ஒரு நபர் தொற்றுநோய்களின் போது ஆபரணமாக அணிய தங்கத்தில் ஒரு முககவசத்தை வடிவமைத்துள்ளார். வாய் மற்றும் மூக்கை உள்ளடக்கிய முககவசத்தில் சிறிதான துளைகள் உள்ளன, இதனால் அதை அணிந்தவர் மூச்சு விடவும் பேசவும் முடியும். தங்க முககவசம் கொரோனா வைரஸிலிருந்து தன்னைப் பாதுகாக்க முடியுமா என்று தனக்குத் தெரியவில்லை என்ற தன் ஆச்சரியத்தையும் ஒப்புக்கொண்டார். மக்கள் இதை ‘பைத்தியக்காரத்தனம்,’ ‘வேடிக்கையானது,’ ‘அபத்தமானது,’ ‘முட்டாள்தனம்,’ ‘பெருமிதம்’ என்றெல்லாம் அழைத்தனர். தங்க முககவசம் நம்பிக்கைக்கு உரியதல்ல என தன் சொந்த கருத்தை தெரிவித்த பின்பும் , அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் ஆசைப்பட்டுக் கேட்டால் அவர்களுக்கும் ஒன்றை உருவாக்குவேன் என்று கூறினார்.
வஞ்சகமுள்ள வில் அல்லது முறுக்கப்பட்ட வில் ஆபத்தானது (சங்கீதம் 78:57). இது குறி வைத்த இலக்கைத் தாக்காது. சில நேரங்களில், எதிரியின் பக்கம் தாக்குவதற்குப் பதிலாக எய்தவர் பக்கமே யாரையாவது தாக்கக்கூடும். இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது தனக்குதானே அழிவை ஏற்படுத்தும். ஆக கொரோனா வைரஸிலிருந்து இது பாதுகாக்க உதவாமல் ஆபத்தில்தான் முடியும்.
“சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள், நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். அவர்கள் முறிந்து விழுந்தார்கள், நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்"
(சங்கீதம் 20:7,8). தங்கத்தின் தோற்றமானது ஏழைகளையும், ஒதுக்கப்பட்டுள்ளோரையும், அரசாங்கத்திடமிருந்து எவ்வித சலுகையும் பெறாதவர்களையும் தூரமாக நிறுத்தியுள்ளதுபோல இந்த வைரஸும் மிரளும் என இந்த தங்க கவசம் அணியும் நபர் நினைத்திருக்கலாம். ஆயினும்கூட, விசுவாசிகள் கர்த்தருடைய நாமத்தை விசுவாசிக்கிறார்கள். தாவீது கோலியாத்தை எதிர்கொண்டது அதிநவீன போர் ஆயுதங்களால் அல்ல, மாறாக ‘கர்த்தருடைய நாமத்தைக் கொண்டே' வெற்றிச் சிறந்தான் (1சாமுவேல் 17:45).
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்: நீதிமான் அதற்குள் ஓடிச்சுகமாயிருப்பான் (நீதிமொழிகள் 18:10). நம் வாழ்க்கை தேவனுடைய கரத்தில் உள்ளது. அவரது கால நேர அட்டவணையை மாற்ற முடியாது. இந்த பூமியில் தேவன் நமக்கு நியமித்திருக்கும் காலம் வரை நாம் உயிருடன் தான் இருப்போம். அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி முட்டாள்தனமாக உதாசீனமாகவோ அல்லது அலட்சியமாகவோ இருக்க வேண்டும் என்றல்ல. பாதுகாப்பிற்காக எளிய வடிவிலான முக கவசம் அவசியம் மேலும் கட்டாயம் பயன்படுத்தப்படவும் வேண்டும். ஆனால் இந்த வகையான தொற்றுநோய் நம்மை தேவனிடம் நெருங்கிச் செல்லவும், அவரையும் அவருடைய சித்தத்தையும் நன்கு அறிந்துகொள்ளவும், அவருடைய மகிமைக்காக வாழவும், மரணத்திற்காகவோ அல்லது அவருடைய வருகைக்காகவோ நம்மை தயார்படுத்துகிறது.
நான் கர்த்தருடைய நாமத்தை நம்புகிறேனா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்