ஊழியர்கள் பெருகிவிட்டனர்; ஊழியம் சுருங்கிவிட்டது. இன்றைய அறிவியல் கருவிகளோ அதிநவீன தொலைத் தொடர்பு வசதிகளோ இல்லாத முதல் நூற்றாண்டு திருச்சபை சுவிசேஷப் பணியின் மூலம் ஏற்படுத்திய விளைவுகளில் இலட்சத்தில் ஒருபங்கு விளைவைக்கூட இக்காலத் திருச்சபை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், நாம் வசனத்தைவிட்டு வழிவிலகிப் போய்விட்டோம்.
ஜெபத்தை இரகசியமாக ஏறெடுக்கவேண்டும் (மத்.6:6). சுவிசேஷத்தை வெளியரங்கமாக அறிவிக்கவேண்டும். (மாற்.16:15) இதைத்தான் நம் ஆண்டவர் கற்பித்தார், செய்தும் காட்டினார்.
இந்நாட்களில் சுவிசேஷ (கூட்டங்களைப் பற்றிய) அறிவிப்புகள் குறைந்து ஜெபக்கூட்டங்களைப் பற்றிய விளம்பரங்கள் பெருகிவிட்டன. அவையும் ஆசீர்வாத ஜெபங்களாகிப் போய்விட்டன என்பது கூடுதல் சோகம்.
மேலும், இன்றுள்ள நட்சத்திர ஊழியர்கள் தனிமனித சந்திப்பு ஊழியத்தைச் செய்வதே இல்லை. அப்படியே சந்தித்தாலும் இயேசுவானவர் சமாரியப் பெண்ணைச் சந்தித்ததைப்போல் அது இருப்பதில்லை.
மேலும் பலர், எனக்கு போதக ஊழியம்தான் (Teaching ministry), அல்லது சிறுவர் ஊழியம்தான் (Children ministry) என்று வரையறுத்துக்கொள்கிறார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே' நமக்கு முன்மாதிரி. அவர் தனிப்பட்ட முறையிலும் ஜெபித்தார், கூட்டத்தின் முன்பும் ஜெபித்தார், சீடர்களுக்கும் (சிறுகுழு) போதித்தார், தேவாலயத்திலும் (பெருங்கூட்டம்) உபதேசித்தார். தனி மனிதரைச் சந்தித்தார், நோயாளிகளைச் சந்தித்து சுகப்படுத்தினார், விருந்துக்குப் போனார், சாவுக்குப் போனார். பசித்தோர்க்கு உணவளித்தார், பாவிகளை நேசித்தார்.
அவரது (சரீர) மரணத்திற்குப்பின் எஞ்சியிருந்தவை அவரின் உடைகள் மட்டுமே. அனைத்தும் அவரைக் கொண்டும் 'அவருக்கென்றும்' உண்டாக்கப்பட்டன. ஆனால் அவரோ, தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. அப்படியிருந்தும்
ஒழுங்காக வரி கட்டினார் (அவரது பெயரில் இயங்கும் இன்றைய கார்ப்பரேட் ஊழியர்கள் சிலர் இதைச் செய்வதில்லை).
உணவருந்தக்கூட நேரமில்லாத பரபரப்பான(Busy) அந்த ஊழியர் சிறுவர்களுக்கும் தொழுநோயாளர்களுக்கும் பேய்பிடித்தவர்களுக்கும் தன் நேரத்தை ஒதுக்கினார்.
இவரே உலகின் தலைசிறந்த ஊழியர். இவரையே நாம் பின்பற்றுவோம். இந்தப் பாடத்தை வேதாகமக் கல்லூரிகளில் படிக்க முடியாது. நாம் 'இயேசுவைக்' கற்போம் (மத்.11:29).
பொன்.வ.கலைதாசன்