"வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்"
தனது அழுக்கடைந்த ஆடைகளினாலும் தனது கறுப்பு நிறத்தாலும் தன்னை வெறுத்து நோக்கும்போது மணவாளன் அவளை அணுகி இவ்வாறு பாடுகிறார். இந்த வசனத்தில் "நான்" என்ற பதத்திற்குப் பதிலாக "நாம்" என்ற பதத்தை பரிசுத்தாவியானவர் உபயோகப்படுத்துகிறார். இது திரியேக தேவனை வெளிப்படுத்துகிறது. இந்த மூவரும் இணைந்து ஒருவராக செயல்பட்டு மணவாட்டிக்கு பொன் ஆபரணங்களை உண்டுபண்ணுகிறார்கள். பொன் என்பது நமது சோதிக்கப்படும் விசுவாசம். "அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும் (1 பேதுரு 1:7).
நீங்கள் பிதாவாகிய தேவனை கிறிஸ்துவின் மூலம் செய்த ஜெபங்களுக்கு பரத்திலிருந்து பதில் வராமலிருக்கும். ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். ஆனால் நீங்கள் தேவனை விசுவாசித்து அவரின் புரிந்து கொள்ளமுடியாத ஞானத்தை, கண்மூடி நம்பி, அவரிடம் ஒட்டிக்கொள்ளும்போது, உங்களது விசுவாசம் பொன்னாகுகிறது. "கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது" (சங்கீதம் 12:6). உங்களது சொந்த அனுபவத்தால் பிதாவின் வாக்குத்தத்தங்கள் புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது. அவரது வாக்குத்தத்தங்களை நீங்கள் அவருக்குக் காத்திருந்து பொறுமையோடு சுதந்தரித்துக் கொள்ளும்போது பிதாவின் வார்த்தைகள் வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது. கிறிஸ்து தனது இரத்தம் சிந்தி வெளிப்படுத்தின அன்பினால் அந்த வாக்குத்தத்தங்களை பரிசுத்தாவியானவர் மூலம் நிறைவேற்றுவார். பிதாவின் மூலம் ஆரம்பித்த விசுவாசத்தை கிறிஸ்து பரிசுத்தாவியானவர் மூலம் முடிக்கிறார்.
கிறிஸ்து தனது அன்பினால் முதல் நாளன்றே உங்களுக்கு பதில் அனுப்பியிருப்பார். ஆனால் பரிசுத்தாவியானவர் உங்களது விசுவாசத்தை அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதித்து புடமிடுகிறார், இந்த புடமிடுதலுக்குப்பின் தான் கிறிஸ்து தன் மகிமையை வெளிப்படுத்துகிறார். இது கடைசி கட்டத்தில்தான். கானான் ஊரில் தனது மகிமையை கடைசியில் தான் வெளிப்படுத்தி அந்த கல்யாணவீட்டில் புகழ்ச்சியையும் கனத்தையும் கொண்டுவந்தார்.
இந்த பொன் ஆபரணங்கள் உங்களுக்கு இந்த உலகில் ஆசீர்வாதங்களை மாத்திரம் கொண்டுவராமல் உங்களை நித்தியத்தில் அலங்கரிக்கும்.