'எனக்கு வெற்றி, உனக்கு தோல்வி'; 'எனக்கு தோல்வி, உனக்கும் தோல்வி'; 'எனக்கும் வெற்றி; உனக்கும் வெற்றி'; மற்றும் 'எனக்கு தோல்வி உனக்கு வெற்றி' ; சில சமூகவியலாளர்கள் நான்கு வகையான உறவுகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆம், மனித வாழ்க்கையில் குடும்பங்கள், நிறுவனங்கள், சுற்றுப்புறம், சமூகம், வணிகம் மற்றும் தேசம் என அனைத்திலும் உறவுகள் என்பது முக்கியம்.
1) உறவில் ஒரு அகந்தை:
எனக்கு வெற்றி உனக்கு தோல்வி. சிலர் தங்களைப் பற்றி அதாவது கல்வி, அந்தஸ்து, அதிகாரம், சக்தி, பதவி, செல்வாக்கு என உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள். வெற்றியாளர் அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை அவர்களிடம் உள்ளது. மற்ற நபர் எப்போதும் தோல்வியுற்றவராக இருக்க வேண்டும், எனவே மற்றவர்களை மிரட்டவும், சுரண்டவும், துஷ்பிரயோகம் செய்யவும், ஒடுக்கவும் முயற்சிப்பார். திருமணத்தில், அதிகாரகுணமுள்ள கணவர்கள் மற்றும் தந்தைகள் குடும்பத்தில் மகிழ்ச்சியை அழிக்கிறார்கள். ஏழைகளை பணக்காரர்கள் சுரண்டுவதும் இதே அணுகுமுறையில்தான். கர்த்தருடைய சீஷர்கள் இந்த அணுகுமுறையை நிராகரிக்கிறார்கள்.
2) உறவில் ஒரு அபாயகரம்:
'எனக்கு தோல்வி, உனக்கும் தோல்வி'. அபாயகரமான மனநிலை கொண்ட பலர் உள்ளனர். அவர்கள் தாங்கள் அழிவது மட்டுமல்ல, அவர்களுடன் சேர்ந்து மற்றவர்களையும் அழிக்கிறார்கள். மனித வெடிகுண்டை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆண்டவருடைய சீஷர்கள் உயிர்களையும் உடைமைகளையும் அழிப்பவர்களாக இருக்க முடியாது. அவர்கள் அழிப்பதை விட தியாகம் செய்ய முனைபவர்கள் அல்லவா.
3) உறவில் ஓர் உணர்வு:
'எனக்கும் வெற்றி; உனக்கும் வெற்றி'. வேலை அல்லது ஒத்துழைப்பின் பலன்களை சமமாக பங்கிட்டு்க் கொள்ள விரும்பும் சில விவேகமான மக்கள் உள்ளனர். ஒரு சுமை அல்லது விரும்பத்தகாத பணி இருக்கும்போது கூட, அதை பகிர்ந்துக் கொள்கின்றனர். அதாவது மகிழ்ச்சி, கவலை, வெற்றி, இழப்பு, தோல்வி, ஆதாயம், லாபம் என அனைத்தும் பகிர்ந்துக் கொள்ளப்படுகின்றன. ஒரு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் ஒரே சரீரமாக எண்ணி பகிர்ந்துகொள்ளும்போது, அவர்கள் ஒரு நல்ல உணர்வுள்ள உறவைப் பின்பற்றுகிறார்கள்.
4) உறவில் ஒரு தியாகம்:
'எனக்கு தோல்வி உனக்கு வெற்றி'. ஒரு சிலர், தங்கள் முன்னுரிமைகள், தங்களுக்கான நன்மைகள் என மற்றவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்காக தங்கள் வாழ்க்கையை கூட தியாகம் செய்ய விரும்புகிறார்கள். கர்த்தராகிய இயேசு கற்பித்தார்: "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்" (யோவான் 12:24).
பவுல் எழுதுகிறார்; "கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்" (பிலிப்பியர் 4:2). விசுவாசிகளுக்கிடையேயான உறவுகள் என்பது தேவன் மற்றும் ஒருவருக்கொருவரான அன்பை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, கசப்பு மற்றும் தீங்கு இல்லாமல் ஒருவரையொருவரை ஏற்றுக் கொள்வது ஆரோக்கியமான உறவாகும்.
எனக்கு உறவில் உணர்வும் தியாக மனப்பான்மையும் இருக்கிறதா?
Author : Rev. Dr. J. N. Manokaran