தொடர் - 7
தந்தியை, பதற்றத்துடன் வாங்கிய தனராஜ் பிரித்துப் படித்தார். பயம் கோபமாக மாறியது. தந்தியில் வேறொன்றுமில்லை, இருநாட்கள் கழித்து வருவதாக ரவி செய்தி அனுப்பியிருந்தான். தனராஜ் கோபத்தில் குதித்தார். தந்தி என்றவுடன் பதறி வந்த மேரியும் கவிதாவும் மெல்ல நழுவினர், தனராஜின் உள்ளம் எரிமலையென வெடித்துச் சிதறியது, மாலையில் ஒரு சிலரை விருந்துக்கு அழைத்திருந்தார், தன் பெருமையை பறைசாற்ற! அவர்கள் முன் எப்படி தன் மகன் வரவில்லை எனக்கூறுவது? எனப் புரியாமல் கலங்கிக் கொண்டிருந்தார். வராண்டாவில் அடிபட்ட வேங்கையெனக் குமுறியபடி நடைபோட்டுக் கொண்டிருந்தார். எந்தக் கவலையும் இல்லாமல் நேரம் ஓடிக்கொண்டிருந்தது. பிற்பகல் மதியம் மணி 3, சமயலறைக்கு வந்தவர்,
ஏய்! மேரி, நல்ல நாளும் அதுவுமா அழுது வடிஞ்சிட்டு இருக்காத, ஈவ்னிங் டின்னர் பார்டிக்கு ஏற்பாடு செய். நல்ல பட்டு சேலை கட்டிக் கொண்டு இரு. நம் வீட்டிற்கு வருபவர்களிடம் எதையாவது உளறாதே, நான் சொல்லி சமாளிச்சுக்கிறேன். டேவிட்டை வேற வற்புறுத்தி வரச்சொல்லிட்டேன். அவங்கிட்ட எதையாவது சொன்னியோ நான் பொல்லாதவன் ஆயிடுவேன், புரிந்ததா? அந்த சனியனையும் நல்லா டிரஸ் பண்ணிட்டு இருக்கச் சொல் கண்டிப்பாக கூறியவர் சோபாவில் சாய்ந்து கண்ணை மூடினார். பம்பரமாக சுழன்றாள் கவிதா. வீட்டில் நறுமணம் கமழ்ந்தது. அறுசுவை உண்டியின் மணம் காற்றில் மிதந்து வந்தது. ரிக்கார்டு பிளேயரில் இன்னிசை தவழ்ந்தது. ஒவ்வொருவராக வீடு நோக்கி வந்தனர். மிக அருமையாக வரவேற்றார், தனராஜ். அழகான இருக்கைகளில் அமர்ந்தனர் பட்டுச் சேலை சரசரக்க பல்சுவையுணவை பரிமாறினாள் மேரி. அவள் என்ன முயற்சி செய்தும் அவள் முகத்தில் அப்பியிருந்த சோகத்தை மறைக்க முடியவில்லை.
சகஜமாகப் பேச ஆரம்பித்தார் தனராஜ். “*பாருங்களேன் மிஸ்டர் ஜேக்கப். இரண்டு நாட்களுக்கு முன்னால் சம்பந்தி வீட்டிலிருந்து ஆள் வந்தார். நம்ம மருமகள் அவங்களுக்கு ஒரே பொண்ணு. ரொம்ப செல்லம். இந்தப்புது வருடத்துக்கு அவங்க வீட்டிலேயே வச்சிக்கனும்னு ஆசையாம். நம்ம ரவி எங்க வீட்டுக்குத் தான் போகனும்னு கண்டிப்பா சொல்லிட்டான். தாயும் மகளும் ஒரே அழுகை, சம்பந்தியோட தம்பி வந்து விசயத்தைச் சொன்னாங்க, எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. நம்ம மகள் அழுதா எப்படி இருக்கும? மகள் வேற, மருமகள் வேறய்யா? டிரங்கால போட்டு ரவிகிட்ட சொல்லிட்டேன். “ரெண்டு நாள் கழிச்சி. வா. எப்பவும் நம்மவீட்டிலதான் இருக்கப்போற, புது வருடத்து பொண்ணு மனசை நோகடிக்காதடான்னு புத்தி சொல்லி அவனை அங்கேயே இருக்கச் சொன்னேன். ஒரு பெரிய கதையைக் கட்டிவிட்டார் தனராஜ்.
“உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு மிஸ்டர் தனராஜ்' புகழ்ந்தார் ஜேக்கப், சபை செயலாளர் இவர்.
தனராஜிடம் பெயருக்கு ஏற்ற தனமும் (செல்வமும்) இருக்கிறது தயாளமும் இருக்கிறது'”, உணவை சுவைத்து ஒரு கூடை ஐஸ்ஸை ஒரு மிக்க தனராஜின் தலையில் காட்டினார். சபைப் பொருளாளர் பீட்டர்,
டேவிட் ஒன்றும் கூறவில்லை. பொய் புனைந்துரைக்கப்பட்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரிந்ததுதான்.
கோயிலுக்குப் போனா மட்டும் போதாதே, சொன்ன கட்டளைகளை கடைப்பிடிக்கணுமே, உன்னிடத்தில் நீ அன்பாயிருப்பது போல பிறனிடத்திலும் அன்பாயிரு என்று சொல்லியிருக்கிறாரே போலியாகச் சிரித்தார். தனராஜ், தற்சமயம் கோயிலுக்கெல்லாம் ஒழுங்காக வரத்தொடங்கியிருந்தார். ஏனென்றால் சர்ச் எலெக்ஷன் வருகிறதல்லவா மெம்பராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பேச்சு அடிபடுவதால் முதுபெரும் மெர்பர்களைக் காக்கா பிடிக்கும் பணியும் தனராஜ் செய்ய வேண்டியிருந்தது. அதை அடைய அவர் எதையும் தியாகம் செய்ய தயாராக இருந்தார்.
செல்வநாயகம், தனராஜ்! ஒரே பெண், செல்லம்” என்றெல்லாம் விட்டுக் கொடுத்துவிடாதேயப்பா, நாளைக்கு உன் பிள்ளையை இழக்கவேண்டியிருக்கும் அவர்களே விட்டோடு வைத்துக் கொள்வார்கள் ஜாக்கிரதையாயிரு என்று அறிவுரை கூறினார்.
அப்படியும் நடந்து விடுமோ தனராஜின் நெஞ்சை அச்சம் மெல்லக் கவ்வத் தொடங்கியது. பேச்சுத் திரும்ப, உரையாடல் உலகையே சுற்றிவர, கடிகார முட்களும் சளைக்காமல் சுற்றி வந்தன. ஒரு வழியாக கலகலப்பாக விருந்து முடிய அனைவரும் கலைந்து சென்றனர். நாடக மேடையிலே காட்சி மாறுவது போல் தனராஜ் வீட்டில் சோகக் காட்சி ஆரம்பமானது. .தனராஜ் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. மூன்று நாட்கள் முன்று யுகங்களாக நகர்ந்தன. ரவிசங்கரும், மலர்க்கொடியும் அழகான பினைமெளத்திலிருந்து இறங்கினர். தனராஜின் கோபதாபமெல்லாம் பகலவன் பனியென மறைய ஆனந்தமாக வரவேற்றார்.
புன்னகையோடு கரங்குவித்தாள் மலர்க்கொடி. யாருடனும் கலகலப்பாகப் பழகவில்லை. ஒதுங்கியே இருந்தாள்.
பெரும்பாலும் மாடியிலேயே ரவிசங்கரும் மலர்கொடியும் இருந்தனர். மதியம் யார் வீட்டிலாவது, விருந்து இருக்கும். மாலை சினிமா, வாக்கிங் என்று போனால் இரவு வெகு நேரம் கழித்து தான் திரும்புவார்கள். நாட்கள் நகர்ந்தன. அன்று இரவு கடை முடித்து தனராஜ் வரவும் அவர் வரவை எதிர் நோக்கியவன் போல் ரவி முன் ஹாலில் அமர்ந்திருந்தான் தந்தையைக் கண்டதும்,
“சாப்பிட்டு வாங்கப்பா ! உங்களோடு பேச வேண்டும்” ரவியின் குரலில் இனம் புரியாத கறார் தென்பட்டது.
சொல் ரவி! என்ன பேச வேண்டும்” அருகிலுள்ள சோபாவில் அமர்ந்தவர், அமைதியாகக் கேட்டார்.
அப்பா நாங்கள் இன்னும் இரு தினங்களில் திருச்சிக்கு, மாமா வீட்டுக்குப் புறப்படுகிறோம். எனக்கு நாளைக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்து விடும். மாமா வீட்டின் முன்புறம் டிஸ்பென்ஸரிக்கு ஏற்றதாக உள்ளது. மாமா கொஞ்சம் ரீமாடலும் செய்கிறார். வீடும் மெயின் பஜாரில் இருக்கிறது. சொந்தமா டிஸ்பென்ஸரியும் வைத்து கொள்ளலாம். “மாமா எங்களை அங்கு வரச் சொல்லிவிட்டார். வார்த்தைக்கு வார்த்தை “மாமா” போட்டுப் பேசினான் ரவி,அப்பா! அப்பா எனப் பேசியவன் இன்று மாமா, மாமா? என மாறி விட்டான். அவனுக்கு தேவை அவனை வாழ வைக்கும் நபர்.
“ரவி! நீ என்ன சொல்ற? டிரான்ஸ்பர் எப்படிகிடைச்சது?” அதிர்ச்சியோடு வினவினார் தனராஜ்,
“பணம்! பணம் பேசும்ப்பா! நீங்கள் சொல்லிக் கொடுத்த பாடம்தாம்பா! அதோட மாமாவிற்குப் பெரிய பெரிய புள்ளிகள் எல்லாம் நல்ல பழக்கம், டிரான்ஸ்பர் கட்டாயம் வந்து விடும். நான் மாமா வீட்டிற்குப் போறதுதாப்பா என் எதிர்காலத்திற்கு நல்லது! வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசியவன், மாடிப்படிகளில் ஏறினான்.
ரவி......ரவியா பேசுகிறான் ?” தனராஜால் நம்பமுடியவில்லை. பணத்தை கொட்டோ, கொட்டென்று கொட்டி படிக்க வைத்தாரே. மேலே ஏறவும் ஏணியை எட்டி உதைக்கிறானே'' என எண்ணினார். வேதனை வாட்டியது. கோபப்பட முடியவில்லை.
ரவி!
படிகளில் ஏறிக் கொண்டிருந்தவன் நின்று திரும்பினான்.
இங்கே வா” அழைத்தார்.
சொல்லுங்கப்பா! நேரமாகிறது! இடத்தைவிட்டு அசையாமலேயே கேட்டான்.
மகனிடம் சென்றவர், ரவி! உன்னை கஷ்டப்பட்டு படிக்கவச்சேங்கறத மறந்துட்டியா? ரவி! உன் மேரேஜ் கிராண்ட இருக்கணும்னு கடன் கூட வாங்கிச் செலவு செய்திருக்கிறேன் ரவி!
உங்கள நானா கடன் வாங்கி கிராண்டா செய்யச் சொன்னேன். உங்க பெருமையைப் பறைசாற்றச் செய்தீர்கள். அவன் சொற்கள் அவரை சாடியது.
நம்ம குடும்ப நிலையைக் கூட மறந்திட்டயா? கவிதாவுக்குத் திருணம் செய்ய வேண்டாமா? அவ உழைச்ச பணத்தில் தான் நீ படிச்சிருக்க।”
“அடேங்கப்பா ! கவிதா மேலே என்ன திடீர் கரிசனை?! கவிதா மேலே அக்கரையிருந்தா... எனக்கும் தங்கைக்கும் திருமண ஏற்பாடே செய்திருக்க மாட்டீர்களே ஏளனம் அவன் சொற்களில் தொனித்தது.
அறையை விட்டு வெளியே வந்த மலர்க்கொடி,
டிஸ்பென்ஸரி, பிளஷர், ஏ.சி. ரூம் எல்லாம் உங்கப்பா ஏற்பாடு செய்யட்டும். நாம் இங்கேயே இருந்துவிடுவோம். கேலியும், கிண்டலும் அவள் சொற்களில் பொங்கி வழிந்தது.
அவமானம் தனராஜைக் கவ்வ திக்பிரமை பிடித்தவர் போல் நின்றார் தனராஜ். ரவி வேகமாக படியில் ஏறினான் நடந்தவற்றையெல்லாம் வராண்டாவை ஒட்டிய அறையில் படுத்திருந்த கவிதா கேட்டுக் கொண்டிருந்தாள். ஐயோ! பாவம் அப்பா நன்றாக ஏமாந்து விட்டாரே!” அவளது உள்ளம் சுக்கு நூறாக உடைந்து விட்டது கலங்கினாள். மேரியின் மனதில் இவருக்குச் சரியான பாடம் தான் என்ற எண்ணம் எழுந்தாலும் கடனை அடைக்க இனி கவிதா தான் உழைக்க வேண்டுமோ அவளும் மலர்ந்து மணம் வீசா முகையாகவே உதிர வேண்டியதுதானா?என்ற எண்ணம் எழுந்தது. அவள் விழிகள் கண்ணீரைக் கொட்டின.
தனராஜ் உள்ளம் வெதும்ப ஒடிந்து போய்ப் படுத்திருந்தார். நெஞ்சில் விழுந்த இந்த அடியை அவரால் தாங்க முடியவில்லை.
இதன் தொடர்ச்சி பக்தி மயக்கம் என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை மாயாபுரிச் சந்தையிலே என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.