நல்ல நண்பர்கள் ஆனால் அலட்டுண்டாக்குகிற ஆறுதல்காரர்கள்

யோபு மிகுந்த துன்பங்களை அனுபவித்தான், இது அசாதாரணமானது மற்றும் புரிந்து கொள்ள புதிரானது. யோபுக்கு சில நல்ல நண்பர்கள் கிடைத்திருப்பது அருமையானதே; யோபின் நண்பர்களான எலிப்பாசு, பில்தாத் மற்றும் சோப்பார் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தனர் (யோபு 2:11-13). இருந்தபோதிலும், அவர்கள் ஒன்றாக இணைந்து வந்து யோபுவைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் அமைந்தது. அவர்கள் தொலைவில் இருந்து கண்ட போது, ​​யோபை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.  கொப்புளங்கள் அவன் முகத்தை சிதைத்துவிட்டன. யோபுவும் ஒரு ஓட்டை எடுத்து தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான். எலிகூவும் மற்றொரு நண்பர் எனலாம். இவர்களிடமிருந்து பின்பற்றக்கூடிய சில நல்ல குணங்கள் உண்டு, அதை எடுத்துக் கொள்வோம்; மற்றவற்றை விட்டு விடுவோம்.

1) உடனிருத்தல்:
அவன் துன்பத்தில் இருக்கும்போது அவனோடு கூட இருக்க வந்தார்கள்.  அவர்கள் யோபுவுடன் இருக்க தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவிட வேண்டியிருந்தது என்பது உண்மையில் தியாகமானதே.

2) இரங்கல்:
அவர்கள் அவனுடன் துக்கம் அனுசரித்தனர்.  துக்கப்படுபவர்களுடன் துக்கம் அனுசரிப்பது என்பது கிறிஸ்தவ பண்பு (ரோமர் 12:15).

3) ஊக்கமளித்தல்:
அவனை தேற்றவும், ஆற்றவும், ஆறுதல்படுத்தவும் அவர்கள் ஒரு நோக்கத்துடன் வந்தனர்

4) அடையாளம் காணுதல்:
அவர்களும் அவனுடன் கூட தரையில் அமர்ந்தனர்.  எனவே, அவர்கள் அவனது வேதனையையும் துயரத்தையும் அடையாளம் கண்டனர்.

5) அமைதி காத்தல்:
ஏழு நாட்கள் இரவும் பகலும் மௌனம் காத்தார்கள்.  இறந்தவர்களுக்கு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவது வழக்கம் (ஆதியாகமம் 50:10; 1 சாமுவேல் 31:13). யோபின் இறந்த மகன்கள் மற்றும் மகள்களுக்காக துக்கம் அனுசரிப்பது பொருத்தமானது.

இருப்பினும், அவர்கள் பேச ஆரம்பித்தபோது, ​​அவர்கள் துயர்மிகு நண்பர்களாக மாறினர்.  அவர்களின் பிரசன்னம் நன்றாக இருந்தது, ஆனால் அவர்களின் எண்ணங்கள், காரணங்கள் மற்றும் வார்த்தைகள் யோபுக்கு பயனுள்ளதாக இல்லை.

1) சாம்பல் பழமொழிகள்:
அவர்கள் பேசிய தத்துவங்களும், கொள்கைகளும், நடவடிக்கைகளும் சாம்பல் பழமொழிகள் போலவே இருந்தன (யோபு 13:12). 

2) சேற்றுக் குவியல்கள்:
யோபு பாவம் செய்தான் என்ற அவர்களின் வாதம் சேற்றுக் குவியல்களுக்குச் சமானம் (யோபு 13:12). ஆதாரம் இல்லாத நியாயமற்ற தர்க்கம் நீதிமன்றத்திலும் வாதிடத் தகுதியற்றது.

3) காரியத்துக்கு உதவாத வைத்தியர்கள்:
அறிகுறிகளைச் சரியாகக் கவனிக்காத, சரியான நோயறிதலை கண்டறியாத, பின்பு முட்டாள்தனமாக சம்பந்தம் இல்லாத மருந்து எழுதிக்கொடுக்கும் மருத்துவர்களைப் போல யோபின் நண்பர்களும் பிரயோஜனமற்றவர்கள், காரியத்துக்கு உதவாதவர்கள் (யோபு 13:4). 

4) துயர்மிகு ஆறுதல்காரர்கள்:
ஆலோசகர்களாக அல்லது ஆறுதல் அளிப்பவர்களாக அவர்களால் யோபின் இதயத்தையோ உணர்வுகளையோ தொட முடியவில்லை.  அவர்கள் அறிவுசார் உடற்பயிற்சியாளர்கள் போல் வெளித் தோற்றத்தில் மாத்திரம் சிறந்து விளங்கினர், ஆனால் யோபை  ஆறுதல் படுத்த முடியவில்லை, இதனாலேயே அவர்கள் அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்கள் ஆனார்கள் (யோபு 16:2). 

 நான் ஒரு அலட்டுண்டாக்குகிற நண்பனா அல்லது ஆறுதலளிக்கும் நண்பனா? சிந்திப்போமா. 

Author: Rev. Dr. J. N. Manokara



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download