"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது" என்ற திருக்குறளை நாம் அறிவோம். அதாவது சரியான நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருப்பினும் அதுவே உலகத்தின் மிக பெரியது. மனிதர்கள் பொதுவாகவே ஒருவரையொருவர் சார்ந்து வாழ்பவர்கள் ஆகையால் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், விசுவாசிகள் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், அனைவருக்கும் நன்மை செய்யவும் அழைக்கப்படுகிறார்கள். மருத்துவத்திற்கான உடனடி தேவையை, முதல் மணிநேரம் 'பொன்னான நேரம்' (golden hour) என்று அழைப்பதுண்டு, ஒரு நபரை அந்தக் குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டுவந்தால், மரண தருவாயிலிருந்து அந்நபரைக் காப்பாற்ற முடியும்.
1) எளிய உதவி:
"ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்களென்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?" (யாக்கோபு 2:15-16)
2) விவேகம்:
யூதா புத்திசாலித்தனமாக யோசேப்பைக் கொல்லாமல், அடிமையாக விற்கும்படி தன் சகோதரர்களுக்கு அறிவுரை கூறினான். யூதா சரியான நேரத்தில் அளித்த அறிவுரை யோசேப்பைக் காப்பாற்றியது, ஆனால் ரூபன் நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தான், ஆனால் சரியான நேரத்தில் தலையிடவில்லை (ஆதியாகமம் 37: 21, 26, 29,30).
3) உக்கிராணத்துவம்:
"ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்" (யாக்கோபு 4:17). ஒரு அரசாங்க அதிகாரிக்கு மாபெரும் அதிகாரம் உள்ளது. பல சமயங்களில், அவர் அதை நல்லது செய்ய பயன்படுத்துவதில்லை. கிறிஸ்தவர்கள் தங்களது அதிகாரம், செல்வாக்கு மற்றும் உடைமைகள் என அனைத்திலும் பொறுப்புள்ள உக்கிராணத்துவர்களாக இருக்க வேண்டும்.
4) மூலோபாய தலையீடு:
எஸ்தர் சாதாரணமாக அந்த நிலைக்கு வரவில்லை; அவள் அரண்மனைக்குள்ளே தனக்கான சரியான நேரத்தில் தலையிட காத்திருந்தாள். மொர்தெகாய் எஸ்தரை எச்சரித்தான்; "நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால் யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்" (எஸ்தர் 4:14). ஏலி, கர்த்தருக்குச் செவிசாய்க்க தன் பிள்ளைகளுக்குக் கற்பிக்கத் தவறினாலும், சரியான நேரத்தில் சாமுவேலுக்குக் கற்றுக் கொடுத்தார் (1 சாமுவேல் 3:7-10).
சரியான நேரத்தில் செய்கின்ற உதவி, பேசும் வார்த்தைகள், கொடுக்கின்ற ஊக்கம், பரிந்துரைக்கும் ஒழுக்கம், வசதி வாய்ப்புகள், இணைப்புகள், ஆலோசனைகள், பரிந்துரைகள் மற்றும் உடனிருப்பது ஆகியவை வாழ்க்கையை மாற்றும். நமது வளங்கள், செல்வாக்கு, அதிகாரம் என அனைத்தையும் நன்மைக்காகப் பயன்படுத்துவது ஒரு சீஷனின் அன்றாடக் கடமையாகும்.
தேவனளித்த வளங்களைக் கொண்டு நல்ல உக்கிராணக்காரனாக சரியான நேரத்தில் உதவி செய்கின்றேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran