சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள ஒரு கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சாமி சிலை மற்றும் அர்ச்சனை பொருட்களுடன் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி எழுவது வழக்கம். அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவர் மூழ்க, அவரை காப்பாற்ற அடுத்தடுத்து சென்ற 18 முதல் 22 வயதுக்குட்பட்ட 5 இளைஞர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது (தி டெக்கான் ஹெரால்டு ஏப்ரல் 6, 2023). குளத்தின் கரையில் இருந்தவர்கள் அவர்களை வெளியே இழுக்க நீண்ட கயிற்றையோ அல்லது நீண்ட துணிவிரிப்புகளையோ அவர்கள் பக்கமாய் எறிந்து காப்பாற்ற செயல்படவில்லை, வெறுமனே கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை இந்த சோக நிகழ்வு காட்டுகிறது.
ஏன் அலட்சியம்?
இளைஞர்கள் பொறுப்பற்றவர்களாகவும் கவனக்குறைவாகவும் இருப்பதாக பலர் உணர்ந்தனர். விழிப்புடன் இல்லாதது அவர்களை துயரத்தில் ஆழ்த்தியது.
ஏன் வெகுதூரம்?
ஏன் இவ்வளவு தூரம் போனார்கள் என்று சிலர் கத்தினார்கள். கூட்டத்தோடு கூட்டமாக இருப்பது தானே பாதுகாப்பு என்றார்கள்.
ஏன் ஆழம்?
அதில் சிலர் 'ஏன் ஆழமாகச் சென்றீர்கள்? அங்குள்ள நீர் ஆழமான மற்றும் சக்திவாய்ந்த நீரோட்டங்களைக் கொண்டிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா?' என்றார்கள். வெளியே வந்ததும் இனி இப்படி போகாதீர்கள் என்றனர்; ஆனால் அவர்கள் திரும்பவில்லையே.
நீச்சலும் முயற்சியும்:
கடினமாக நீந்துங்கள், நன்கு முயற்சி செய்யுங்கள், உங்களால முடியும், நீங்கள் வெளியே வருவீர்கள் என போராடிக்கொண்டிருந்தவர்களை உத்வேகப்படுத்தி உற்சாகப்படுத்தினர்.
நீச்சல் கற்கவில்லையா?
நீச்சல் கற்காத இளைஞர்களை சிலர் கண்டித்தனர். ஏன் நீச்சல் தெரியாமல், தண்ணீரில் இறங்க வேண்டும் என விமர்ச்சனம் செய்தனர்.
விடுவிப்பர் இல்லை:
பலவகையான அறிவுரை அளிப்போர், ஆலோசகர்கள் மற்றும் வழிகாட்டிகள் என சுற்றிலும் இருந்தனர், ஆனால் மீட்பவர் இல்லை. அழிந்து கொண்டிருந்தவர்களை காப்பாற்ற தண்ணீருக்குள் குதிக்கவோ, உதவவோ அல்லது மீட்கவோ யாரும் இல்லை.
சேற்றினில் உழன்ற பாவிகள்:
எல்லா மனிதர்களும் பாவிகள். அவர்கள் சேற்றினில் மூழ்குகிறார்கள். அவர்கள் எவ்வளவு அதிகமாக வெளியே வர முயற்சிக்கிறார்களோ, அவ்வளவு ஆழமாக அவை உள்ளிழுக்கும். பல தத்துவங்கள், மதங்கள், கோட்பாடுகள் மற்றும் மரபுகள் உள்ளன. இருப்பினும், ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கியபோது, பாதுகாப்பான தூரத்தில் நிற்கும் மக்கள் எவ்வாறு உதவ வேண்டும் என்ற எந்த நடைமுறை ஆலோசனையும் வழங்கவில்லை.
உலக மீட்பர்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகில் பிறந்தார், மக்களிடையே வாழ்ந்து, பரிசுத்தமான வாழ்க்கையை நடத்தினார், பாவத்தின் சம்பளமான மரணத்தை ஏற்றுக்கொண்டார். அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க அவர் மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். "பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்துகிறார்" (சங்கீதம் 40:2).
இந்த மாபெரும் இரட்சிப்புக்கு நான் எப்படி நன்றியுள்ள நபராக இருக்கிறேன்?
Author: Rev. Dr. J .N. மனோகரன்