ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மற்றொரு உறுப்பினருக்கு எதிராக பாராளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத, பத்திரிக்கைகளில் அச்சிட முடியாத மற்றும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார், கோடிக்கணக்கானவர்கள் தொலைக்காட்சியில் பார்த்தனர். அதைக் குறித்து அவருக்கு வருத்தமோ, துக்கமோ அல்லது பச்சாத்தாபமோ இல்லை. மாறாக, இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது தனது உரிமை என்றும் அவர் கூறினார். ஒரு கிறிஸ்தவர் எந்த வகையான வார்த்தைகளைப் பேச வேண்டும்? ஆவியின் கனி வார்த்தைகளிலும் வெளிப்பட வேண்டும் (கலாத்தியர் 5:22,23).
அன்பான வார்த்தைகள்:
விசுவாசிகளின் வார்த்தைகளில் தேவ அன்பு வெளிப்பட வேண்டும், வெறுப்பு, பொறாமை மற்றும் பிரிவினையை ஏற்படுத்தக்கூடாது. எதிரிகளைக் கூட ஆசீர்வதிக்கும் அன்பான வார்த்தைகள் மற்றும் அவர்களுக்காக ஜெபிப்பது ஒரு கிறிஸ்தவனின் அடையாளம் (லூக்கா 6:27-28).
மகிழ்ச்சியான வார்த்தைகள்:
ஒரு நபர் எப்பொழுதும் தேவனுக்குள் சந்தோஷமாக இருந்தால், அந்நபருடைய வார்த்தைகள் மகிழ்ச்சியானதாகவும் உற்சாகமானதாகவும் இருக்கும் (பிலிப்பியர் 4:4). ஆம், கர்த்தருடைய சந்தோஷமே தேவ பிள்ளைகளின் பெலன் (நெகேமியா 8:10).
அமைதியான வார்த்தைகள்:
“சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” (மத்தேயு 5:9). சகோதரர்களிடையே விரோதத்தை ஏற்படுத்துபவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் (நீதிமொழிகள் 6:19).தேவ பிள்ளைகள் ஒரு வீட்டிற்குள் நுழையும்போதோ அல்லது எங்கு சென்றாலும் சமாதானம் என்று உச்சரிக்க அதிகாரம் உண்டு (லூக்கா 10:5).
பொறுமையான வார்த்தைகள்:
கர்த்தருடைய சீஷர்கள் கோபமான வார்த்தைகளைப் பேசாமல், பொறுமையை வெளிப்படுத்த வேண்டும். மற்றவர்கள் மனந்திரும்பவும் மீட்கவும் வாய்ப்பளிக்க விருப்பம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். பொறுமை இல்லாதவர்கள் மற்றவர்களை நியாயம் தீர்க்கிறார்கள்.
இனிமையான வார்த்தைகள்:
விசுவாசிகள் கசப்புடன் இருக்கக்கூடாது, மாறாக மன்னிப்பவர்களாகவும், கனிவான உள்ளம் கொண்டவர்களாகவும், ஒருவருக்கொருவர் இரக்கம் காட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும் (எபேசியர் 4:29-32).
நல்ல வார்த்தைகள்:
“ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்” (நீதிமொழிகள் 25:11). இதற்கு நேர்மாறாக, கெட்ட வார்த்தைகள் புண்படுத்துகின்றன, சபித்தல், தூஷணங்கள் போன்றவை நம்பிக்கையை அழிக்கின்றன, மேலும் மக்களின் கண்ணியத்தைப் பறிக்கின்றன.
விசுவாச வார்த்தைகள்:
கிறிஸ்தவர்களுக்கு எப்போதும் நித்திய நம்பிக்கை இருக்கிறது. எனவே, அவர்கள் நம்பிக்கையின் வார்த்தைகளையும், சாத்தியமான சிந்தனையுடன் நேர்மறையான அணுகுமுறையையும் பேச அழைக்கப்படுகிறார்கள். விசுவாசமான வார்த்தைகள், மக்கள் புத்துணர்ச்சி பெறவும் ஆவிக்குரிய பக்குவத்தில் வளரவும் உதவுகின்றன.
மென்மையான வார்த்தைகள்:
“மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (நீதிமொழிகள் 15:1). தாவீது தேவனுடைய காருணியம் தன்னை பெரியவனாக்கும் (சங்கீதம் 18:35) என்று கூறினான்.
தன்னடக்க வார்த்தைகள்:
சுயக்கட்டுப்பாடு இல்லாத மனிதன் சுவர்கள் இல்லாத, உடைந்த மற்றும் பிளவுபட்ட நகரம் போன்றவன். எனவே பாதிக்கப்படக்கூடியதாகவும், பலவீனமானதாகவும் மற்றும் வெளிப்புற தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடியதாகவும் காணப்படுகிறது. “தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்” (நீதிமொழிகள் 25:28). பூர்வ காலங்களில் நகரங்களில் பாதுகாப்புச் சுவர்கள் இருந்தன.
நான் பலன் தரும் வார்த்தைகளை பேசுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்