"அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனான்..." (2 நாளா 29:20)
தனி மனிதனாய் வேலையைத் தொடங்கிய எசேக்கியா, தன்னோடு மீதியான சிறுகூட்ட ஆசாரியரையும் லேவியரையும் சேர்த்து, " நாம் இருக்கும் நிலையையும் நிந்தையையும் பார்க்கிறீர்களே!" என்று அவர்களைத் தன்னோடு இணைக்க, பாரம் கொண்ட அவர்கள், தங்களைப் போன்ற தங்களோடு இருந்தவர்களையும் இணைத்து ஆலய சுத்திகரிப்பு செய்தனர். இப்போது இவைகளால் இன்னும் உற்சாகப்பட்டு பெலப்பட்ட அவன், காலமே எழுந்திருந்து நகரத்தின் முக்கியஸ்தர்களான பிரபுக்களையும் தன்னோடு சேர்த்து ஆலயத்துக்கு அழைத்துக் கொண்டு போகிறான்.
தேவனுக்காகவும் தேசத்துக்காவும் ஒரு தனிமனிதனோடு இணைந்த மீதியான சிறு ஜெபவீரர் குழு ஒன்று, போதகர்களையும், உதவிப்போதகர்களையும், சுவிசேஷகர்களையும், ஊழியர்களையும் ஒன்றிணைத்து, இப்போது பிரபுக்கள் போன்ற சபையின் மூப்பரையும், மூத்த விசுவாசிகளையும்,எதவிக்காரரையும் தன் தரிசனத்திட்டத்தில் இணைத்துக்கொள்கிறது. தேவன் இதை வாய்க்கச் செய்வார். தேவன் செய்வது எதுவோ அது நிலைக்குமே!
அடுத்து எசேக்கியா செய்தது, தன் ராஜ்யத்துக்காகவும், பரிசுத்த ஸ்தலத்துக்காகவும், இஸ்ரவேல் அனைத்துக்காகவும், தேசம் முழுமைக்காகவும் பாவநிவாரணபலியும், சர்வாங்க தகனபலியும் செலுத்தி பிராயச்சித்தம் செய்தது தான்! (2 நாளா 29 : 20 - 24)
எசேக்கியா தன் ராஜ்யபாரத்துக்காகவும், பரிசுத்த ஸ்தலத்திற்காகவும், தேசம் அனைத்திற்காகவும் பிராயச்சித்தம் செய்ததுபோல, நாமும் நமக்காகவும் நமக்கு முன்னிருந்தவர்களுக்காகவும், நாமும் அவர்களும், தேவனுக்கும் தேவனுடைய ராஜ்யத்துக்கும், சபைக்கும், தேசத்துக்கும் செய்த எல்லா சேதங்களுக்காகவும் நஷ்டங்களுக்காகவும் பிராயச்சித்தம் செய்தே ஆக வேண்டுமே!
"ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு (அந்தச் சத்துரு) உத்தரவாதம் பண்ண முடியாது.." (எஸ்தர் 7:4) என்றாள் எஸ்தர்.
ராஜாதி ராஜாவாம் தேவனுக்கும், அவருடைய ராஜ்யத்துக்கும், மனித ஆத்துமாக்களுக்கும், ஏன், நம்முடைய சொந்த ஆவிக்குரிய வாழ்க்கைக்குமே கூட நம்மால் ஏற்பட்ட நஷ்டத்துக்கும் இழப்புக்கும் ஒரு அளவு உண்டோ? அதற்கு ஈடு செய்பவன் யார்? அதற்கு உத்தரவாதம் பண்ணுபவன் யார்? (தேவ ராஜ்யத்துக்கு சேதமும் நஷ்டமும் ஏற்படுத்துபவன் யாராயிருந்தாலும் அவன் சத்துருவாகவே கணக்கிடப்படுவானோ?)
ஓ! இன்று என் கண்ணெதிரே எனக்குத் தெரிந்த, என் சொந்தங்கள் எத்தனை பேர் உயிரோடு அடியில்லா ஆழ நித்தியக் குழிக்குள்ளே இறங்க நான் காணவில்லையோ?
ஓ! நம் தெருக்களிலும் ஊரிலும், சபையைச் சுற்றிலும் கூட இருக்கும் கூட்டங்கூட்டமான ஜனம் ஒவ்வொரு நாளும் முடிவில்லா நித்தியத்துக்குத் தீவிரிக்கிறதை சயை காணவில்லையோ?
அரசியல்வாதியோ அதிகாரவர்க்கமோ, சுகாதாரமோ பொருளாதாரமோ, மருத்துவ உலகமோ பொழுதுபோக்கு உலகமோ, விஞ்ஞானியோ அஞ்ஞானியோ, படித்தவனோ பாமரனோ, கிரேக்கனோ இந்தியனோ, ஏழையோ பணக்காரனோ, கறுப்போ சிவப்போ எப்படிப்பட்ட பிரிவைச் சேர்ந்தவனுக்கும் சுவிசேஷம் அளிக்க சபை இன்று கடனாளியில்லையோ? (ரோ 1:14)
"காலை முதல் மாலை வரை மடிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல் நித்திய அழிவடைகிறார்களே! அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மையெல்லாம் போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்களே!" (யோபு 4:20,21)
"மரணத்துக்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் சபையானது விடுவிக்கவேண்டியதில்லையோ? அதை அறியோம் என்பார்களேயாகில் இருதயங்களை சோதித்தறிகிறவர் அறியாரோ? சபையின் ஆத்துமாவைக் காக்கிறவர் அறியாரோ? (நீதி 24:11, 12)"
அப்படியானால் இந்த ஆத்துமாக்களின் நித்திய நித்தியமான நஷ்டத்துக்கு உத்தரவாதி யார்? இதுவரை நமது அலட்சியத்தினாலும் அக்கறையின்மையினாலும், அன்பில்லாமையினாலுமே நரகக் குழிக்குள் உயிரோடு இறங்கிய ஆத்துமாக்களின் நஷ்டத்துக்கும் இழப்புக்கும், அவர்களது முடிவில்லா வேதனைக்கும் அலறலுக்கும் பொறுப்பேற்பவன் யார்?
தகர்க்கப்பட்ட நமது ஆவிக்குரிய பலிபீடங்கள், குடும்ப ஜெப பீடங்கள், செப்பனிடப்பட்டுச் சரி செய்யப்பட்டே ஆக வேண்டுமே! பிராயச்சித்தமும், சரிசெய்யப்படுதலும், ஈடுகட்டப்படுதலும் கட்டாயம் நடந்தே தீர வேண்டுமே!
பாவமன்னிப்பின் ஜெபங்கள் ஏறெடுக்கப்பட வேண்டுமே! ஒருவருக்கொருவர் ஒப்புரவாகுதலின் ஜெபங்களும், மன்னிப்புக்கோரப்படுதலும், மன்னித்து மறக்கப்படுதலும் மனப்பூர்வமாய்ச் செய்யப்பட வேண்டுமே! நமது பாவங்களுக்காகப் பாவநிவாரணபலியாகக் கிறிஸ்து தம்மையே தேவனுக்குப் பிரியமான சுகந்த வாசனையாகவும், பலியாகவும் செலுத்தியது போல மீண்டும் ஒரு முறை தேவனுக்கு முன்பாகப் போதகர்களும் மூப்பர்களும் தங்களையே பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமே!
எசேக்கியா, தன் ராஜ்யபாரத்துக்காக மட்டுமல்ல, பரிசுத்த ஸ்தலத்துக்காக மட்டுமல்ல, இஸ்ரவேல் அனைத்துக்காகவுமே பிராயச்சித்தம் செய்தது போல மூப்பர்களும் போதகர்களும் தலைவர்களும், மீதியானோர் யாவரும், தாங்கள் தங்களுக்கும், தேவனுக்கும் தேவராஜ்யத்துக்கும், தேசத்துக்கும் சபைக்கும், ஜனங்களின் விலையேறப்பெற்ற ஜீவனுக்கும் ஏற்படுத்தின நஷ்டங்களுக்குப் பிராயச்சித்தமாகத் தங்களையே மீண்டும் ஒரு முறை சமூலமாக ஒப்புக்கொடுத்து அர்ப்பணம் செய்தே ஆக வேண்டுமே!
இதைத்தான் தனது ஆறாவது அம்சத்திட்டமாகச் செய்தான் எசேக்கியா! அவனது பிராயச்சித்த பலிகள் தேவனுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டதே!
Author : Pr. Romilton