டாக்டர். ஜே. ராபர்ட் கிளிண்டன் ஒரு தலைமைத்துவ நிபுணர். அவர் வாழ்க்கையின் ஓட்டத்தை நன்றாக முடிப்பதைப் பற்றி எழுதுகிறார்; வேதாகமத்தில் 80 அல்லது அதற்கு மேற்பட்ட தலைவர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சுமார் 100 பேரின் தரவுகள் தங்கள் தலைமைத்துவத்தை விளக்குவதற்கு உதவும். இவற்றில் சுமார் 50 தரவுகள் அவற்றின் முடிவை மதிப்பிடுவதற்கு போதுமானதாக உள்ளது. 3ல் 1 நல்ல ஓட்டமாக முடிந்தது. நன்றாக ஓட்டத்தை முடித்த ஆறு தலைவர்களின் பண்புகளை அவர் வழங்குகிறார். விசுவாசிகள் தோல்வியடையவோ அல்லது சோர்ந்து போகவோ கூடாது, ஆனால் நன்றாக ஓட்டத்தை முடிக்க வேண்டும் (கலாத்தியர் 6:9) என்று பவுல் பலமுறை அறிவுறுத்துகிறார்.
தனிப்பட்ட உறவு:
ஓட்டத்தை சிறந்ததாக முடிக்கும் தலைவர்கள் தேவனுடன் துடிப்பான உறவைக் கொண்டுள்ளனர். கிறிஸ்தவ தலைமைத்துவத்தின் செல்வாக்கு தேவனின் சிம்மாசனத்திலிருந்து பாய்கிறது.
கற்றல் நிலை:
இந்த தலைவர்கள் வெவ்வேறு முறைகள் மற்றும் பல ஆதாரங்களில் இருந்து அதிலும் முக்கியமாக வாழ்க்கை பாடங்களில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள். தானியேல் வயதான காலத்திலும் எரேமியாவின் புத்தகத்தைப் படித்து ஜெபித்துக் கொண்டிருந்தார் (தானியேல் 9). பவுல் வயதானபோதும், சிறையில் இருந்தபோதும், தீமோத்தேயுவை புஸ்தகங்களையும், தோற்சுருள்களையும் கொண்டுவரும்படி கேட்டார் (2 தீமோத்தேயு 4:13).
கிறிஸ்துவைப் பிரதிபலித்தல்:
அவர்கள் ஆவியின் கனியை கொண்டிருப்பதன் மூலம் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறார்கள் (கலாத்தியர் 5:22-23). முரட்டுத்தனமாகவும் கடினமாகவும் இருந்த பல ஆளுமைகள் மென்மையானவர்களாக மாறிவிட்டனர். சமாரிய கிராமத்தின் மீது வானத்திலிருந்து நெருப்பைக் கொண்டுவர விரும்பிய யோவான் தான், அன்பின் அப்போஸ்தலனாக ஆனார்.
சத்தியம் வெளிப்படல்:
இந்தத் தலைவர்கள் வேதாகம நம்பிக்கைகளின்படி வாழ்கிறார்கள், மேலும் வேதாகம மதிப்புகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்கள் விசுவாசத்துடன் வாழ்வதால், தேவ வாக்குறுதிகள் நிறைவேறுவது என்பது நிச்சயமாக நடக்கிறது.
இறுதி பங்களிப்பு:
அவர்கள் குறைந்தது ஒரு நிலையான பங்களிப்பை விட்டுச் செல்கிறார்கள். துறவிகள், ஊழிய மாதிரிகள், வழிகாட்டிகள், சொல்லாட்சிக் கலைஞர்கள், முன்னோடிகள், சிலுவைப்போராளிகள், கலைஞர்கள், நிறுவனர்கள், நிலைப்படுத்திகள், ஆராய்ச்சியாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என நீடித்த மரபுகளின் வகைகள் இங்கே உள்ளன. ராபர்ட் கிளிண்டனின் கூற்றுப்படி, இந்த அனைத்து வகைகளும் தானியேலின் வாழ்க்கையில் தெளிவாகத் தெரிகிறது.
இலக்கு பற்றிய உணர்வு:
தேவனின் அழைப்பும் நோக்கமும் அவர்களின் வாழ்வில் வெளிப்படுகிறது. தேவன் அவர்களை ஒரு சிறப்புப் பணிக்காக, ஒரு குறிப்பிட்ட பணிக்காக, நேர்த்தியான நேரத்திலும் சூழலிலும் அழைத்தார் என்பது அவர்களின் உறுதியான நம்பிக்கை. யோசேப்பு கனவுகள் மூலம் தனது வாழ்க்கை நோக்கத்தை புரிந்துகொண்டு அப்பாதையை தொடர்ந்தார். கோலியாத்துடன் சண்டையிட்டு அவனை வெல்ல வேண்டும் என்பது தேவனின் நோக்கம் என்பதை அறிந்ததாலே அவன் அன்று அந்த போர்முனையில் நின்றான்.
உதாரணங்கள்:
பழைய ஏற்பாட்டில் தானியேல் மற்றும் புதிய ஏற்பாட்டில் பவுல் ஆகியோர் சிறப்பாக முடித்த சிறந்த மாதிரிகள்.
என் ஓட்டத்தை நன்றாக முடிக்க நான் ஓடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்