தயவைப் பெறுவதற்காக ஒருவருக்கு வழங்கப்படும் அதிகப்படியான பாராட்டுக்கள் முகஸ்துதியாகும். வணிகம், அரசியல் மற்றும் பிற பொது இடங்களில், காரியம் நிறைவேறுவதற்காக புகழ்வது என்பது பொதுவாக காணப்படுகின்றது. இது உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதால், அது ஆபத்தானது. நீதிமொழிகள் 26:28 ல் கூறப்படுவது போல "இச்சகம்பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்". முகஸ்துதி சுயநல நோக்கத்தையும் தீய எண்ணத்தையும் கொண்டுள்ளது. முகஸ்துதியை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. தேவனைப் புகழ்வது:
மக்கள் தேவனைப் புகழ்ந்து அவருடைய கிருபையையும் வரங்களையும் பெற முயற்சி செய்கிறார்கள். இத்தகைய முட்டாள்தனமான நடத்தைக்காக தேவன் இஸ்ரவேல் தேசத்தின் மீது வருத்தப்பட்டார். “ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள். அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை" (சங்கீதம் 78: 36-37). "இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது" (ஏசாயா 29:13).
2. தன்னை தானே புகழ்வது:
தங்களைத் தாங்களே புகழ்ந்து தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் மனிதர்கள் ஏராளம். "துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை. அவன் தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன்பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான். அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மைசெய்வதையும் விட்டுவிட்டான்" (சங்கீதம் 36:1-3). தவறான பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் தங்கள் பழக்கத்தை எளிதில் முறியடிக்க முடியும் என்றும் தங்களால் அதற்கு அடிமையாகாத அளவு தங்களுக்கு வலுவான மனத்திடம் உள்ளதாக தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்கிறார்கள்.
3. மற்றவர்களைப் புகழ்வது:
மற்றவர்களை முகஸ்துதி செய்வது என்பது அவர்களை சிக்க வைக்க வலை விரிப்பதாகும். பாலியல் ஒழுக்கக்கேடிற்கு பிடிபட வைக்கப்படும் பொறிகள் மற்றும் மிகுதியான இனிய சொற்களால் வசப்படுத்துவதாகும் (நீதிமொழிகள் 6:24; 7:5, 21). சிலர் ஆதாயத்தைப் பெற முகஸ்துதியைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இரக்கமுள்ளவர்கள் மற்றும் மற்றவர்களின் தேவைகளுக்கு உணர்திறன் உடையவர்கள். தீய எண்ணம் கொண்டவர்கள் அவர்களை முகஸ்துதி செய்து அவர்களின் வளங்களை சூறையாடுகிறார்கள். விழிப்புடன் இல்லாத விசுவாசிகளின் கவனத்தைப் பெறவும் அவர்களை தவறாக வழிநடத்தவும் கள்ளப் போதகர்கள் முகஸ்துதியைப் பயன்படுத்துகிறார்கள் (1 தெசலோனிக்கேயர் 2:5). இன்றும்கூட, பல கிறிஸ்தவ பணியாளர்கள் தங்கள் ஊழியத்தின் மூலமாகவோ அல்லது ஊழியத்திற்காக உழைத்ததின் நிமித்தமாகவோ அல்லது தங்கள் அருட்பணியில் பலன் கிடைத்ததின் மூலமாகவோ தேவன் செய்த அற்புதங்களை பெரிதுபடுத்துகிறார்கள். நன்கொடையாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் புதிய பக்தர்களை (விசுவாசிகளை) கவர்வதற்காக புகழாரம் செய்கின்றனர்.
பெருந்துன்பம், அழிவு மற்றும் துன்பத்தைத் தவிர்க்க, விசுவாசிகள் மற்றவர்களைப் புகழ்ந்து பேசாதபடி கவனமாக இருக்க வேண்டும்.
நான் முகஸ்துதி செய்கிறேனா அல்லது புகழ்வதை அனுபவிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்