தனது வாழ்க்கையில் தேவனின் நோக்கத்தை நிறைவேற்ற கடந்த காலத்தை மறந்து, இலக்கை நோக்கி ஓடுவதாக பவுல் எழுதுகிறார்.
1) கடந்த கால பாவங்களை மறந்துவிடுங்கள்:
"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" நீதிமொழிகள் 28:13. 1 யோவான் 1:9ல் கூறப்பட்டது போல, நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், பாவங்களை மன்னித்து நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நம்முடைய மீறுதல்களை மேகத்தைப்போலவும், நம் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றி விட்டார் (ஏசாயா 44:22). எனவே, தேவையற்ற குற்ற உணர்ச்சியை சுமக்க வேண்டிய அவசியமில்லை.
2) தவறவிட்ட வாய்ப்புகளை மறந்து விடுங்கள்:
"அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்" (நியாயாதிபதிகள் 13:8). ஆம், புதிய வாய்ப்புகளை வழங்க தேவன் கிருபையுள்ளவர்.
3) கடந்த கால தோல்விகளை மறந்துவிடுங்கள்:
பேதுரு தோல்வியுற்றான், அவன் மூன்று முறை கர்த்தரை மறுத்தலித்தான். ஆயினும்கூட, கர்த்தர் அவனை மீட்டெடுத்தார், அவனை மீண்டும் ஊழியத்தில் சேர்த்துக் கொண்டார், திருச்சபைகளின் பெரிய தலைவராக ஆனானே (யோவான் 21).
4) கடந்த கால வெற்றிகளை மறந்துவிடுங்கள்:
இஸ்ரவேல் தேசம் எரிகோவின் வெற்றியில் சஞ்சரித்தார்கள் (யோசுவா 6). அவர்கள் ஆயி பட்டணத்தில் தோல்வியடைந்தனர் (யோசுவா 7). மலையேறுபவர்கள் அப்படி உச்சியிலே தங்கி விடுவதில்லை, அவர்கள் இறங்கி வந்து புதிய சிகரங்களை வெல்வார்கள்.
5) கசப்பான அனுபவங்களை மறந்து விடுங்கள்:
"யோசேப்பு, என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்" (ஆதியாகமம் 41:51). ஆம், கடந்த கால வருத்தங்களை கசப்புகளை மறந்து விடுங்கள்.
6) கடந்த கால மிகுதியை மறந்துவிடுங்கள்:
"தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:12-13).
7) மற்றவர்கள் ஏமாற்றியதையும் செய்த துரோகங்களையும் மறந்து விடுங்கள்:
சிக்லாக் அமலேக்கியர்களால் தாக்கப்பட்டது மற்றும் அங்கிருந்த அனைவரும் சிறைபிடிக்கப்பட்டனர். தாவீதும் அவனுடைய ஆட்களும் சத்தமிட்டு அழுதார்கள். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். தாவீது கர்த்தருக்குள் தன்னைப் பலப்படுத்தி, அவருடைய வாக்குத்தத்தத்தை நம்பி, தன் ஆட்களை மன்னித்து, அவர்களை யுத்தத்திற்கு அழைத்துச் சென்று வென்று, அனைவரையும் மீட்டெடுத்தான் (1 சாமுவேல் 30).
எனது உயர்ந்த அழைப்பை நிறைவேற்ற மறக்க வேண்டியதையெல்லாம் மறந்து விடுகிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran