தொடர் - 8 தையல் மிஷினில் பக்கத்து வீட்டுக்குட்டிப்பிள்ளை மீனாவிற்காக ஒரு அழகிய .கவுனை தைத்துக் கொண்டிருந்த சத்யா அழைப்பு மணி ஓசை கேட்டு எழுந்து வந்து பார்த்தாள். நர்ஸ் லில்லி நின்று கொண்டிருந்தாள் உலகின் மொத்த சோகமும் அவள் உருவில் வந்தது போல் இருந்தது. “வா.... லில்லி” “என்ன திடீர்ன்னு? இன்னைக்கு உனக்கு லீவா?” கேள்விகளை அடுக்கினாள். லில்லி உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள். தன்னிரு கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். “ஏன் லில்லி? என்ன நடந்தது?” என்று கூறியபடி அவளை ஆதவராக அணைத்து, அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீரைத் துடைத்து விட்டாள். “அக்கா பெண்ணாவே பிறக்கக் கூடாதுக்கா. அப்படியே பிறந்தாலும் நர்ஸ் வேலைக்கு வரக்கூடாதுக்கா.”” விம்மினாள் லில்லி. “அப்படிச் சொல்லாதே லில்லி, பெண்ணென பூமிதனில் பிறந்திட மாதவம் செசய்திட வேண்டுமம்மான்னுதான் பாரதி பாடியிருக்கிறார். நீ பார்க்கிற வேலை எவ்வளவு சிறந்தது தெரியுமா? எத்தனையோ பேருக்கு நீ ஆறுதலா, அருமருந்தா இருக்கிற வேலை இது. தியாகமான சமூகப்பணி இது. “கண்ணீரோடு இருக்கிற மக்களுக்கு கடவுளைப்பற்றிக் கூறி, அவர்களுக்கு வழிகாட்ட முடியுதுக்கான்னு நீயே சொல்லியிருக்க! அதற்குள்ள ஏன் இந்த விரக்தி?” “தியாகமான வாழ்க்கை நம்ம வாழ்க்கையையே பலியிட்டு பணி செய்யணும். அப்படித்தானேக்கா?” சற்று கோபமும் அவள் “கேள்வியில் தொனித்தது. கண்ணீர் முத்துக்கள் கன்னங்களில் உருண்டது. “லில்லி! என்ன நடந்ததுன்னு சொல்லுமா ?” ஆதரவாகக் கேட்டடாள் சத்யா. “அக்கா! இவர் கூட அதாவது என் ஹஸ்பண்ட் கூட மஞ்சுளா பழகிற விதம் எனக்குப் பிடிக்கலை." “உங்க ரெடிமேட் கடையில வேலை பார்க்கிறாளே, நீ கூட தாயில்லாப் பொண்ணு. “குடிகாரத்தகப்பன் கிட்டக் கிடந்து அவதிப்படுறா” அப்படின்னு சொல்லி, நல்லா செய்வையே, வீட்டுக்குள்ள உரிமையா பிள்ளைகளோடு பழகுவாளே, அவளா?” “ஆமாக்கா!” “செர்வன்ட்ஐ... செர்வன்டாதான் நடத்தணும். நீ உன் கூடப் பிறந்தவ மாதிரி 'மஞ்சு, மஞ்சு' ன்னு அவள நேசிச்ச அதுதான் இப்படி நடந்திருக்கு.” “அவளை வீட்டுக்குள்ள நான் விட்டதுதான் தப்புக்கா. அவ பேச்சில நான் மயங்கிட்டேன். பிள்ளைகள் ஸ்கூல் விட்டு வந்தா கவனிச்சிட்டா. நான் டியூட்டி முடிஞ்சு போக நேராமாகுமில்லையாக்கா?” “நேரமான என்ன? வீட்டுக்கு முன்னாடி ரெடிமேட் கடை. உன் புருஷன் அங்க தானா உட்காந்திருக்கார். பிள்ளைகளை அவர் கவனிக்க மாட்டாரா? அவர் தான் கவனிக்கணும்... சரி... நீ சந்தேகப் படற மாதிரி என்ன நடந்தது?”” “கொஞ்ச நாளாவே இவர் என்கிட்ட நல்லாவே இல்லக்கா. எதை எடுத்தாலும் சிடுசிடுன்னு பேசிகிட்டே இருந்தார். கடை நஷ்டத்தில் ஒடுற மாதிரி ஒரு புலம்பல் பாடுவார். எனக்கென்னவோ கடை நல்லா நடக்கிற மாதிரி தான் தெரியுது. எந்த விசேஷம் எங்கு நடந்தாலும் “நீ போ..” “நீ போ” ன்னு என்னைய விரட்றார். முன்பெல்லாம் “இந்த விசேஷத்துக்குப் போகணுமா? தந்தி கொடுத்தா போதும்.””ன்னு சொல்றவர். தூரத்து உறவினர் வீட்டு திருமணம் என்றாலும் “நீ போ ன்னு விரட்றார். போனவாரம் சனிக்கிழமை உறவினர் வீட்டுத் திருமணம். நான் லீவு போட்டுட்டுப் போனேன். அவங்க அழைப்பிதழ் கொடுக்கும்போதே மேரேஜ் முடிஞ்சவுடன் சுடு தண்ணிய கால்ல ஊத்திட்டு கிளம்பிடாதே. மறுவீடு, சம்பந்தி சாப்பாடு முடிஞ்சுதான் நீ புறப்படணும் 'ன்னு வற்புறுத்தினாங்க. இவரும் அவங்க ரொம்ப பிரியமா கூப்பிடுறாங்க. ஞாயிற்றுக்கிழமை இருந்திட்டு வான்னு சொல்லி அனுப்பினார்.” “பிள்ளைகளை கூட்டிட்டுப் போனயா? இல்லையா?” வேகமாகக் கேட்டாள். “வில்லியம் எய்த் ஸ்டாண்டர்ட் (எட்டாம் வகுப்பு) படிக்கிறான்ளக்கா. அதனால லீவு கிடைக்கிறது கஷ்டம் வில்லியத்தையும், வின்செண்ட்டையும் விட்டுட்டுத்தான் போனேன். ஆனா... மேரேஜ் முடியவும் எனக்கு இருப்புக் கொள்ளலை. யாரோ என்னை வீட்டுக்குப் போ...போ...ன்னு சொல்ற மாதிரியே இருந்திச்சி. பேசாம சாயந்திரமே கிளம்பிட்டேன். வீட்டுக்கு வர்றப்ப இரவு மணி 10.30 கதவைத் தட்டவும் வந்து திறந்தார். அதிர்ச்சி அடைந்த மாதிரி தெரிந்தது. “என்ன இன்னைக்கே வந்திட்ட? நாளைக்குத்தான் வருவன்னு நினைச்சேன். அதனால்தான் பிள்ளைகளை எங்க அக்கா வீட்டில கொண்டு போய் விட்டுட்டு வந்தேன்.” அப்படின்னு சொன்னார்.” நிறுத்தினாள். பெருமூச்சு விட்டாள். “அப்புறம்...” “பெட் ரூம்ல போய் படுத்திட்டார். கதவை யாரோ மெல்லத்தட்ற மாதிரி இருந்தது. நான் போய் திறந்தேன். மஞ்சுளா அவ அப்பா கூட நின்னுகிட்டு இருந்தாள். மணி 11மாடியில இருக்கிற ரெடிமேட் டிரஸ் எல்லாம் அடுக்கணும் வான்னு சார் சொன்னாங்கக்கா. அப்பா விட மாட்டேன்னார். சண்டை போட்டு கூட்டிகிட்டு வந்தேன்.'ன்னு சொன்னா. “இரண்டு பேரும் வீட்டுக்குப் போங்க இந்நேரத்தில என்ன வேலை?'ன்னு அனுப்பிச்சிட்டேன். “அப்ப...உனக்கு சந்தேகம் வந்ததா ?” “கொஞ்ச நாளாவே எனக்கு சந்தேகம் வந்துகிட்டுதாக்கா இருந்துச்சி. ஏன்னா... கடையில வேலை பார்த்த கதிரேசனை நிறுத்திட்டார். கீதாவையும், கலாவையும் இவ ரொம்ப அதிகாரம் பன்றா. அவர் அதையெல்லாம் கண்டுக்றதே இல்லை.” “இந்த நிகழ்ச்சியை வச்சுதான் சொல்றையா?”” “இல்லக்கா அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் வந்திட்டா. மேல போய் அடுக்கப் போறேன்னு போனா. இவரும் பின்னாடியே போனாரு. நானும் கொஞ்ச நேரம் கழிச்சி மேல போனேன். இரண்டு பேரும் பேசிச் சிரிச்சிகிட்டே டிரஸ்ஸ மடிஞ்சிகிட்டு இருந்தாங்க. “நான் வந்திட்டேன்.” "எதுக்கு வந்த? ஏதாவது தப்பு நடந்திட்டா?” பட்டென்று சொன்னாள் சத்யா. விரக்தியோடு சிரித்தாள் லில்லி. “உட்கார்ந்து நானும் மடிக்க ஆரம்பிச்சா..வேலை சொல்லி கீழே விரட்டுவார். அல்லது என்னையே கீழ கூட்டிட்டு வந்து விரட்டுவார். “என்ன நீ சந்தேகப்படற... ஆ... ஊ.. ன்னு எதையாவது சொல்லுவார். இவர் புத்தி எனக்குத் தெரியாதா? நிறுத்தினாள். பெருமூச்சுவிட்டாள் அக்கா அவ போறப்ப சந்தோஷமா போனாள். இவரும் சந்தோஷமா இருந்தார். திருட்டுத் தண்ணீர் தித்திக்கும் என்னக்கா? அதுக்கப்புறம் முந்தாநாள் இவர் உட்கார்ந்துகிட்டு இருக்கார். இவரை இடுச்சிட்டு நின்னு மேலே இருந்து டிரஸ் எடுக்கிறாள்.” "நீ சத்தம் போட வேண்டியதுதானே!” கோபமாக கேட்டாள் சத்யா. “அக்கா! தானா கனியாத பழத்தைத் தடி கொண்டு அடிச்சாக்கா கனிய வைப்பாங்க? அவள விடுங்கக்கா! இவர் உத்தமரா இருந்தா, “சீ நாயே! விலகிப் போன்னு!” சொல்ல மாட்டாரா?அல்லது பட்டுன்னு எந்திரிச்சு வரமாட்டாரா?” ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. கண்கள் மீண்டும் குளமாயின. நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன். அவரால் எப்படி அக்கா இப்படி நடக்க முடியுது? அவர் விருப்பம் எதுன்னாலும் அப்படியே கீழ்ப்படிவேக்கா. அவர் சுகமில்லாமல் இருந்தப்ப... சாப்பிட்டேனா, தூங்கினேனான்னு உங்களுக்குத் தெரியுமில்லக்கா? என்ன பாடுபட்டேன்! அவருக்காக பத்தியம் நான் இருந்திருக்கிறேன். அவர் வேலை பார்த்த கம்பெனியை மூடவும் “வேலையில்லை” ன்னு புலம்பினாள். பி.எஃப் லோன், நகைகளை எல்லாம் விற்று இந்த ரெடிமேட் கடை ஆரம்பிக்க வைச்சேன். நான் என்ன பார்க்கமுடியாதபடி குரூரமாவா இருக்கேன். வயசாயிடுச்சு ரெண்டு பிள்ள பிறந்தாச்சு. அவருக்கு புதுமலர் வேணும். அக்கா வாலிபத்தில் நான் சொல்லுவேன் “*கட்டவண்டி இழுக்கிறவன்னாலும் என்னைய மட்டும் நேசிக்கிறவனைத்தான் நான் மேரேஜ் பண்ணுவேன்னு அதனாலதான் எனக்கு இப்படி கிடைச்சிருக்குபோல” உள்ளக் குமுறலையெல்லாம் கொட்டித் தீர்த்தாள். “உனக்கென்ன குறை லில்லி! வயசாகுதுன்னா அவருக்கு மட்டும் வாலிபம் திரும்புதா? போடி பைத்தியக்காரி! இதெல்லாம் பிசாசு விரிக்கிற வலை!” *நான் என்னப்பன் இயேசுவைத்தானக்கா நம்பியிருக்கிறேன். இயேசு ஏன் எனக்கு இதை அனுமதிக்கணும். செத்துப் போயிடலாம்ன்னு இருக்கு. ஆனா..தற்கொலை பண்ணினா நரகத்திற்குப் போகணும். அடுத்து என் இரண்டு பிள்ளைக கதி? அதை நினைச்சுத்தான் நான் உயிரோட இருக்கேன். பேசாம தனியா பிள்ளைகளை கூட்டிட்டுப் போயிடலாம்ன்னு யோசிக்கிறேன். கஷ்டப்பட்டாவது நான் படிக்க வச்சிடமாட்டேனா?'' யோசனையில் மூழ்கினாள். “லில்லி பைத்தியம் பிடிச்ச மாதிரி பேசாதே. கர்த்தர் உங்களை இணைச்சது, இரண்டு பிள்ளைகள் பிறந்த பின்னால தனித்தனியாய் பிரியறதுக்கில்ல. அதைத் தெரிஞ்சிக்க இரண்டாவது அவர் உன்னை அடியோடு வெறுத்திட்டு போகலை. தப்பு ஒண்ணும் நடந்திருக்காது. தேவன் உங்க மேல வைச்ச அன்பினாலே, அவருடைய கிருபையினாலே நடக்க இருந்த தப்ப தடுத்திட்டார் புரிந்ததா? நாம ஜெபிப்போம் உபவாசித்து ஜெபிப்போம். உன் கணவரை தேவன் திருத்துவார். அவளை வேலையை விட்டு நீக்குவார்” “அவளை நினைச்சா பாவமாகவும் இருக்கு வேலையை விட்டு நிறுத்தினா செத்துப் போயிடுவாளோன்னு பயமாயிருக்குக்கா.” “பைத்தியம், பைத்தியம். வேலை பார்க்கிறவர்களுக்கு இந்தக் கடை இல்லாட்டி இன்னொரு கடை. அவளும் திருந்தி வாழணும்ன்னு ஜெபிச்சுக்கோ. தெரிஞ்சதா? சரி வா ஜெபிப்போம்.” “இருவரும் முழங்கால் படியிட்டு ஜெபித்தனர். கண்ணீர் மல்க லில்லி வேண்ட, சத்யாவும் விசுவாசத்தோடு ஜெபித்தாள். ஜெபம் முடிந்து எழும்பும்போது லில்லியின் முகம், மழை பெய்து, ஓய்ந்த பின் காணப்படும் நிர்மலமான வானம் போல் இருந்தது. “லில்லி நாளைக்கு உன் கணவரிடம், 'நான் வேலைக்குப் போக விரும்பவில்லை. வேலையை விட்டிடலாம்ன்னு இருக்கேன்.” அப்படின்னு சொல்லு” என சத்யா கூறவும், “வேலையை விடவா, எதுக்குக்கா?” பதறினாள் லில்லி. “இன்னும் நீ குழந்தையாவே இரு. வேலையை விடச் சொன்னேனா? வேலையை விட்டிடலாம்ன்னு இருக்கேன்.” அப்படின்னு சொல்லு. என்ன தெரிந்ததா? கர்த்தர் எல்லாவற்றையும் நன்மையாக நடத்துவார். ஸ்தோத்திரம் சொல்லு” தலையை ஆட்டினாள் லில்லி. “இந்தக் குடும்பத்தை இணைக்கிற ஞானம் தாரும் தகப்பனே.” என வேண்டியபடியே இருந்தாள் சத்யா.
இதன் தொடர்ச்சி விவாக மஞ்சம் என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மகிழம் பூ என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.