாழ்மையுடன் இருப்பதும், சரியான அறிவுரையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆவிக்குரிய ரீதியில் பகுத்தறிவதும் ஒரு நபரை தேவ ராஜ்யத்திற்கு லாபகரமானதாக ஆக்குகிறது.

 நான் பகுத்தறிந்து முடிவெடுக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download