தேவன் எல்லாக் காலங்களிலும் நல்லவர்

ஒரு போதகர் தனது மனைவியின் இறுதிச் சடங்கில் பிரசங்கிப்பது என்பது கடினமான ஒன்று. இருந்தபோதிலும்,  தெய்வீக மற்றும் ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள நபர்களால் மட்டுமே அது சாத்தியம்.  ஜார்ஜ் முல்லர் அப்படிப்பட்ட நபர்களில் ஒருவர், 10024 அனாதைகளைக் கவனித்தார், 250000 வேதாகமங்களை விநியோகித்தார், 117 பள்ளிகளை நிறுவி, 120000 பேருக்கு கிறிஸ்தவக் கல்வியை அளித்தார், 42 நாடுகளில் தேவ வார்த்தையைப் பிரசங்கித்து ஆண்டவருக்கு நல்ல ஊழியங்களைச் செய்தார்.  அவரது மனைவி மேரி குரோவ்ஸ் மூட்டு வாத நோயினிமித்தமான ‌காய்ச்சலால் 1870 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி இறந்தார்.  

நாட்குறிப்பு பதிவு: 
தனது தினசரி நாட்குறிப்பு பதிவில் இவ்வாறாக எழுதியிருந்தார்; “39 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்களுக்கு முன்பு, தேவன் எனக்கு மிகவும் மதிப்புமிக்க, அழகான மற்றும் பரிசுத்தமான மனைவியைக் கொடுத்தார்.  அவள் எனக்கு தேவனளித்த பொக்கிஷம் மற்றும் மாபெரும் ஆசீர்வாதம்; அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.  இந்த ஆசீர்வாதம் இன்று வரை எனக்கு தொடர்ந்தது, இன்று மதியம், 4 மணியளவில், கர்த்தர் அவளைத் தம்மிடம் அழைத்துச் சென்றார்”. பின்பதாக  முல்லர் இறுதிச் சடங்குகளை நடத்தினார் மற்றும் "தேவனே நீர் நல்லவர், நீர் நல்லக் காரியங்களைச் செய்கிறீர்”   (சங்கீதம் 119:68) என்பதான வேத வாக்கியத்தின் அடிப்படையில் பிரசங்கித்தார். 

இறுதிச் சடங்கு செய்தி: 
தேவன் நல்லவர், எப்போதும் நல்லவர்.  

1) கர்த்தர் நல்லவர்,  அவளை என்னிடம் கொடுத்து நன்மை செய்தார். ஜனங்கள் தம் பெற்றோர்களிடமிருந்து வீட்டையும் செல்வத்தையும் பெறுகிறார்கள். ஆனால் ஒரு நல்ல மனைவி கர்த்தரிடமிருந்து கிடைக்கும் வெகுமதி ஆகும் (நீதிமொழிகள் 19:14). அவள் தனக்கு உகந்த துணையாக இருப்பாள் என்று தேவன் அறிந்திருந்தார்.  ஜார்ஜ் முல்லர் தனக்கு ஒரு வாழ்க்கைத் துணை கிடைத்ததற்கும், உதவியாளராக அவரின் மனைவி அமைந்ததற்கும் மற்றும் மகத்தான ஊழியத்தில் சக ஊழியராக கிடைத்ததற்கும் தேவனிடம் நன்றியுள்ளவராக இருந்தார்.  

2) கர்த்தர் நல்லவர், நல்லது செய்தார், இவ்வளவு காலமாக அவளை என்னிடம் விட்டதற்காக நன்றி தெரிவித்தார்.  ஜார்ஜ் முல்லர் ஒரு குடும்பமாக ஒன்றாக இருக்கவும், ஊழியத்தில் ஈடுபடவும் தேவன் தனக்குக் கொடுத்த ஆண்டுகளை நினைவு கூர்ந்தார்.   அவர்கள் நான்கு தசாப்தங்களாக ஒன்றாக பயணித்து தேவனால் பயன்படுத்தப்பட்டனர்;  அவர் அவளை நன்கு போஷித்து காப்பாற்றினார்.  

3) கர்த்தர் நல்லவர்; அவளை என்னிடமிருந்து எடுத்துக்கொண்டார்; ஆம்; கர்த்தரின் வேளையை புரிந்துக் கொள்கிறேன் என்றார்.   மேரி குரோவ்ஸுக்கு தேவன் வழங்கிய வாழ்நாள் முடிவுக்கு வருவதை அவர் உணர்ந்தார்.   தேவனின் அன்பையும் கொடுத்த காலங்களையும் விசுவாசித்தவராய் நன்றி கூறினார், ஆகையால் அவளை நித்திய வீட்டிற்கு முன்னே செல்ல அனுமதிக்க அவர் தயாராக இருந்தார். இன்னும்  சொல்லப்போனால் தேவன் நல்லவராகவே இருந்தார்; மேரிக்கு மேலும் உடல் ரீதியான துன்பங்களையும், ஜார்ஜ் முல்லருக்கு ஏற்படும் மன வேதனையையும் தடுத்தார்.  

தேவன் எனக்கு அளித்த நல்ல வெகுமதிகளை நான் பகுத்தறிந்து, அதை மதிக்கிறேனா, மேலும் அதற்கான காலம் முடியும் போது முற்றிலும் அர்ப்பணிக்கிறேனா? 

  Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download