கிறிஸ்துவைப் பற்றி பகிர ஐந்து நல்ல காரணங்கள்

எல்லா இடங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் பவுல் ஈடுபட்டதற்கு ஐந்து காரணங்களைக் கூறுகிறார்.

1. அன்பு:
தேவன் ஒரு மிஷனரியாக, தனது குமாரனை ஒரு மிஷனரியாகவும், இரட்சகராகவும், நியாதிபதியாகவும் இந்த உலகத்திற்கு அனுப்பினார். அவர் கல்வாரி சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்தார். தேவ அன்பு மனிதகுலத்திற்கு வெளிப்படுத்தப்பட்டது மறறும் நிரூபிக்கப்பட்டது. அன்பு அன்பிற்கு பதிலளிக்கிறது. "கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது"  (2 கொரிந்தியர் 5:14) என்பதாக பவுல் தெரிவிக்கிறார். 

2. அவசியம்:
அனைவருக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக் கடமைப்பட்டவன் அல்லது கட்டுப்பட்டவன் என்று பவுல் எழுதுகிறார் (ரோமர் 1:14-17). கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவில் விடுவிக்கப்பட்டாலும் தானாக முன்வந்து அடிமைகளாக மாறுகிறார்கள்.  ஒரு அடிமை தன் திறமைகளையும், நேரப் பொக்கிஷத்தையும், விருப்பத்தையும் விட்டுவிட்டு எஜமானனுக்காக வாழ்கிறான்.  அடிமைகளின் 'விருப்பம்' அர்ப்பணிக்கப்பட்டு, எஜமானரின் 'விருப்பம்' வாழ்க்கையில் ஆளுகை செலுத்துகிறது. பவுல் சுவிசேஷத்தின் கட்டாய உழைப்பாளி அல்ல மாறாக சுவிசேஷத்திற்கான தன்னார்வலராக இருந்தார்.

 3.  ஆவல்:
 சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஆவலாக இருப்பதாக பவுல் எழுதுகிறார்.  ஆர்வமே முழுமைக்கும் நிரம்பி வழிவதற்குமான விளைவாகும். தாவீதும் இதேபோல் தனது பாத்திரம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது என்று ஒப்புக்கொள்கிறார் (சங்கீதம் 23:5). இயேசு இதைதான் 'நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்' என்று கூறினார் (யோவான் 4:14). "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது" (ரோமர் 5:5).

4. அவலம் இல்லை:
பவுல் சுவிசேஷத்தைப் பற்றி வெட்கப்படவில்லை என்று அறிவிக்கிறார்.  சுவிசேஷம் என்பது வெடிபொருள் போன்றது, இது எல்லா மனித கணக்கீடுகளுக்கும் அப்பால் மனிதர்களை மாற்றும் ஆற்றல் கொண்டது.  சுவிசேஷம் ஒரு புராணக்கதையோ, வெற்று வார்த்தைகளோ அல்ல, ஆனால் மனிதகுலம் அனைவருக்கும் மீட்பின் திட்டத்தைப் பற்றிய தேவனின் அன்பான தகவல்தொடர்பு.  தேவ ராஜ்யத்தில் விசுவாசத்துடன் பதிலளிக்கும் முழு மனிதகுலத்திலிருந்தும் அனைத்து மக்களையும் சுவிசேஷம் அரவணைக்கிறது.

5.  அச்சமில்லை:
கொரிந்து நகரத்தில் பிரசங்கிக்க பயப்படாமல், கர்த்தரால் பவுல் ஊக்குவிக்கப்பட்டார் (அப்போஸ்தலர் 18:9-11). கர்த்தர் பவுலை பயப்படாமல் பேசச் சொல்லியும், மவுனமாக இருக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டார்.  ஆம், கொரிந்துவிலுள்ள சபை பல பிரச்சினைகள் இருந்தபோதிலும் பலமானதாக மாறியது, அதையெல்லாம் சரிப்படுத்தி எடுத்தததைக் குறித்து பவுல் தனது இரண்டு கடிதங்களில் வரிசைப்படுத்தினார்.

சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியுடன் ஈடுபடுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download