ராம் அன்கோ கம்பெனி கேண்டீன் வழக்கம் போல் இன்றும் (மதியம்) கலகலத்தது. “நம்ம சாமியாரைப்போல மடையனை நான் பார்த்ததே இல்லை! பரமசிவம் நம்ம கம்பெனிக்கு அலைந்து, அலைந்து பாதி ஆளாகிவிட்டார். அவர் ஆர்டரை முடித்தால் என்ன? இவன் ஒருத்தன் தான் கம்பெனியை தாங்கிக்கிட்டிருக்கானா? இல்லை இவன் ஒருத்தன் தான் யோக்கியனா? சே! அந்த செக்ஷன் மாத்திரம் என் கையில் இருந்தால்.....?” என்றான் ஜேக்கப்.
“சீக்கிரம் அடுத்தவன் பணத்தில் ஸ்கூட்டர் வாங்கிடுவாய்” என்று கேலி செய்தான் முரளி.
"அதனால தான் உனக்கு அந்த செக்ஷன் கிடைக்கலை! நமக்கு சுகமில்லையின்னா டிரீட்மெண்ட்க்கு ஆன செலவை கம்பெனி தரும்ன்னு ஆடர் போட்டதும் நல்லா இருந்த உனக்கு அல்சர் ஆபரேஷன்” நடந்ததா டாக்டரிடம் பொய் சாட்டிபிகேட் வாங்கிக் கொடுத்து ரூ30000ஐ கம்பெனியிலிருந்து கறந்திட்டயேடா!” என்று குத்திக் காட்டினான் ராஜன்.
“ஏண்டா, எனக்கு செலவுக்குப் பணம் வேணும்ன்னு கேட்டா எவனாவது தருவானா?
டாக்டருக்கு ஒரு 500 ரூபாய் நோட்டைத் தள்ளினா நமக்குச் சுளையா ரூ. 3௦௦00ம் 15நாள் லீவும் கிடைக்குது. ஏண்டா அப்படி பணம் வாங்கினாத்தானே, உனக்கெல்லாம் பீர், ரம்ன்னு சப்ளை பண்ண முடியுது? ஏண்டா தடிமாடு , நல்லா ஓசியில் தின்னுட்டு. என்னையே குற்றம் சொல்றையா?” என்று கடிந்தான் ஜேக்கப்.
“சைலன்ஸ்! சைலன்ஸ் சந்தோஷமான நேரம் சண்டையில் முடியக்கூடாது” என்று தடுத்தான் முரளி.
“நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதே ஜேக்கப்! நீ கிறிஸ்தவனா இருக்க. ஆனா கிறிஸ்துவை உன்கிட்ட பார்க்க முடியல. நீ சர்ச்சுக்கு போவையா? பைபிள் வாசிப்பாயா? உன்னால எப்படி குடிக்க முடியுது? நீங்க சாமியார்ன்னு கேலி பண்ற ஜவஹா். ஒரு பிராமின்! கிறிஸ்தவனில்லை! ஆனா கிறிஸ்து கூறியபடி அவன்தான் வாழ்கிறான்!” என்றான் இப்ராஹிம்.
“டேய்! வர, வர இப்ராஹிம் கெட்டுக்கிட்டே போறான். குடிக்காத தவறு ஒன்னுதான் செய்யறான். போனாபோகுதுன்னு விட்டது ரொம்ப தப்பாப் போச்சு! நமக்கே புத்தி சொல்ல வந்துட்டான். மதுவும் மாதுவும் எப்படி இருக்கும் என ருசிக்காத மடையன் தானே அவனும், இவனும்! டேய்! நீ மட்டுமல்லடா! இந்த சாமியார் ஜவஹர் ஒரு நாள் என்கூட கிளப்புக்கு வரட்டும். அப்புறம் கிளப்பை சுற்றி சுற்றி வருவாண்டா! டேய் இப்ராஹிம்! இந்த ஜவஹா் பயல கிளப்புக்கு நான் இழுத்திட்டு வரலை என் பேர் ஜேக்கப் இல்லை” என்று சபதம் செய்தான் ஜேக்கப்.
“ஜேக்கப் சேலஜ் பண்றையா? உன்னால முடியாது!” என்றான் இப்ராஹிம். இல்லையா
“ஏன் முடியாது? சேலஜ்தான்! அவனை மாற்றுகிறேனா இல்லையா பார்?” வேகமாக மேஜையில் ஓங்கிக் குத்தினான். ஜேக்கப்!
காலச் சக்கரம் சுழன்றது. அமைதியான மாலைப் பொழுது. கம்பெனி அலுவலகத்தை விட்டு ஜவஹரும் ஜேக்கப்பும் வெளிவந்தனர். முரளியும், ராஜானும் “குருவும், சிஷியப் பிள்ளையும் போல போவதைப்பார்” என்று சத்தமாகக் கூறிச் சிரிப்பது ஜேக்கப்பின் செவிகளில் விழுந்தது. அவன் நினைவு அலைகள் பின்னோக்கிப் புரண்டது. ஜேக்கப்புக்கு நடந்த காரியங்கள் அனைத்தும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது. ஜவஹரை மாற்றிவிடுவேன் என சவால் விட்டுச் சென்றவன் அன்று மாலை ஜவஹரை அணுகி தனியாகப் பேச வேண்டுமென அவனை அழைத்தான்.
அழைப்பை எதிர் பார்த்தவன் போல் உடனே ஜேக்கப்பின் அழைப்பை புன்முறுவலுடன் ஏற்றான் ஜவஹா். இருவரும் அருகிலிருந்த பூங்காவிற்குச் சென்று அமர்ந்தனர். தன் லெதா் பேக்கை திறந்து, ஒரு நோட்டீஸை எடுத்து ஜேக்கப்பிடம் கொடுத்த ஜவஹரே உற்சாகமாக பேச ஆரம்பித்தான். இந்தக் கூட்டத்தில் தான் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டதை எடுத்துக் கூறி. ஜேக்கப் அந்தக் கூட்டத்திற்கு வரவேண்டுமென வற்புறுத்த ஆரம்பித்தான். எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளானான் ஜேக்கப், அன்பான ஜவஹரின் வார்த்தைகள், ஏங்கும் அவன் விழிகள், ஜேக்கப்பை என்னவோ செய்தன. மற்றொரு எண்ணமும் அவன் மனதில் தோன்றியது. இன்று இவன் அழைப்புக்கு தான் இணங்கினால், நாளை என் அழைப்புக்கு அவன் இணங்குவானல்லவா என்ற எண்ணந்தான்.
ஜவஹா் விருப்பப்படி நற்செய்தி கூட்டத்திற்குச் சென்றான். காணாமற்போன ஆடுகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் நல்ல மேய்ப்பன் இயேசு, ஊழியக்காரர் மூலம் பேச ஆரம்பித்தார். பிரசங்கம் ஜேக்கப்பை அழைத்து அவனுக்காகவே பேசுவது போல் இருந்தது. அவன் பாவங்கள் அவன் முன் திரைப்படமாயின. திகைத்தான்! கலங்கினான்! ஜெபவேளை வந்தது. தன் இதயக் கதவுகளை திறந்தான்! தன் கண்ணீரால் தன் கறைகளைக் கர்த்தர் முன் படைத்தான். இதுவரை இதயத்தின் வெளியே நின்று தட்டிக் கொண்டிருந்த எம்பெருமான் இயேசு உட்பிரவேசித்தார்! தன் கறையற்ற இரத்தத்தால் அவன் கறைகளைக் கழுவி சுத்தப்படுத்தினார். ஜவஹரை மாற்றச் சென்றவன், தானே மாறியவனாக கூட்டத்தை விட்டு வெளியே வந்தான். ஜவஹரும், ஜேக்கப்பும், தாவீதும் யோனத்தானுமாக மாறினர். தீய பழக்கவழக்கங்கள் ஜேக்கப்பை விட்டு ஓடின. பழைய நண்பர்கள் பறந்தனர்.
ஜவஹரின் நினைவலைகள் ஓய்வுபெறவும் வழக்கமாக இருவரும் வந்தமரும் பூங்கா வரவும் சரியாக இருந்தது. வழக்கமாக அமரும் இடத்தில் சென்று அமர்ந்தனர் ஜவஹரின் முகம் வாடியிருந்தது. வானத்தையே?” வெறித்தபடி அமர்ந்திருந்தான்! ஜவஹர் கிறிஸ்தவனாக மாறியதும், அவன் வீட்டில் அனைவரும் திகைத்தனர். அவனைத் திருத்த முயன்றனர். முடியாமற்போகவே அவனை வெறுக்க ஆரம்பித்தனர். யாரும் அவனிடம் பேசுவதில்லை. ஒரு வேலைக்காரனைப்போல, தீண்டத்தகாத குஷ்டரோகியைப்போல அவனை மதித்தனர். அதற்கெல்லாம் கலங்கவில்லை ஜவஹா். எனக்காக கோர மரணத்தைத் தழுவிய என் நேசர் மீட்பருக்காக இந்த துன்பத்தையாவது நான் அனுபவிக்க வேண்டாமா?” என்று மகிழ்ச்சியோடு கூறும் ஜவஹர் தான் இன்று கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தான்.
“ஜவஹர் வீட்டில் ஏதாவது நடந்ததா?” ஆதரவாகக் கேட்டான் ஜேக்கப்.
“ஜேக்கப்! சுந்தர்சிங்கிற்கு வந்த சோதனைதான் எனக்கும் வந்துள்ளது. பல வழிகளில் முயன்றும் சுந்தர்சிங்கை இயேசுவிடமிருந்து பிரிக்க முடியாததால் கடைசியில் அவரை மணக்கப் போகும் மணப்பெண்ணையே அவரிடம் அனுப்பினார்களாம். அவளும் அழுது ஏதேதோ பேசிப்பார்த்தாள். பலனின்றி திரும்பினாள்! அதே போலதான் என் கதையும், என் மாமா பெண் ஜானகியை எனக்கும், அவள் அண்ணன் கண்ணனுக்கு என் தங்கை கீதாவையும் மணம் செய்து வைக்கப் பெரியோர்களால் ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
“அப்படிச் சொன்னால் பரவாயில்லையே! என் தங்கையின் திருமணமல்லவா தடைபடுகிறது? நான் கிறிஸ்தவனாம், எனவே எனக்கு ஜானகியில்லை. கிறிஸ்தவனாகிய நான் வீட்டிலிருப்பதால் இந்த வீட்டில் பெண் எடுக்க மாட்டார்களாம் என மாமா கூறிவிட்டார். அப்பா என்னைக் கண்டபடிதிட்டினார்கள். என் அன்புத் தங்கை கண்ணீர் விட்டுக் கதறுகிறாள்! என் அப்பா முடிவாகச் சொல்லிவிட்டார். “ஒன்று நான் இயேசுவை விட்டுவிட்டு குடும்பத்தில் இணைந்து வாழ வேண்டும் அல்லது குடும்பத்தைவிட்டு இயேசுவோடு வெளியேறிவிட வேண்டும் என்று...”
“நீ முடிவுக்கு வந்துவிட்டாயா?” கேட்டான் ஜேக்கப்.
“வீட்டை விட்டு மாத்திரமல்ல இந்த ஊரை விட்டே போய்விடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். கடந்த ஒருவார காலமாக என் மனதிலே ஒரு போராட்டம்! ஏதோ ஒருகுரல் என்னோடு பேசுகிறது. “நீ நற்செய்தி அறிவிக்க வேண்டும்' என்று இடைவிடாமல் கூறும் அக்குரலுக்கு அடிபணியப் போகிறேன்” என்ற ஜவஹா், ஒரு கிறிஸ்தவ மாத இதழை எடுத்து “இமயமலைப் பகுதிகளில் ஊழியம் செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள் தேவை” என்ற விளம்பரத்தைச் சுட்டிக்காட்டினான்.
“ஜேக்கப்! இப்பணிக்கு என்னை அர்ப்பணிக்கப்போகிறேன். ஆனால் உன்னை விட்டுப் பிரிவது எனக்கு வேதனையளிக்கிறது. நான் பிரிந்தபின், நீ உன் பழைய நண்பர்களிடம் போய்விடுவாயோ எனக் கலங்குகிறேன்” என்றான்.
ஜேக்கப் அதிர்ச்சியடைந்தான். அருமை நண்பனை விட்டுப் பிரிவதா? மின்னலென அவன் மூளையில் ஒன்று உதித்தது. உற்சாகமாகப் பேச ஆரம்பித்தான்.
“ஜவஹா்! கவலைப்படாதே! என் அஸ்திபாரம் கன்மலையாகிய கிறிஸ்துவில் இருப்பதால் நான் மாறமாட்டேன். ஆனால் நாம் பிரிய வேண்டிய அவசியமே இல்லை. என் தாய் நான் கர்ப்பத்தில் இருக்கும்போதே “ஆண்குழந்தையை தேவன் தந்தால் அவனை சுவிசேஷ ஊழியத்திற்கு அர்ப்பணிக்கிறேன்” என்று பொருத்தனை செய்திருந்தார்களாம். என் கதைதான் உனக்குத் தெரியுமே. நான் இப்பொழுது மனந்திருந்திய மைந்தனாக வாழ்வது என் பெற்றோர்க்கும், சகோதரிகளுக்கும் அதிக மகிழ்ச்சி! தினம் குடும்ப ஜெபத்தில் என்னை இரட்சிப்புக்குள் வழிநடத்திய உனக்காக நன்றிகூறி ஜெபம் செய்கிறார்கள். இப்பொழுது உன்னோடு ஊழியத்திற்கு நானும் புறப்பட்டால் அதிக மகிழ்ச்சியடைவார்கள் நாம் இணைந்தே இமயமலை நோக்கிச் செல்வோம்” என்ற ஜேக்கப் ஜவஹரின் கைகளை இறுகப் பற்றினான்.
“உண்மையாகவா?” ஆவலோடு கேட்டான் ஜவஹா்.
“உண்மையாகவே!” தீர்க்கமாகவந்தன ஜேக்கப்பின் பதில்.
“இந்த தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு. அவைகளையும் நான் கொண்டு வரவேண்டும்” (யோவான் 10:16) என்ற இறைமகன் இயேசுவின் கூற்றுப்படி தேவமந்தை சேர்ந்த ஆடாகிய ஜவஹரும், மந்தையிலிருந்து காணாமற்போய் பின் கண்டெடுக்கப்பட்ட ஆடாகிய ஜேக்கப்பும் தங்களைப் போன்ற அநேக ஆடுகளை நல்ல மேய்ப்பன் இயேசுவின் மந்தையில் சேர்க்கும் புனிதப் பணிக்கு தங்களை அர்ப்பணித்ததை கண்ட நல்ல மேய்ப்பர் இயேசுவின் இதழ்களில் புன்னகை விரிந்தது.!
இந்த கதை இதயம் தந்த பரிசு என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.