ஆசாரியர்கள், லேவியர்கள் மற்றும் ஜனங்கள் நெகேமியாவின் ஆளுகையில் இருந்தபோது காணிக்கையாக விறகுகளை கொண்டுவருவதாக உறுதியளித்தனர் (நெகேமியா 10:34; 13:31). பழைய ஏற்பாட்டில் உள்ள பலியிடும் முறையின் ஒரு முக்கிய அம்சம், “பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதானபலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்” (லேவியராகமம் 6:12).
திருவிழா:
நெகேமியா இதை ஒரு சடங்கு என்று குறிப்பிடுகையில், சரித்திர ஆசிரியனாகிய ஜொசிபஸ் இதை ஒரு திருவிழாவாகக் குறிப்பிடுகிறார். நெகேமியா காணிக்கைக்காக ஒரு தேதியைக் குறிப்பிடவில்லை என்றாலும், குறிப்பிட்ட நேரத்தில் ஆண்டு முழுவதும் ஒன்பது முறை நிகழ்த்தப்பட்டதாக ஜொசிபஸ் குறிப்பிடுகிறார். நெகேமியாவின் காலத்தில் வந்து காணிக்கை வழங்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தேதி கொடுக்கப்பட்டது.
தேவ பிரசன்னம்:
தகன பலிபீடத்தில் தெய்வீக அக்கினி தொடர்ந்து எரிய வேண்டும் என தேவன் நியமித்தார். அது இஸ்ரவேலர்கள் தங்கள் மத்தியில் தேவ பிரசன்னத்தின் நிஜத்தை உணர உதவியது. மேலும் உலகில் அவருடைய பிரசன்னம் அவர்களுக்குத் தேவை என்பதை அவர்களுக்கு நினைவூட்டியது. 40 ஆண்டுகள் பாலைவனத்திலும், கூடார வழிபாட்டின் போதும் பரிசுத்த அக்கினி எரிந்தது. சாலமோனின் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, தேவன் மீண்டும் ஒருமுறை பலிபீடத்தின் மீது நெருப்பை மூட்டினார் (2 நாளாகமம் 7:1).
தேவனின் தீர்ப்பு:
“தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்” (உபாகமம் 4:24) என்பதை நினைவூட்டுகிறது. ஆரோனின் பிள்ளைகளான நாதாபும் அபியூவும் தேவ சமூகத்தில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது அது அவர்களைக் காப்பாற்றவில்லை. நாதாபையும் அபியூவையும் அக்கினி பட்சித்தது. அக்கினியால் எரிக்கப்பட்டனர் (லேவியராகமம் 10:1-2). அனனியாவும் சப்பீராளும் பரிசுத்த ஆவியிடம் பொய் சொன்னதற்காக தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டனர் (அப்போஸ்தலர் 5: 1-11).
தேவனுக்கான ஆராதனை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள், தன்னைத் தானே வெறுத்து,அனுதினமும் சிலுவையை எடுத்துக்கொண்டு, தன் ஜீவனை தேவனுக்காக இழந்து அவரைப் பின்பற்றுவதற்கான அழைப்பை பெறுகிறார்கள் (லூக்கா 9:23). பலிபீடத்தின் மீது ஜீவ பலி என்று பவுல் விளக்குகிறார் (ரோமர் 12:1). உண்மையான ஆராதனை என்பது கர்த்தருக்கு நிலையான அர்ப்பணிப்புடன் வாழ்வதாகும். யோவான் ஸ்நானகரைப் போலவே, சீஷர்களும் எரிந்து பிரகாசிக்க அழைக்கப்படுகிறார்கள் (யோவான் 5:35).
தேவனுக்கான சாட்சி:
எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், பூமியின் மூலை முடுக்கிலும் சாட்சிகளாக இருக்க தேவன் தம் சீஷர்களை அழைத்திருக்கிறார் (அப்போஸ்தலர் 1:8). தங்களுடைய நம்பிக்கைக்கான காரணத்தைப் பகிர்ந்துகொள்ள அவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் (1 பேதுரு 3:15).
நான் எப்போதும் ஆராதிக்கும் நபராகவும் மற்றும் நற்சாட்சி கொண்ட நபராகவும் காணப்படுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்