ஒரு இந்திய மொழியில், மிஞ்சிய கிருபை செழிப்பு பற்றி பிரசிங்கிக்கும் போதகர் அவர் இயற்றிய ஒரு பாடலைப் பாடினார்; "பணம் வா, என்னிடம் ஓடி வா, என்னிடம் நடனமாடு". வெளிப்படையாகவே, அது அவருடைய பிரசங்கத்தின் கருப்பொருளாக இருந்தது. பணம்தான் முக்கியம் என்று கேட்போரை நம்ப வைக்க முயன்றார், ஆண்டவரும் கூட அதனால் தான் பேதுருவை தன் வாயில் வெள்ளி நாணயத்தை வைத்திருக்கும் மீனை எடுக்க அனுப்பினார் என்றார், மேலும் விசுவாசிகளும் அவருடைய பாடலைப் பாடி பணத்தை அழைக்க வேண்டும் என்றார். கிறிஸ்தவர்கள் ‘பணத்தை’ கருப்பொருளாகவும் மையமாகவும் வைத்து, அதுவும் பணத்தை அழைக்கும் பாடல்களைப் பாட வேண்டுமா என்ன? கிறிஸ்தவர்கள் எப்போதும் ஆண்டவரையும் பரிசுத்த ஆவியானவரையும் அல்லவா அழைக்கிறார்கள்; பணத்தை அல்லவே. பரிசுத்தம் இருக்க வேண்டிய இடத்தில் பணம் என்று மாறும் போது பணத்தைப் பற்றிய பாடல் வழக்கமாகி, வெற்றிப் பாடலாகவும் மாறுகிறது.
தேவனா அல்லது செல்வமா?:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரண்டு தெரிவுகள் மட்டுமே இருப்பதாகக் கற்பித்தார்; ஆம் தேவனா அல்லது உலகப்பொருளா? இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய யாராலும் முடியாதே (மத்தேயு 6:24). பணத்தை தேடித் தேடி ஓடுதல் என்பது இறுதியில் தீய வழியில் கொண்டு விடும் மற்றும் விசுவாசத்தை விட்டு தவறான வழிபாட்டு பொருளாகவும் மாறி விடும் .
துதிப்பாடல்:
ஆராதனை குழு அல்லது பாடகர்கள் மட்டுமல்ல, முழு சபையும் தேவனைத் துதித்து பாடுகிறது (2 நாளாகமம் 29:28).
நன்றிதுதி பாடல்:
"கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்" (சங்கீதம் 147:7). ஆம், தேவ ஜனங்கள் அவருடைய உண்மைத்தன்மைக்கு நன்றி கூறி இசை கருவிகளைப் பயன்படுத்தி பாடல் பாடுகிறார்கள் (சங்கீதம் 147:7). கர்த்தரை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நன்றியுள்ள இருதயம் இருக்கிறது.
மகிழ்ச்சி:
ஆனந்தம், துதி மற்றும் நன்றியின் பாடல்கள் கிறிஸ்தவ வழிபாட்டின் ஒரு பகுதியாகும் (சங்கீதம் 98:4-5). இரட்சிப்பின் மகிழ்ச்சி, கர்த்தரை அறிதல் மற்றும் நித்தியத்திற்கான நம்பிக்கை ஆகியவை மகிழ்ச்சி நிறைந்த பாடல்களின் கருப்பொருள்கள்.
அர்ப்பணம் மற்றும் சமர்ப்பணம்:
விசுவாசிகள் தங்களை தேவனுக்கு அர்ப்பணிக்கிறார்கள் (சங்கீதம் 111:1). பிரான்சிஸ் ரிட்லி ஹேவர்கல் அவர்கள் (1836-1879) எழுதிய “என் வாழ்வே உமக்கு தானே, அது உமக்காக அர்ப்பணிக்கப்படட்டும்…” என்று அவர் எழுதிய பாடல் ஒரு அழகான உதாரணம்.
திருத்தம்:
சபையில் பாடுவதும் கற்பிப்பதும் என ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்ல வேண்டும். "கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடுங்கள்" (கொலோசெயர் 3:16). பலர் பாடல்களைக் கேட்பதன் மூலமும் சத்தியத்தைக் கற்றுக்கொள்கிறார்கள்.
சுவிசேஷம்:
தேவனின் மகிமையை அறிவிக்கும் புதிய பாடல்கள் பாடப்படுகின்றன, இதனால் அவற்றைக் கேட்பவர்கள் கர்த்தரை நம்புவார்கள். "நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்" (சங்கீதம் 40:3). சுவிசேஷ பாடல்கள் பாவிகளை மனந்திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க அழைக்கின்றன.
விசுவாசத்தை காத்துக் கொள்ளல்:
ஒரு தலைமுறை தேவனின் மகத்தான செயல்களைப் புகழ்ந்து, பாடும், அவரின் கிரியைகளை அடுத்த தலைமுறைக்கு அறிவிக்கும் (சங்கீதம் 145:4-5). மகா பரிசுத்த விசுவாசம் அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கப்படுகிறது.
நான் பேராசையை விட்டு விலகி பரிசுத்தத்தை தழுவுகிறேனா.?
Author: Rev. Dr. J .N. மனோகரன்