தனிமனிதனாய் நின்று மீதியானோரை அறைகூவலிட்டு ஆசாரியரையும் லேவியருமான போதகர்களையும், உடன் ஊழியரையும் கூடிவரச்செய்து, பிரபுக்களான மூப்பர்களை எழுப்பி, ஆலயத்தை முந்தின சீருக்குக் கொண்டுவந்த எசேக்கியா, தேவன் தந்த பாரத்திலும் தரிசனத்திலும் இஸ்ரவேலின் கடை நிலையானவர்களையும் கூட இணைத்துக் கொள்கிறான்.
தேவனுடைய இதயத்தின் பாரமும் வேதனையும் கதறலும் சபையின் கடைசி விசுவாசி வரை கடத்தப்பட்டே ஆக வேண்டாமோ? சபையை சுத்திகரிப்பதிலும் பரிசுத்தப்படுத்துவதிலும், அசுத்தமானவைகளை வெளியே கொண்டு போய்க்கொட்டுவதிலும், நஷ்டங்களையும் இழப்புகளையும் ஈடுகட்டி, பிராயச்சித்தம் செய்து, தேவனுக்கு ஸ்தோத்திரபலி செலுத்துவதிலும் காட்டப்படும் தீவிரம் தலைவனில் தொடங்கிக் கடைசித் தொண்டன் வரை எடுத்துச் செல்லப்பட வேண்டுமே! தேசத்தைச் சந்திக்கவும், சபையை முந்தின சீருக்குக் கொண்டு வந்து நிறுத்தவும், பெரியோர் முதல் சிறியோர் வரை ஒவ்வொருவரின் பங்கும் இன்றியமையாததல்லேவோ?
"கீதத்தைப் பாடி பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கையில்.....சபையார் எல்லாம் பணிந்து கொண்டிருந்தார்கள். பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்து கொண்டார்கள்." (2 நாளா 25)
எசேக்கியாவின் எழுப்புதல் தீ எட்டுத்திக்கும் பரவ ஆரம்பித்ததுபோல, மிஷன் 2024க்காகப் பற்றவைக்கப்படும் இந்தச் சிறு முயற்சியான ஜெபப் பொறி, மீதியானவர்களில் தொடங்கி, போதகர்களையும் சுவிசேஷகர்கள், மிஷினரிகள், மூப்பர்கள் கடந்து ஒவ்வொரு விசுவாசியையும் பற்றிப்பிடிக்க தேவன் கிருபை செய்வாராக!
Author : Pr. Romilton