மருத்துவம் படித்த இளைஞனுக்கு ஒரு கட்டிடக் கலைஞராக இருக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, இருவரும் போனில் பேச ஆரம்பித்தார்கள், அந்த மருத்துவன் அப்பெண்ணிடம் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கேட்டு தொல்லை செய்ததால், மணப்பெண்ணும் அனுப்பியுள்ளாள். இந்த நபர் அந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டது மட்டுமல்லாமல் பல நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளான். எல்லாவற்றையும் அறிந்த மணப்பெண் ஆத்திரமடைந்தாள்; அதைப் பற்றி அவனிடம் கேட்ட போது, இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே, சகஜமாக எடுத்து கொள் என்று கூறியதைக் கேட்டு கோபமான அப்பெண் தனது நண்பர்கள் சிலரை அழைத்து கொண்டு சென்று டாக்டரை சரமாரியாக தாக்கியுள்ளாள், அதில் அவன் மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். போகும் வழியிலேயே அவன் இறந்தான். அதனால் அப்பெண்ணையும் மற்றும் அவள் நண்பர்களையும் கொலை முயற்சி என்ற வழக்கின் கீழ் கைது செய்துள்ளனர் (டைம்ஸ் ஆஃப் இந்தியா, செப்டம்பர் 20, 2022)
கனம்:
திருமணம் என்பது உயர்ந்த, மதிப்பிற்குரிய மற்றும் மரியாதைக்குரிய உடன்படிக்கையாகும். "விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்" (எபிரெயர் 13:4). ஆம், இந்த மருத்துவருக்கு திருமணம் என்பது கெளரவமானது, வேடிக்கையானது அல்ல என்பது தெரியவில்லை.
அவமானம்:
அந்த இளைஞன் தனது வருங்கால மனைவியை சமூக ஊடகங்களில் அவமானப்படுத்துவதன் மூலம் அடிமையாக்கும் எண்ணம் கொண்டிருந்திருக்கலாம். நண்பர்கள் அவளை இழிவாகப் பார்ப்பார்கள், அதனால் அவன் தன்னை ஒரு உபகாரியாக சித்தரித்து அவளை நிரந்தர அடிமையாக சம்பாதிக்க முடியும் என நினைத்தான்.
வெட்கமின்மை:
ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்தபோது, வெட்கப்பட்டு, தங்களை மறைக்க அத்தி இலைகளைத் தைத்துக்கொண்டார்கள் (ஆதியாகமம் 3:7). பின்னதாக தேவன் முதல் ஜோடிக்கு ஒரு தோல் ஆடையை வழங்கினார். நிர்வாணமாக தன் சரீரத்தை பொது தளங்களில் வெளிப்படுத்துவது பாவம், வெட்கம் மற்றும் அவமானம். இதுபோன்ற படங்கள் அல்லது ஆபாசப் படங்களைப் பார்ப்பதும் கூட விபச்சார பாவம் (மத்தேயு 5:28).
உடன்படிக்கை மீறல்:
திருமணம் என்பது தேவன் நியமித்த உடன்படிக்கை. இரண்டு நபர்களும் ஒரே சரீரமாக மாறுகிறார்கள். வாழ்க்கைத் துணைக்கு தீங்கு விளைவிப்பது சுய அழிவுச் செயலாகும். இந்த முட்டாள் இளைஞன் தனது வருங்கால மனைவியின் நிர்வாண படங்களை வெளியிட்டு உடன்படிக்கையை மீறினான்.
முட்டாள்:
அந்த இளைஞனுக்கு திருமணத்தின் நோக்கமோ அர்த்தமோ தெரியவில்லை. இது அவனது புரிதலின்படி, ஒரு பெண்ணுடன் ஏற்படும் (ஒரு பொம்மை அல்லது ஒரு அடிமை அல்லது ரோபோ) வேடிக்கையான உறவு என நினைத்தான் போலும். எனவே, அவனைப் பொறுத்தவரை, திருமணம் என்பது ஒரு சாதாரண உறவு, புனிதமான உறவு அல்ல.
அடிக்க அழைத்தல்:
"மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்" (நீதிமொழிகள் 18:6-7). ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, அவன் அடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு, துரதிர்ஷ்டவசமாக உயிரை இழந்தான், அவன் வருங்கால மனைவியோ தனது எதிர்காலத்தை இழந்தாள்.
திருமணத்தின் புனிதம் எனக்கு புரிகிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்