இன்றைய உலகில், மக்கள் தங்களுக்கு எது நல்லது என்று நினைக்கிறார்களோ அதையே செய்ய விரும்புகிறார்கள். மேலும், தங்களுக்கு எது நல்லது அல்லது எது சரியானது என்று நினைக்கிறார்களோ அனைவருக்கும் அதுவே நல்லது என்று அவர்கள் நம்புகிறார்கள், ஆனால் அது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவர்கள் நினைப்பதைச் செய்வதற்கு, அரசாங்க அதிகாரிகளிடமிருந்தோ அல்லது வேறு எந்த அதிகாரிகளிடமிருந்தோ கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரமாணத்தை உருவாக்கிய மோசே இந்த சமீபத்திய போக்கைப் பற்றி எச்சரித்தார்; “இன்று இங்கே நாம் ஒவ்வொருவரும் நமது விருப்பப்படி நமக்குச் சரியெனப்பட்டதைச் செய்ததுபோல், அங்கே நீங்கள் செய்யக்கூடாது. உங்கள் தேவன் உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கிற இளைப்பாறும் இடத்திற்கும், உரிமைச்சொத்திற்கும் நீங்கள் போய்ச் சேரும்போது அப்படிச் செய்யக்கூடாது” (உபாகமம் 12:8-9).
ஆயத்தம்:
எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்கள், பணி அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்தனர். அவர்கள் சுதந்திரத்தை கையாளும் திறன் இல்லாததால் நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தார்கள். வாக்களிக்கப்பட்ட தேசத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளும்போது பொறுப்புள்ள குடிமக்களாக ஆவதற்கு இந்த வருடங்கள் மக்களை ஆயத்தப்படுத்துவதாக இருந்தது. அதற்காக, தேவன் விரிவான தார்மீக, சடங்கு, வழிபாடு மற்றும் சுகாதார சட்டங்களை வழங்கினார். பிரமாணங்கள் அவர்களை ஆளுமேயன்றி, அவர்களின் அற்ப ஆசைகள், காமம், விருப்பங்கள் மற்றும் சொந்த தெரிவுகள் அல்ல.
கண்ணியம்:
தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் முரட்டுத்தனமாகவோ அல்லது கலகக்காரர்களாகவோ அல்லது வன்முறை கும்பலாகவோ இருக்க முடியாது. அவர்கள் சமூக வாழ்க்கை, ஆவிக்குரிய வாழ்க்கை மற்றும் அரசியல் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டனர் மற்றும் வாக்களிக்கப்பட்ட தேசத்தை சொந்தமாக்குவதற்கு சேனைகளை தயார்படுத்தினர். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஒரு தேசம், மேலும் பிரமாணத்தால் நிர்வகிக்கப்பட்டு, புதிய தேசத்தின் பொறுப்புள்ள குடிமக்களாக ஆனார்கள். பிரமாணம் புறக்கணிக்கப்பட்டால், அவர்கள் ஒரு தேசமாக அழிந்துவிடுவார்கள்.
அடையாளம்:
தேவன் அவர்களுக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்தார். அதாவது அவர்கள் தேவனின் சொந்த சம்பத்தாக இருப்பார்கள் (யாத்திராகமம் 19:5). அவர்கள் உலகத்திலுள்ள எல்லா தேசங்களுக்கும் முதற்பேறானவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் (யாத்திராகமம் 4:22). தேவனுடைய பிள்ளைகள் தேவன் தங்களுக்கு வழங்கிய அந்தஸ்தைத் தொடர வேண்டும்.
உலகளாவிய மாதிரி:
மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய பத்துக் கட்டளைகளை தேவன் அவர்களுக்குக் கொடுத்துள்ளார். அவர்களின் ஒழுக்கம் மற்ற எல்லா நாடுகளையும் விட உயர்ந்ததாக இருக்க வேண்டும். அப்போது அனைத்து நாடுகளுக்கும் முன்மாதிரியாக திகழும்.
நான் என் பார்வைக்கு சரியானதைச் செய்கிறேனா அல்லது தேவ பார்வைக்கு சரியானதைச் செய்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்