தேவன் தான் குணமாக்குவதில் அறுதிஇறுதியானவர், அவர் ஆகாரத்தாலும் தண்ணீராலும் ஆசீர்வதிப்பதாகவும், நோய்களைக் குணப்படுத்துவதாகவும் உறுதியளித்தார் (யாத்திராகமம் 23:25). உணவே நல் மருந்து என்பது நாம் அறிந்ததே. சிருஷ்டிகரான தேவன், நோயுற்ற அல்லது சேதமடைந்த உடலின் பாகங்களை சரிசெய்ய அல்லது மாற்ற முடியும். எனினும், குணப்படுத்துவதற்காக தேவன் தனக்கான முறைமையையும் கால நேரத்தையும் வைத்திருக்கிறார். சில உடனடி தேவை, மற்றவை ஒரு செயல்முறை, சிலது எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டவை.
தெய்வீக சுகம்:
இந்த சிகிச்சையானது அதிசயமானது, உடனடியானது மற்றும் புரிந்துகொள்ள முடியாதது. முப்பத்தெட்டு ஆண்டுகளாக முடங்கிப்போயிருந்த ஒரு மனிதன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் உடனடியாகக் குணமானான் மேலும், பத்து தொழுநோயாளிகளும் உடனடியாக குணமடைந்தனர் . கர்த்தர் தம்முடைய வார்த்தையை அனுப்பி நூற்றுக்கு அதிபதியின் ஊழியக்காரனைக் குணமாக்கினார் . அதுமாத்திரமல்ல, எருசலேம் ஆலயத்தின் அழகிய மண்டபத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒரு முடக்குவாதமுற்ற மனிதனை சீஷர்களான யோவானும் பேதுருவும் உடனடியாகக் குணமாக்கினார்கள் (அப்போஸ்தலர் 3). இப்படி தேவ பிள்ளைகளின் அனுபவங்களிலிருந்து ஏராளமான வேதாகம எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
மருத்துவ குணம்:
தேவன் சில சமயங்களில் மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை குணப்படுத்துதலைத் தேர்ந்தெடுக்கிறார். எசேக்கியாவைக் குணப்படுத்துவதாக தேவன் வாக்குறுதி அளித்தார், ஆனால் அவர் குணமடைய அவரது புண்கள் மீது அத்திப்பழங்களைப் பிசைந்து அதன் சாற்றைத் தடவ வேண்டியிருந்தது (2 ராஜாக்கள் 20:7-11). இயேசு, புழுதியில் துப்பினார். அதில் சேறு உண்டாக்கினார். அதனை அவனது கண்களின் மேல் பூசினார், சீலோவாம் குளத்தில் கழுவும்படி கட்டளையிட்டார் தீமோத்தேயுவின் வயிற்றுக் கோளாறுக்கு கொஞ்சம் திராட்சரசம் குடிக்கும்படி பவுல் அறிவுறுத்துகிறார் ஆம், திருச்சபைகள் எப்போதும் மருத்துவப் பணிகளில் ஈடுபாடாக தான் காணப்படுகிறது.
மீட்பு மற்றும் உயிர்த்தெழுதல்:
கர்த்தருக்குள் மரிக்கும் பரிசுத்தவான்கள் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் மற்றும் மாறுபட்ட மகிமையான சரீரத்தைப் பெறுவார்கள். அந்த உடம்பில் எந்தக் குறையும், கறையும், தொற்றும், வியாதியும், பலவீனமும், வியாதியும் இருக்காது. ஏனெனில் பரலோகத்தில் வலி, கண்ணீர், துன்பம் இல்லை (வெளிப்படுத்துதல் 21:4). பவுலுக்கும் இனி மாம்சத்தில் முள் இருக்காது. அதுமட்டுமா போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தை துள்ளிக் குதித்து ஓடும், படுத்த படுக்கையாக இருந்த ஏமி கார்மைக்கேலும் தேவனை மகிமைப்படுத்துவார்.
தேவ சித்தம்:
மனிதர்களுக்கு என்ன வகையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை தேவன் தான் தீர்மானிக்கிறார். தேவனை ஒரு குறிப்பிட்ட வழியில் அதாவது இப்படிதான் குணமாக்க வேண்டும் என்று யாரும் கோரவோ, வற்புறுத்தவோ முடியாது.
தேவன் தேர்ந்தெடுத்த முறையில், நான் நன்றியுடன் குணமடைகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்