ஒரு வாலிபரிடம் ஒரு சைக்கிள் இருந்தது, அதை பள்ளிக்கு செல்ல பயன்படுத்தினான். குறைந்தது ஒரு வருடம் அவன் அதை பயன்படுத்தினான், அது பழுதின்றி நன்கு உழைத்தது எனலாம். அவன் இரு சக்கர வாகனம் அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு எப்போது தகுதி பெற்றானோ அப்போதே சைக்கிள் ஓட்டுவதை நிறுத்தினான். ஒரு நாள் அவனது தந்தை அவனிடம்; 'இப்போது நீ மோட்டார் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டாயே; இனி சைக்கிளைப் பயன்படுத்துவாயா' எனக் கேட்டார். அந்த இளைஞன் மாட்டேன் என்று கூறினான். அப்போது அவனுடைய தந்தை அதைப் பயன்படுத்தக்கூடிய ஒருவரிடம் கொடுக்கச் சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு, துருப்பிடிக்க இருந்த சைக்கிள் வேறே இடம் சென்றது; ஒரு சுவாரஸ்யமான சாட்சியாக ஆனது.
அரும்பொருளாக மாறிய குப்பை:
அந்த இளைஞன் சபைக்குச் சென்று, தன் சைக்கிளை கொடுப்பது பற்றி விவாதித்தான். அப்போது அங்கிருந்த இளைஞரணித் தலைவர்கள்; நமது ஐக்கியத்தில் ஒரு ஏழைப் பையன், சைக்கிள் கேட்டு ஜெபம் செய்து கொண்டிருக்கிறான், நாம் வேண்டுமானால் அதை அவனிடம் கொடுக்கலாமே என்றார்கள். ஆக ஒரு நபருக்கு உதவாத குப்பை மற்றொரு நபரின் பொக்கிஷமானது.
கொடுப்பது பாக்கியம்:
கொடுக்கிறதே பாக்கியம் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து போதித்தார் (அப்போஸ்தலர் 20:35). அந்த இளைஞன் தன் பழைய சைக்கிளைக் கொடுக்கும் போது ஒரு பாடத்தையும் கற்றுக்கொண்டான். ஆம், வெறுமனே அதை யாருக்கும் கொடுக்காமல் வைத்துக் கொண்டு உணர்வுபூர்வமான (இது என் முதல் சைக்கிள், நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்) முக்கியத்துவங்களை அளிக்காமல் தகுந்த தேவையுள்ள ஒருவருக்குக் கொடுக்க கற்றுக்கொண்டான். அதுபோல பழைய சைக்கிளை விற்று பணத்தை பாக்கெட்டில் நிரப்ப முயற்சிக்கவில்லை என்பதும் நல்ல விஷயமே.
ஜெபத்திற்கு பதில்:
ஜெபத்தைக் கேட்கும் தேவன், மற்றவர்களுக்கு உதவுவதற்காக இருதயத்தை அசைக்கிறார், ஏழை சிறுவன் மற்ற விசுவாசிகளுடன் சேர்ந்து ஜெபித்தான், தேவன் அவனுக்கு சைக்கிளைக் கொடுக்க மற்றொருவரின் இதயத்தை தூண்டினார். இதன் மூலம் இளைஞரின் ஐக்கியத்தில் பங்குகொள்ளும் நம்பிக்கையும் பணிவும் சிறுவனுக்கு கிடைத்தது.
ஐக்கியம்:
இளைஞரணித் தலைவர் ஏழை சிறுவனுக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லை, ஆனால் ஒரு வாய்ப்பைத் தேடினார். கொடுக்க சைக்கிள் வைத்திருந்த ஒரு இளைஞனையும், அது மிகவும் தேவைப்படும் ஏழைப் பையனையும் இணைத்தார்.
உக்கிராணக்காரன்:
இளைஞன் கொடுக்கும் இந்த செயலை தியாகம் என்று கூற முடியாது, ஆனால் உபரியாக இருப்பதைக் கொடுப்பது அல்லது உக்கிராணக்காரனாக கொடுப்பது எனலாம். ஆம், அநேகருக்கு கொடுக்க மனமில்லாமல் இருப்பதால் பல விஷயங்கள் உலகில் வீணாகப் போகின்றன. வருடத்திற்கு ஒருமுறை, நம்முடைய பொருட்களை இப்படி கொடுப்பது பலரை ஆசீர்வதிக்கும்.
நான் மற்றவர்களுக்கு பொக்கிஷங்களை கொடுக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்