ஆவியின் கனி – தயவு

எல்லார் மேலும் தயவுள்ள நம் கர்த்தருடைய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.  நாம் தொடர்ந்து தியானித்து வரும் ஆவியின் கனியில், தயவு என்பது மையப்பகுதியாக ஐந்தாவதாக இருக்கும் அம்சமாக காணப்படுகிறது. தயவு என்பதற்கு பெரும்பாலான ஆங்கில வேதாகமங்களில் Kindness (இரக்கம்) என்ற வார்த்தையும் Gentleness (மென்மை) என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு இணையான கிரேக்க வார்த்தைக்கு ‘இருதயத்தில் உருவாகி செயலில் வெளிப்படும் இரக்கம்’ என பொருள்.

நாம் ஒருவரிடம் ஒன்றை செய்யும்படி எதிர்பார்த்து கேட்கும் போது, ‘தயவு செய்து’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். அதை அவரிடமிருந்து எதிர்பார்ப்பதற்கு நமக்கு ஒருவேளை தகுதியும் உரிமையும் இருந்தாலும் கூட, அதனை மறுப்பு எதுவும் இருந்துவிடாமல் உறுதிசெய்து கொள்வதற்காக ’தயவு செய்து’ என்ற வார்த்தையை, நாம் இறங்கி வந்து தாராளமாக பயன்படுத்துகிறோம். ஆனால் தயவு என்பது என்ன? நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை என நீதி 19:22 ல் பார்க்கிறோம். அடுத்தவருக்கு நன்மை பயக்கும் பொருட்டு முழுமனதுடன் செய்யப்படும் செயலை தயை எனலாம்.

தயவு என்பது நம் திரியேக தேவனின் இயல்புகளில் ஒன்று. எனவே தான் அவை நம்மிலும் வெளிப்பட அவர் நம்மை எதிர்பார்க்கிறார். முதலில் நாம் இரட்சிக்கப்பட்டதே முற்றிலும் தேவனுடைய தயவினால் தான். ’நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்’ (தீத்து 3:4,5). நாம் இதற்கு எவ்வளவும் தகுதியானவர்கள் அல்ல (தீத்து 3:3). நாம் இரட்சிக்கப்பட்டது அவருடைய சுத்த கிருபையே. 'கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு' என எபேசியர் 2:8 ல் வாசிக்கிறோம். 

கிருபை என்பதற்கு தகுதியில்லாவதனுக்கு காட்டப்படும் இரக்கம் என ஒரு வரையறை உண்டு.  தயவோ பல நேரங்களில் தகுதியை எதிர்பார்க்கும் (ஆதி 21:23, 2 சாமுவேல் 9:1, லூக்கா 7:4). மட்டுமல்ல, பதிலீடாக ஒன்றைக் கொடுத்தும் ஒருவர் தயையை பெற முடியும். (ஆதி. 34:11). தயை செய்தல் பிரதிபலனாக தயையை எதிர்பார்க்கும் (யோசுவா 2:12) ஆனால் தயவு என்பது தகுதியில்லாதவனுக்கும் கிடைக்கும் (ஆதி. 32:10). தேவனால் மட்டுமே கூடும் உச்சபட்ச தயவை கிருபை எனலாம். ஆனால் தயவு செய்வது என்பது மனிதனாலும் கூடும்.

தயை செய்வது ஒன்றும் தாழ்வான காரியமல்ல. பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம் (நீதி 22:1). அதனால் வரும் பலன்களோ மிகவும் அதிகம் என்பதை பின்வரும் இந்த வசனங்களில் இருந்து தெளிவாக அறிகிறோம். ’தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்து கொள்கிறான்’ (நீதி 11:17). ’தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்’ (நீதி 20:18). ’நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்’ (நீதி 21:21). தேவனுடைய தயவுள்ள கரம் நம்மீது இருக்கும் போது மனிதர்கள் கண்னில் தயவு கிடைத்து நமது காரியங்கள் வெற்றியாய் முடிகிறது (நெகே. 2:8)

நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவியின் முதல் கனியாகிய அன்பு பெருகும் போது தயவும் வெளிப்படும் (1 கொரி 13:4). ஆவியின் கனியாகிய தயவு நமது வாழ்க்கையில் நிறைவாய் வழிந்தோடுவதற்கு ஆதாரமாக அன்பும், அடையாளமாக மன்னிக்கும் சுபாவமும் நம்மில் பெருகவேண்டும். 'ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்' (கொலோ. 3:12,13). 'ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்’ (எபே. 4:32). ஏசாயா 55:7ன் படி கர்த்தர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

பலனை எதிர்பார்த்து மட்டுமே நாம் தயவு காட்டக் கூடாது. இருப்பினும் தயை செய்பவனுக்கு அதிகம் தயை செய்யப்படும். ’கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்’ (சங்145:9); இருப்பினும் சங்கீதம் 18:25ன் படி கர்த்தர் தயவுள்ளவனுக்கு இன்னும் தயவுள்ளவராக இருக்கிறார். ‘இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்’ (மத். 5:7) என இயேசுவும் தனது மலைப்பிரசங்கத்தில் கூறியுள்ளார். ’தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்’ (ரோமர் 11:22)

ஆனால் பலனை எதிர்பார்த்து மட்டுமே தயை செய்தால் அது அன்பின் வெளிப்பாடு அல்ல; அது சுயநலத்தின் வெளிப்பாடு. மட்டுமல்ல, தயை செய்வதில் பாரபடசமும் இல்லாமல் இருக்கவேண்டும். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால்,  உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், அதனால், என்ன பிரயோஜனம்? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே என இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். ’உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே’ (லூக்கா 6:35)

உபதேசங்களைக் குறித்த வாக்குவாதங்களினால் அல்ல, உண்மைக் கிறிஸ்வர்களின் தயவு நிறைந்த நடவடிக்கைகளினாலேயே  அநேகர் சபைகளுக்குள் இழுக்கப்பட்டுள்ளனர் என்கிறார் வில்லியம் பார்க்ளே என்னும் வேத அறிஞர். இன்று நமது கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கிறது? தேவ ​​​​​​​தயையை பெற்றுக் கொண்ட நாம் பிரதிபலனாக மற்றவர்களிடம் தயையை காண்பிக்கிறோமா? மற்றவர்களின் மீது தேவ தயவுக்காக ஜெபிக்கிறோமா? (ரூத். 1:8). மற்றவர்களை நாம்  தாராளமாக ஆசீர்வதிக்கிறோமா? (1 சாமு. 23:21). தயவு என்னும் இந்த ஆவிக்குரிய கனி நம்மில் பெருகி, மற்றவர்களை அவரண்டை நடத்திட நம்மை அர்ப்பணிப்போமாக. ஆமென்.

Dr. Pethuru Devadason



Topics: Daily Devotions bible study Dr. Pethuru Devadason

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download