ஒரு சுத்தியலுக்கும் சாவிக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான உரையாடல் இருந்தது. "நான் ஒரு பூட்டைத் திறக்க என் முழு பலத்தையும் பயன்படுத்துகிறேன்", என்பதாக சுத்தியல் கூறியது. அதற்கு சாவி, “நீங்கள் தலையில் மோதுகிறீர்கள்; ஆனால் பூட்டு திறக்க நான் இதயத்தை தொடுகிறேன்" என்று பதிலளித்தது. சுவாரஸ்யம் என்னவெனில், தேவன் தனது திட்டங்களையும் நோக்கங்களையும் அடைய இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்துகிறார்.
1) சுத்தியல்:
கர்த்தருடைய வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருப்பதாக எரேமியா கூறுகிறார் (எரேமியா 23:29). பிடிவாதமான மனமும், கல்லைப் போல் கடின இதயமும் உள்ளவர்களும் இருக்கிறார்கள். கலக மனமோ அல்லது கல்லான இதயமோ அதை உடைத்து நொறுங்குண்ட மனமாக மாற்ற தேவ வார்த்தை வல்லமை வாய்ந்தது. நிச்சயமாக, தேவனுடைய வார்த்தையை நிராகரிப்பது என்பது நிந்தையை வரவழைக்கும்.
2) பரிசுத்த ஆவி:
பரிசுத்த ஆவியானவர் ஒரு திறவுகோலாக செயல்படுகிறார். பரிசுத்த ஆவியானவர் மக்களின் மனதில் இருக்கும் பாவத்தன்மையை உணர்த்துகிறார், அவர்களுக்கு எவ்வளவாய் இரட்சகரான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவை என்பதையும் உணர வைக்குமளவு கிரியை செய்கிறார்.
3) கூட்டு பணி:
தேவனுடைய வார்த்தையும் தேவனுடைய ஆவியும் ஒன்றாக வேலை செய்வதை வேதாகமத்தில் தெளிவாகக் காணலாம். "இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்" (எபேசியர் 6:17) தேவ வார்த்தை ஆவியின் பட்டயம் என்று அழைக்கப்படுகிறது. வேதாகமம் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் எழுதப்பட்டாலும், இறுதி ஆசிரியர் பரிசுத்த ஆவியானவரே. தேவ வார்த்தை ஒரு நபரின் பாவங்களை சுட்டிக் காண்பிக்கின்றது, அதே நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவை என்ன என்பதையும் விசுவாசிக்க வைக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் சிறைபிடிக்க ஒவ்வொரு உயர்ந்த சிந்தனையையும் தேவ ஆவி கொண்டுவருகிறது மற்றும் தேவ வார்த்தை புதுப்பிக்கப்பட்ட மனதை வழங்குகிறது. கொர்னேலியுவின் வீட்டில் பேதுரு பேசியபோது, தேவ ஆவியானவர் கொர்னேலியுவின் மீதும் அவருடைய வீட்டார் மீதும் இறங்கினார் (அப்போஸ்தலர் 10:44-45). உலர்ந்த எலும்புகளுக்கு எசேக்கியேல் தேவ வார்த்தையைப் பேசியபோது, தேவனுடைய ஆவியானவர் எலும்புகளை ஒரு சேனையாக உருவாக்க உயிர் கொடுத்தார் (எசேக்கியேல் 37).
4) சத்தியமும் அன்பும்:
சத்தியத்தைப் பேசுமாறு பவுல் அறிவுறுத்துகிறார், "அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்" (எபேசியர் 4:15). ஏனென்றால், "பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது" (ரோமர் 5:5).
தேவ ஆவியின் உதவியால் நான் தேவனுடைய வார்த்தையைக் கையாளுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்