டாக்டர் ஜே. கிறிஸ்டி வில்சன் மற்றும் அவரது மனைவி பெட்டி என குடும்பமாக ஆப்கானிஸ்தானில் 22 ஆண்டுகள் பணியாற்றினர். அநேகர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவரைப் பின்பற்றுபவர்கள் ஆனார்கள். அதில் இஸ்லாமிய மதத்திலிருந்து இயேசுவை ஏற்றுக் கொண்ட பவுலும் ஒருவர்; அவர் வேதாகமத்தை டாரி மொழியில் மொழிபெயர்த்தார். அவர்களுக்கு சபை கட்ட அனுமதியும் கிடைத்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்டி வில்சனும் பெட்டியும் மூன்று நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டனர். சபையை இடிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மன்னர் முகமது ஜாஹிர் ஷாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஜெர்மனியில் படித்த காபூலின் மேயரை, ஹான்ஸ் மோர் என்ற கிறிஸ்தவ ஜெர்மன் தொழிலதிபர் அணுகினார். அவர் மேயரிடம் "தேவ சபையை (ஜெப வீட்டை) அரசாங்கம் தொட்டால், தேவன் அரசாங்கத்தை கவிழ்ப்பார்" என்று எச்சரித்தார்.
சபை இடிக்கப்பட்டது:
மிஷனரிகள் வெளியேறிய பிறகு, திருச்சபையை இடிக்க வீரர்கள், போலீசார் மற்றும் புல்டோசர் என ஆஜரானர்கள். சபையோ அவர்களை தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளுடன் வரவேற்றது. ஜூலை 17, 1973 அன்று, அவர்கள் சபையை இடித்தனர், இன்னும் ஆழமாக அஸ்திவாரத்திற்கு கீழே பன்னிரண்டு அடி தோண்டினர். நிலத்தடியில் சபை கட்டப்பட்டு இருப்பதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது, எனவே அடித்தளத்தின் கீழ் அதைத் தேடியது.
சதி:
அன்றிரவே மன்னர் முகமது ஜாஹிர் ஷா ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது, அவர் பதவி கவிழ்க்கப்பட்டு, அவரது மைத்துனர் ஆட்சியைப் பிடித்தார். அவரது மன்னராட்சி மட்டுமல்ல, 225 ஆண்டுகால வம்ச ஆட்சி, காலங்காலமாக இருந்த ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்போதிருந்து, ஆப்கானிஸ்தானில் ஐந்து தசாப்தங்களுக்கும் (50 ஆண்டுகள்) மேலாக ஒரு நிலையான அரசாங்கம் அல்லது அமைதி அல்லது செழிப்பு என நாட்டில் இல்லை.
பொது மக்களின் கருத்து:
கிறிஸ்டி வில்சன் இவ்வாறாக பிரதிபலிக்கிறார்: "நிகழ்வுகளில் சகுனங்களை விரைவாகக் காணும் ஆப்கானியர்கள், இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து இறங்கி வந்து அரசாங்கத்தை கவிழ்த்தார், ஏனெனில் அது அவருடைய தேவாலயத்தை கவிழ்த்ததாக பொது மக்கள் கூறுகிறார்கள்".
மகிமையின் தேவன்:
"கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள். பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்" (சங்கீதம் 96:8-9). தேவன் கேலி செய்யப்படுவதில்லை. அவர் துன்மார்க்கரை, அவருக்கான நேரத்தில் தண்டிப்பார்; அது உடனடியாக இருக்கலாம் அல்லது தாமதமாகலாம்; ஆனால் தீர்ப்பு உண்டு.
கிறிஸ்து பாறை:
கிறிஸ்து முகட்டுக்கல் அல்லது மூலைக்கல்; ஆனால், "இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்" (மத்தேயு 21:44).
மகிமையும் மகத்துவமுமான தேவனை நான் வணங்குகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்