ஒரு கிறிஸ்தவ தலைவர் இரயில் பயணத்தின் போது ஒரு பிக்பாக்கெட் திருடனிடம் தனது பர்ஸை இழந்தார். ஆனால் தேவனுக்கு நன்றி கூறி ஜெபம் செய்தார். “ஆண்டவரே, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், ஏனென்றால் அது என்னுடைய பர்ஸ் அவ்வளவே, என் வாழ்க்கையல்லவே; இரண்டாவதாக, அதிலிருந்தது ஒரு சிறிய தொகை, பெரிய தொகையும் அல்ல, மூன்றாவதாக, நான் பாதிக்கப்பட்டவன் தான், ஆனால் குற்றவாளியல்ல. ஆம், ‘எல்லா சூழ்நிலைகளிலும் நன்றி செலுத்துங்கள்’ என்று வேதாகமம் நமக்குக் கற்பிக்கிறது. "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது" (1 தெசலோனிக்கேயர் 5:18). நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன.
1) நற்பண்பு:
‘நன்றி என்பது ஒரு மனப்பான்மை’. நன்றியுடன் இருப்பது என்பது உறவுகளுக்குள் இருக்க வேண்டிய மரியாதை அல்லது பணிவு மட்டுமல்ல, அது சரியான அணுகுமுறையாகவும் இருக்க வேண்டும். அது தானாக நடக்காது; அதை கவனமாக வளர்த்துக் கொள்ள வேண்டிய நல்லொழுக்கமாகும் அல்லது நற்பண்பாகும்.
2) பணிவு:
மக்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம், ஆனால் தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் அளவுக்கு தாழ்மையுடன் இல்லை. ஒரு கணவன் தன் மனைவியின் சமையல் உட்பட வாழ்வின் அபரிமிதமான ஆதரவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டியதில்லை என்று நினைத்துக் கொள்கிறான். அது அவளுடைய ‘கடமை’ அல்லது ‘பொறுப்பு’ என்று அவன் எண்ணுவதால்; அவன் ‘நன்றியுணர்வை’ வெளிப்படுத்தாமல் இருக்கின்றான்.
3) மதிப்பு:
மற்றவர்களை மதிப்பது என்பது நன்றியுணர்வுக்கும் ஒரு படி மேலானதாகும். அந்த நபர் நமக்காக என்ன செய்கிறார் அல்லது எவ்வளவாய் பங்களிக்கிறார் என்பதை காட்டிலும் மதிப்பளிக்க வேண்டியது என்பது மிக அவசியமானது. ஆம், "கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்" (ரோமர் 12:10).
4) நன்றியுணர்வு:
இறுதி நாட்களில் மக்கள் நன்றி கெட்டவர்களாக (நன்றியறியாதவர்களாய்) இருப்பார்கள் (2 தீமோத்தேயு 3:2). யோனத்தான் தனக்குக் காட்டிய உத்வேகம், உறுதிப்பாடு மற்றும் அன்புக்கு தாவீது நன்றியுள்ளவனாக இருந்தான். யோனத்தான் யுத்தத்தில் இறந்துவிட்டதால், தாவீது அவனின் மகன் மேவிபோசேத்தேக்கு நன்மை செய்வதில் அதாவது கைம்மாறு செலுத்துவதில் உறுதியோடு இருந்தான் (2 சாமுவேல் 9).
5) மறக்காதே:
தாவீது தனது உள்ளான நபரிடம் பேசுகிறான்; “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே" (சங்கீதம் 103:2). மனிதனின் இயல்பே நல்லவற்றை மறந்து விட்டு நடந்த தீமையையும் கெட்டதையுமே நினைத்துக் கொண்டிருப்பதாகும். ஆனால் தாவீது எல்லா நன்மைகளையும் நினைவில் வைத்துக் கொள்ளவும் நன்றியுடன் இருக்கவும் தன்னை தானே பயிற்றுவித்துக் கொள்கிறான்.
6) நல்லது செய், மறந்துவிடு:
"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்" (லூக்கா 6:35) என்பதாக ஆண்டவராகிய இயேசு தம் சீஷர்களுக்கு கற்பிக்கிறார். ஆம், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அல்லது நன்றியை எதிர்பார்க்காமல் நன்மை செய்யும் போது, நாம் தேவனுக்கு நம் நன்றியுணர்வைக் காட்டுகிறோம்.
7) ஆராதனை:
ஆராதனையின் அடித்தளமே நன்றியுணர்வுதான்.
நன்றி செலுத்துவது என்பது என் வாழ்க்கை முறையா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்