ஒரு போதகர் தனது தலையில் ஒருபோதும் எண்ணெய் அல்லது கிரீம் பயன்படுத்தவில்லை என்று கூறினார். ஏனெனில், தேவன் அவரை எண்ணெயால் அபிஷேகம் செய்துள்ளதாக கூறினார் (சங்கீதம் 23: 5). ஆகையால், தினந்தினம் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என நினைத்து விட்டார் போலும். இது வேதத்தின் நேரடி விளக்கத்தின் அடிப்படையில் ஒருசில விசுவாசிகளிடையே கூட இதுபோன்ற மூடநம்பிக்கைகள் இருப்பது வருந்ததத்தக்கது. அந்த வசனத்தின் அர்த்தங்களை ஆவிக்குரிய புரிதல் இல்லாமல் நேரடி அர்த்தமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
1) பதவிக்கான அபிஷேகம்:
ஒரு பதவிக்கு தேர்ந்தெடுப்பதற்காக தேவன் மக்களை அபிஷேகம் செய்கிறார். பழைய ஏற்பாட்டில், ஆசாரியர்கள், அரசர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் அந்த குறிப்பிட்ட வேலைக்கான சேவையைச் செய்ய அபிஷேகம் செய்யப்பட்டனர். தாவீது ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டான். ஆரோன் ஆசாரியனாக பொறுப்பேற்க அபிஷேகம் செய்யப்பட்டான்.
2) வல்லமை மற்றும் அடையாளத்திற்கான அபிஷேகம்:
புதிய ஏற்பாட்டில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள் அபிஷேகம் செய்வதன் மூலம் அதிகாரம் பெறுகிறார்கள். அவர்களுக்கு ஒப்புதல் முத்திரையும் வழங்கப்படுகிறது (II கொரிந்தியர் 1: 21-22). இது மகத்தான வல்லமையைக் கொடுப்பதல்ல, ஆனால் இப்பணியில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வலிமையையும் சகிப்புத்தன்மையையும் தைரியத்தையும் தேவனிடத்திலிருந்து அளிக்கிறது.
3) நோக்கத்திற்கான அபிஷேகம்:
ஒரு நபர், இடம் அல்லது ஒரு பொருளை தனித்து வைக்க அல்லது புனிதப்படுத்த அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆலய பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஒரு சிறப்பு நோக்கத்திற்காக ஒதுக்கி வைக்கப்படுகிறது. அந்த பாத்திரங்களை சாதாரண நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது. பெல்ஷாத்சார் குடிப்பதற்காக தேவாலயப் பாத்திரங்களை கொண்டுவரும்படி கட்டளையிட்டான். அதனால் அவன் தனது ராஜ்யத்தையே இழந்தான் (தானியேல் 5:2).
4) குணப்படுத்துவதற்கான அபிஷேகம்:
நோய்வாய்ப்பட்ட நபருக்கு அபிஷேகம் செய்து குணமடைய ஜெபிக்க சபையின் மூப்பர்கள் அழைக்கப்படுகிறார்கள். (யாக்கோபு 5:14)
5) தயார்படுத்துவதற்கான அபிஷேகம்:
மரியாள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அபிஷேகம் செய்தாள், இது பார்வையாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சீடர்களால் கூட விமர்சிக்கப்பட்டது. மரியாள் வெறுமனே அவரை அடக்கம் பண்ணும் நாளுக்காக இதை தயார் செய்தாள் என்ற ஆண்டவர் எளிதாக பதிலளித்தாரே (யோவான் 12: 7).
என் வாழ்க்கையில் தேவன் அபிஷேகம் செய்ததற்கு ஏற்ப நான் நன்றியுள்ளவனா/ளா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்