பலர் உடனே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள் மற்றும் மக்களைக் கண்டிக்க அல்லது தீர்ப்பளிக்க விரும்புகிறார்கள். "வீண் செலவு என்னத்திற்கு?" என ஆண்டவராகிய இயேசுவின் பாதங்களில் விலையுயர்ந்த தைலத்தை பூசிய பெண்ணிடம் சீஷர்கள் கேட்டார்கள் (மத்தேயு 26:6-13). சீஷர்களின் கண்ணோட்டத்தில், அது வீணானது, அதே சமயம் ஆண்டவரைப் பொறுத்தவரை அது எப்போதும் நினைவுகூரப்படும் மற்றும் விலைமதிப்பற்ற ஒரு நல்ல கிரியை. சீஷர்கள் கடுமையான, கரடுமுரடான, நியாயமற்ற தீர்ப்பை வழங்கினர். அந்த சீஷர்களைப் போலவே, இன்றும் சீஷர்கள் இத்தகைய தீர்ப்புகளை வழங்குவது சாத்தியம்.
மற்றவர்கள் தான் தவறு:
பலர் தாங்கள் நல்லவர்கள், மற்றவர்கள் மோசமானவர்கள் என்ற பெருமை மனப்பான்மையைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் சிறந்த அம்சங்களை மற்றவர்களின் மோசமானவற்றுடன் ஒப்பிடுகிறார்கள், இது நியாயமே இல்லையே.
குறைகளைப் பற்றி பேசுவது:
மற்றவர்களின் தவறுகளைப் பற்றி பேசுவது எளிதாக இருக்கிறது, ஆனால் தங்களின் தவறுகளைப் பற்றி பேச முடிவதில்லை; அப்போது அமைதி மாத்திரமே. அவர்களைப் பொறுத்தவரை, மற்றவர்களின் தவறுகள் புறணி கதையாக பேச நன்றாக இருக்கும்; அதாவது பொதுத்தளங்களில் கூட மற்றவர்கள் விஷயத்தை சத்தமாக பேச முடியும். ஆனால் தங்களுக்கான இரகசியத்தை வேகமாக மறைக்கின்றனர்; யாராவது அதை பேசப் போனால் கொதித்தெழுகின்றனர்.
பாரபட்சக் கண்ணோட்டம்:
ஒரு நபர் ஒரு வார்த்தை அல்லது ஒரு செயல் அல்லது ஒரு நிகழ்வு அல்லது ஒரு நடத்தை என இவற்றை வைத்து மட்டுமே தீர்மானிக்கப்படுகிறார். அதில், அந்நபரின் எஞ்சிய நீதியான வாழ்க்கை புறக்கணிக்கப்படுகிறது அல்லது ஓரங்கட்டப்படுகிறது.
மறைக்கப்பட்ட நோக்கங்கள்:
ஏதோ ஒரு வார்த்தை அல்லது ஒரு நிகழ்வு என்பது வாழ்க்கையின் போக்கில் இயல்பாக நடக்கும் ஒன்று. அதில் உள்ளான அர்த்தம் ஒன்றையோ அல்லது அதற்குள் பழிவாங்கும் செயலை திணிப்பதோ நியாயமல்ல. மனிதர்களால் மற்றவர்களின் நோக்கங்களை அறிய முடியாது, அவர்களின் செயல்களை யூகிக்கவோ அல்லது ஓரளவு யோசிக்க மட்டுமே முடியும்.
சுய மதிப்பீடுகள்:
சுயமதிப்பீடு செய்வது நல்லது. ஆம், தன்னை அவர்களின் சூழ்நிலையில் வைத்து பார்த்தால் தான் அவர்களின் சூழ்நிலை புரியும். அதுமட்டுமல்ல தன்னிடம் இருக்கும் குறையை விட்டுவிட்டு அடுத்தவரின் குறையை பெரிதாக்குவது ஏன் என்பதை கர்த்தராகிய இயேசு இவ்வாறாக கூறினார்; "நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்" (லூக்கா 6:41-42).
சுய கண்டனத்திற்கு உரியவர்:
ஒரு நபர் மற்றவர்களை மதிப்பிடும் தரநிலைகளுடன், அந்நபர் தீர்மானிக்கப்படுவார். " உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்கு முன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்" (ரோமர் 14:22).
சந்தேகத்தின் பலன்:
நீதிமன்றங்களில், எந்த ஆதாரமும் இல்லாதபோது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு சந்தேகத்தின் பலனை நீதிபதிகள் வழங்குகிறார்கள். காரணம், ஒரு நிரபராதியை, தகுந்த ஆதாரம் இல்லாமல், தண்டிக்கக் கூடாது. நீதித்துறைக்கே அந்த எண்ணம் இருந்தால், ஒரு விசுவாசிக்கு எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும்?
நான் மக்களிடம் எப்படி நடந்து கொள்கிறேன்? கடுமையாகவா அல்லது கரிசனையுடனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்