கனடிய ஊடகக் கோட்பாட்டாளர் மார்ஷல் மெக்லுஹான் என்பவர்; 'ஒரு செய்தியை எதன் மூலம்' சொல்கிறோம் என்பதே முக்கியம் என்கிறார். அதில் உள்ளடக்கம் மற்றும் தன்மையைக் குறிக்க அவர் 'செய்தி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இருப்பினும், வேதாகமம் "பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்" (எபிரெயர் 1:1-2) என அறிவிக்கிறது. தேவனுடைய குமாரன் தாமே செய்தி, தூதுவர், நடுத்தரவர் மற்றும் மத்தியஸ்தராக இருக்கிறார்.
1) செய்தி:
கர்த்தராகிய இயேசு தான் உலகிற்கு தேவனிடமிருந்து வந்த அறுதிஇறுதி செய்தி. "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16). இந்த செய்தியில் அன்பின் அடித்தளம் உள்ளது, அது விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறது. தேவ அன்பை நிராகரிப்பவர்கள் அழிந்து போவார்கள் என்பது பரிசுத்தமான செய்தியும் கூட.
2) தூதர்:
பொல்லாத குத்தகைதாரர்களின் உவமையை ஆண்டவர் கற்பித்தார். குத்தகைதாரர்கள் வாடகை செலுத்தவோ அல்லது பயிரினை உரிமையாளருடன் பகிர்ந்து கொள்ளவோ மறுத்துவிட்டனர், இதனால் அவரது அதிகாரம் புறக்கணிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. அவருடைய வேலையாட்கள் அவமதிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். எனவே, எஜமானர் தனது மகனை அனுப்புகிறார், ஒருவேளை அவர்கள் மகனை மதித்து பதிலளிக்கலாம் என்ற நம்பிக்கையுடன். இருப்பினும், குத்தகைதாரர்கள் விவாதித்து, பொல்லாததைத் தீர்மானித்து, சதி செய்து, அவரைக் கொன்றனர் (லூக்கா 20:14). இது போலவே பல தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அனுப்பப்பட்டார்கள், ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை. கடைசியாக, தேவனுடைய குமாரன் அனுப்பப்பட்டார், அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள்.
3) நடுத்தரவர்:
கர்த்தராகிய இயேசுவே தேவனின் உள்ளடக்கம் மற்றும் தன்மையை வெளிப்படுத்தும் ஊடகம். தேவனின் நித்திய குணங்கள் கர்த்தராகிய இயேசுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அன்பு, பரிசுத்தம், கிருபை, இரக்கம், வல்லமை, மன்னிப்பு, பொறுமை, தியாகம் போன்ற அனைத்தும் அவர் மூலம் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டன.
4) மத்தியஸ்தர்:
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே (1 தீமோத்தேயு 2:5). கர்த்தராகிய இயேசு தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருக்கிறார். அவர் தேவனை மனிதர்களுக்கும், மனிதர்களை தேவனுக்கும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் (1 தீமோத்தேயு 2:5). மத்தியஸ்தராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் உலகத்தைத் தம்முடன் ஒப்புரவாக்கினார் (2 கொரிந்தியர் 5:18-21).
கிறிஸ்து மனிதகுலத்திற்கு தேவனின் அறுதிஇறுதி தொடர்பு.
நான் கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்