கிளிஃபோர்ட் குமார் ஒரு மருத்துவ நிபுணர். ஒருநாள் அவருக்கு தொண்டை பகுதியில் ஒரு அசௌகரியம் ஏற்படவே, புகழ்பெற்ற மருத்துவ நிறுவனத்தில் சென்று பரிசோதித்தார். அப்போது தான் அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. மேலும் மருத்துவர்கள் இனி அவரால் பேச முடியாது என்று கூறினர். நல்ல சிறந்த மருத்துவர்கள் கூட நம்பிக்கை கொடுக்க முடியாத நிலை காணப்பட்டது. இப்படி இருக்கும் சமயத்தில் ஒருநாள் அவர் தன் வாழ்வை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அர்ப்பணித்து ஜெபித்தார். மிக விரைவில் அற்புதமாக குணமடைந்தார். ஆம், அது தேவ வல்லமையின் வெளிப்பாடாக இருந்தது. கிளிஃபோர்ட் குமார் அவர்களால் பேசக்கூட முடியாது என்று மருத்துவர்கள் சான்றளித்தனர், ஆனால் தேவனோ அவரைப் பிரசங்கிக்கவும், கற்பிக்கவும், பாடவும் உபயோகித்தார். தேவன் அவருக்கு சுகத்தையும், வல்லமையையும், ஞானத்தையும் மற்றும் பாடுவதற்கும் கிருபை அளித்தார். அவர் பல பாடல்களை எழுதினார், பாடினார், அதுமட்டுமல்ல உலகின் பல நாடுகளில் நற்செய்தியைப் பிரசங்கித்தார்.
இறையாண்மை தேவன்:
தேவன் இறையாண்மையுள்ள ஆட்சியாளர், அவருடைய பரிசோதனைக்கு முன்பாக மருத்துவ பரிசோதனையெல்லாம் எம்மாத்திரம்! சிருஷ்டிகர் மற்றும் ஆட்சியாளர் என்ற முறையில், அவர் உலகில் உள்ள எந்த உறுப்புகளையும் தனது மகிமை மற்றும் நோக்கத்திற்காக பயன்படுத்த முடியுமே. ஆம், தீங்காகவும் சாபமாகவும் இருக்கும் புற்றுநோயை கொண்டு தேவன் பயன்படுத்த முடியும்.
தீமையிலிருந்து நன்மை:
நல்லதை வெளிக்கொணர தேவன் உலகில் எதையும் மீண்டும் உருவாக்க முடியும். குறிப்பாக, "அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" (ரோமர் 8:28). டாக்டர் கிளிஃபோர்ட் குமாரின் புற்று நோய் தீயதாக இருந்தது, ஆனால் பேச முடியாத ஒருவரை அவருக்காகப் பாடும்படி தேவன் அவரைக் குணப்படுத்தினார்.
தேவ நோக்கம்:
எல்லா விசுவாசிகளுக்கும், பூமியில் அவர்களின் வாழ்க்கையைக் குறித்து தேவன் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார். அந்த நோக்கத்தைக் கண்டுபிடித்து நாம் நடந்து கொள்ளும்போது வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகிறது. தேவனின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத ஒரு நபரின் வாழ்க்கை சுவாரஸ்யம் அற்றது மற்றும் அர்த்தமற்றது. டாக்டர் கிளிஃபோர்ட் குமாருக்கான தேவ நோக்கம், அவரது மருத்துவத் தொழிலின் மூலம் தேவனை மகிமைப்படுத்துவது மற்றும் அவரது பிரசங்கம், கற்பித்தல் மற்றும் பாடுவதன் மூலம் நற்செய்தியை அறிவிப்பதாகும். பின்னர், அவர் ஒரு முழு நேர சுவிசேஷகராக ஆனார், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஊழியம் செய்தார், ஜூன் 7ம் தேதி, 2022 அன்று அவருக்கு 91 வயது முடிந்த நிலையில் அவர் மரித்தார்.
முடியாதென்று எதுவும் கிடையாது:
"தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை" (லூக்கா 1:37). மாற்ற முடியாத, செத்துபோன, பாழடைந்த, முடிக்கப்பட்ட அல்லது சாத்தியமில்லாத சூழ்நிலைகள் கூட அவருடைய மகிமைக்காகவும் நோக்கத்திற்காகவும் மாற்றப்படலாம். தேவனிடம் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் அவருடைய மகிமையையும், வல்லமையையும், நோக்கத்தையும் இந்த வாழ்விலும், நித்தியத்திலும் நிச்சயமாக காண முடியும்.
எல்லா சூழ்நிலைகளிலும் தேவ நோக்கத்தை நான் காண்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்