என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன? (உன்னதப்பாட்டு 1 :7).
இது மணவாட்டி தன் நேசரிடம் பாடும் பாடலாகும். அவள் கறுப்பாக இருந்தாலும் அவரை நேசிக்கிறாள். அந்தக் கறுப்பு அவள் அவரை நேசிப்பதை தடை செய்ய முடியவில்லை! அவரது பிரசன்னத்தைக் காணாமல் அவள் தவிக்கையில் அவரை எங்கே கண்டு கொள்ளலாம் என்று சுற்றிவளைத்து விசாரித்து பாடுகிறாள்! அவர் எங்கே தங்கியிருக்கக் கூடும் என்று கேட்காமல் அவரது, "மந்தையை எங்கே மேயவிடுகிறீர்," என்று கேட்கிறாள். இது அவளது மரியாதையைக் குறிக்கிறது. நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளோடு கூடத்தான் இருப்பான் என்பதை அவள் அறிந்திருந்ததால், அவரது ஆடுகள் மேயும், தங்கும் இடத்தை கேட்டறிந்து கொண்டால் அவரது இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாமே! நீ தேவபிரசன்னதில் இருக்க விரும்பினால், அவரது ஆடுகள் எங்கே இருக்கின்றன என்பதைத் தேடி கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும். உண்மையான அப்போஸ்தலர்கள் நடுவில் கள்ளத் தீர்க்கதரிசிகளும், கபட போதகர்களும் எழும்பி, சபைக்குள் இருந்து கொண்டே அதிக கேடுகளை விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சுயநல மேய்ப்பர்கள் தங்கள் மந்தையின் மூலம் வளர்ந்து வருகிறார்கள். ஆண்டவர் இவர்களுக்கு விரோதமாக சீக்கிரம் வரப்போகிறார். ஆனால், தங்களை முற்றிலும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து, சுயநலமற்ற ஊழியரான ஒரு சிறிய கூட்டம் உண்டு! இதுவே அவரது மந்தை! அவரது பிரசன்னத்தை நீ விரும்பினால் இந்த "சிறுமந்தை" எங்கிருக்கும் என்பதை நீ அறிந்துகொண்டிருக்க வேண்டும்! இந்த "சிறுமந்தை" ஒருவரிலொருவர் அன்பாயிருப்பார்கள். ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்ய தயங்கமாட்டார்கள்! எல்லா சபைகளிலுமுள்ள எல்லா பரிசுத்தவான்கள் மேலும் அன்பு செலுத்தி ஐக்கியமாயிருப்பார்கள். இவர்கள் ஒரே மந்தையாயிருப்பார்கள்! தெய்வீக மேய்ப்பனின் அடிச்சுவடுகளின் மேலேயே நடப்பார்கள்!
இவர்கள் பற்பல சபைகளின் இருந்தாலும் சபைக் கட்டுப்பாடு கொள்கை ஆகிய பிரிவினைகளை, ஒருவருக்கொருவர் உண்டு பண்ணுகிற - தடுப்புச்சுவர்களை உடைத்து எறிந்துவிட்டு ஒருவரிலொருவர் அன்பில் ஐக்கியமாயிருப்பார்கள். கிறிஸ்துவின் சபையில் பிளவுகள் இருக்கலாகாது.
அந்தந்த சபைகள் தங்கள் கொள்கைகளைப்பற்றி எத்தனையாய் வலியுறுத்தி போதித்துக் கொண்டிருந்தாலும் இவர்கள் அந்த சபைக் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி இருக்கமாட்டார்கள்! திருடனின் குரலைக்கண்டு கொள்ளும் பகுத்தறிவின் ஞானம் (discernment) இவர்களுக்கு அருளப்பட்டிருக்கும்! இந்த மந்தையை மேய்ப்பனானவர் "புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்களண்டையில் கொண்டுபோய் விடுவார்" (சங்கீதம் 23:2). அதனால் பகலில் அவைகள் இளைப்பாறிக் கொள்ளும்.
"என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்?" என்று மணவாட்டி கேட்கிறாள்.இந்த மேய்ப்பன் தனது மந்தைக்கு, மத்தியான, கடுமையான வெயிலில் இளைப்பாறுதல் தேவை என்பதை அறிந்திருக்கிறார். அதாவது தேவ பிள்ளைகளுக்கு போராட்டங்கள், உபத்திரவங்கள் வருகையில், அதன் வெப்பத்தை தாங்க முடியாமல் போய்விடக் கூடாதென்று எண்ணி சற்று இளைப்பாறச் செய்கிறார்! புல்லுள்ள இடங்கள்" என்பது அவரது பொழிந்து கொண்டிருக்கும் கிருபையையும், மகா இரக்கத்தையும் குறிக்கும். தெய்விக சுகத்தையும் உள்ளடக்கும். நோயின் கொடுமையினால் வாடும் தனது மக்களுக்கு சுகத்தை அளிக்கிறார். மரண பள்ளத்தாக்கிலிருந்து அவர்களை மீட்டு எடுக்கிறார். அமர்ந்த தண்ணீர் என்பது கிறிஸ்துவிலிருந்து புறப்படும் ஜீவ தண்ணீர். கடும் சூரிய வெப்பமாகிய நோயின் வேதனையாலும், உபத்திரவத்தின் பாடுகளாலும் விடாய்த்து களைத்துப்போயிருக்கும் தமது மந்தையின் ஆடுகளுக்கு அவ்வப்போது ஜீவ தண்ணீரை பருகச்செய்து அவைகளின் தாகத்தை தீர்க்கிறார். அன்பும் அக்கறையுமுள்ள மேய்ப்பர்!
(மொழியாக்கம் by Caroline Jeyapaul)