தேவன் எலிசாவை அற்புதமான விதத்தில் பயன்படுத்தினார். அவருடைய கட்டளையின் பேரில், நாகமான் யோர்தான் நதியில் ஏழு முறை மூழ்கி, தொழுநோயில் இருந்து குணமானான்.
பெரும்பாலான கலாச்சாரங்கள் மற்றும் மதங்களில், பிராத்தனை (ஜெபம்) என்பது ஒரு கொள்முதல் செய்வது போன்றது, அதாவது பேரம் பேசப்படுகிறது. ஆசீர்வாதத்திற்கு காத்திருக்கும் நபர் அது கிடைத்தவுடன் அதற்கு கைம்மாறாக பதில் செலுத்துவதாக உறுதியளிக்கிறார். உதாரணமாக, ஒரு இளைஞன் தனது நேர்காணலில் வெற்றிபெறவும் வேலை கிடைக்கும் பட்சத்தில் ரூ.500 நன்றி காணிக்கையாக செலுத்துவதாகவும் வேண்டுதல் செய்யலாம். இதே மாதிரி செயலுக்கு மற்றொரு நபர் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கைம்மாறு செய்ய நிர்ணயிக்கலாம். ஆக, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் சேவையைப் பொறுத்து விலை நிர்ணயிக்கலாம்.
வேண்டுதல்கள் மற்றும் ஜெபங்களை விற்பனையாளர்-வாடிக்கையாளர் பரிவர்த்தனையாகக் கருதும் கலாச்சாரத்திலிருந்து வந்த நாகமான்; எலிசாவின் அற்புதத்திற்கு ஏதேனும் கொடுக்க விரும்புகிறான். எலிசா தீர்க்கதரிசியோ எதையும் பெற மறுக்கிறார். ஜெபங்கள், தேவனின் அற்புதங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கான பதில்கள் விற்பனை மற்றும் தள்ளுபடியுடன் கூடியதல்ல; யெகோவா தேவன் தம்முடைய கிருபையால் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார், எனவே, நாம் பெறுவது எல்லாம் விலை அடையாளமற்ற வரங்கள் என்றே சொல்ல வேண்டும். தேவன் ஒரு பரிவர்த்தனையை விட உறவை அல்லவா விரும்புகிறார்.
எலிசாவின் வேலைக்காரனான கேயாசியோ இதை வித்தியாசமாக பார்த்தான், இது என்ன இந்த எலிசா இவ்வளவு எளிமையானவராகவும், ஆடம்பரம் அற்றவராகவும், சலுகை காட்டுபவராகவும் இருக்கிறாரே; தானாக வலையில் வந்து சிக்கும் பெரிய மீனை விட்டு விடுகிறாரே; பரிசு பொருட்களைப் பெற்று ஆடம்பரமான நிறைவான வாழ்க்கையை வாழலாமே; நல்வாய்ப்பை இழக்கிறாரே என நினைத்தான். கேயாசி நாகமான் குழுவின் பின்னால் ஓடி பரிசுகளைப் பெறுகிறான். அந்த பரிசுகளைப் பெறுவதன் மூலம், கேயாசி அற்புதமான குணப்படுத்துதலின் வரத்திற்கு விலையை நிர்ணயித்தான். "ஆனால் எலிசா அவனை நோக்கி: "அந்த மனுஷன் உனக்கு எதிர் கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா? ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமூகத்தை விட்டுப் புறப்பட்டுப் போனான்" (2 இராஜாக்கள் 5:26-27).
எப்போது ஜெபம் ஒரு பரிவர்த்தனையாக பார்க்கப்படுகிறதோ அது உறவு அல்ல; பரிவர்த்தனை செய்கின்ற பண்டம், கிருபையின் வரம் அல்ல; வணிகமயமாக்கல் தவிர்க்க முடியாதது. எனவே, பல 'மத்தியஸ்தர்கள்’ தங்களை 'தேவ மனிதர்கள்’ என்று சித்தரிப்பதை நாம் காண்கிறோம். எலிசா ஒரு 'தேவ மனிதன்', கேயாசி ஒரு 'இடைத்தரகன்'.
நான் தேவ மனிதனா? சிந்திப்போமா
Author: Rev. Dr. J. N. Manokaran