கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சொந்த ஊரான நாசரேத்தில் உள்ள ஜெப ஆலயத்தில் ஏசாயா புத்தகத்திலிருந்து வாசிக்கப்பட்டது; அதில், பாவத்தினால் ஏற்படும் ஐந்து விளைவுகளின் பட்டியல் மேசியாவால் உரையாற்றப்படுகிறது (லூக்கா 4:18-19). இந்த பகுதி பொதுவாக நாசரேத் அறிக்கை அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அருட்பணி அறிக்கை என்று அழைக்கப்படுகிறது.
தரித்திரம்:
பாவம் ஒரு மனிதனை வறுமையில் ஆழ்த்துகிறது. இது ஒரு நபரின் கண்ணியத்தையும் அடையாளத்தையும் பறிக்கிறது. சுயாதீனத் தெரிவு கூட ஒருவரிடமிருந்து பறிக்கப்படுகிறது. நல்லதைச் செய்ய விருப்பப்படுவது கூட சாத்தியமில்லாமல் ஆகின்றது, ஏனென்றால் பாவம் ஒரு நபருக்கு வலிமை, மன உறுதி அல்லது சகிப்புத்தன்மையை இழக்க செய்கிறது. ஏழைகளுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது, விசுவாசிக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ள முடியும் (மத்தேயு 5:3).
நருங்குண்ட இதயம்:
பாவம் ஒரு மனிதனின் இதயத்தை உடைக்கிறது. தேவனுடனான உறவில் ஒரு சிதைவு, தன்னைப் பற்றிய தாழ்வான எண்ணம் (சுயமரியாதை அற்ற நிலை மற்றும் தாழ்வு மனப்பான்மை) மற்றும் உலகத்தைப் பற்றிய பார்வையில் நொறுங்கிப் போன நிலை ஆகியவை பாவத்தின் விளைவுகளாகும். அத்தகையவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை வைக்கவோ அல்லது மற்றவர்களை நம்பவோ இயலாதவர்கள் ஆகிறார்கள். அப்படி மனம் உடைந்து நொறுங்கிப்போனவர்களுக்குக் தேவன் கிருபை பாராட்டுகிறார் (சங்கீதம் 34:18). மனம் உடைந்தவர்களுக்கு மேசியா நற்செய்தியைக் கொண்டு வருகிறார்.
அடிமைக்கு விடுதலை:
பாவம் செய்கிறவன் பாவத்திற்கு அடிமையாகிறான் (யோவான் 8:34). அந்த பாவப் பழக்கங்கள் தொடர்ந்து அடிமையாக மாற்றுகின்றன. போதைப்பொருளுக்கு அடிமையாதல் மரணம் அல்லது தற்கொலைக்கு வழிவகுக்கும். பாவிகள் தங்களைத் தாங்களே சிறைப்படுத்திக் கொள்கிறார்கள், மேசியா அவர்களுக்கு விடுதலையை அறிவிக்கிறார்.
குருடருக்கு பார்வை:
பாவம் ஒருவரைக் குருடாக்குகிறது. தேவனையும், அவரது பண்புகளையும், இரட்சிப்புக்கான வழியையும் அறிய முடியாமல், மக்களின் மனதை சாத்தான் குருடாக்கிவிட்டான் (2 கொரிந்தியர் 4:4). பாவிகள் இருளிலும் தவறான இடங்களிலும் தடுமாறி விழுகின்றனர். மேசியா குருடர்களின் கண்களைத் திறக்கிறார். நற்செய்தியைப் பகிர்ந்துகொள்பவர்கள், பவுலைப் போலவே பார்வையற்றவர்களின் கண்களைத் திறக்கிறார்கள் (அப்போஸ்தலர் 26:16-18).
நொருங்குண்டவர்களுக்கு விடுதலை:
பாவம் ஒருவரை ஒடுக்கி சுரண்டுகிறது; சீரழிக்கிறது. ஒரு பாவியின் குற்றமுள்ள மனசாட்சி மற்றும் தீர்ப்பு பயம் அந்நபரை ஒடுக்குகிறது. ஆவிக்குரிய ஒடுக்குமுறை, மன இறுக்கம், உணர்ச்சிக் கொந்தளிப்பு மற்றும் உடல் சோர்வின்மை ஆகியவை பாவத்தின் விளைவுகளாகும். பாவத்தின் ஒடுக்குமுறை நொறுங்கின எலும்புகளைப் போன்றது என்று தாவீது தனது அனுபவத்திலிருந்து எழுதுகிறான் (சங்கீதம் 51:8). ஒடுக்கப்பட்டவர்களுக்கு மேசியா விடுதலை அளிக்கிறார்.
நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் மன்னிப்பு, சுதந்திரம் மற்றும் விடுதலையை அனுபவித்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்