சென்னை பூங்காவில் 5 வயது சிறுமியை இரண்டு ரோட்வைலர் நாய்கள் தாக்கின. மகளை காப்பாற்ற முயன்ற அவரது தாயும் தாக்கப்பட்டார். நாய்கள் கட்டப்படாமல் ஆக்ரோஷமாக இருந்தன. இதற்கு முன்னரும் நாய்கள் மக்களை தாக்கும் பழக்கம் கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் (டைம்ஸ் ஆஃப் இந்தியா 7 மே 2024). “ஒரு மனிதனின் மாடு ஒரு ஆணையோ, பெண்ணையோ கொன்றால், அந்த மாட்டைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அதை உணவாக உட்கொள்ளக் கூடாது. அதன் உரிமையாளன் குற்றவாளி அல்ல. அது முன்பு பலரைத் தாக்கியபோது உரிமையாளன் எச்சரிக்கப்பட்டும், அவன் ஓரிடத்தில் அதைக் கட்டியோ, அடைத்தோ வைக்காமலிருந்ததால் அவன் குற்றவாளியாவான். அது வெளியே தனித்துச் சென்று, யாரையேனும் கொன்றால் அப்போது அதன் எஜமானன் குற்றவாளியாகக் கருதப்படுவான். மாட்டையும் அதன் உரிமையாளனையும் நீ கல்லெறிந்து கொல்ல வேண்டும்” (யாத்திராகமம் 21:28-29) என்பதாக மோசே பிரமாணம் தெரிவிக்கிறது.
மனித உயிர் புனிதமானது
தேவனே மனிதர்களின் படைப்பாளர். எல்லா மனிதர்களும் தேவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்; எனவே அனைத்தும் தேவனின் பார்வையில் விலையேறப்பெற்றது. மாடு போன்ற வளர்ப்பு விலங்கு மனிதனைக் கொன்றால், அந்த மிருகம் கல்லெறிந்து கொல்லப்படும். விலங்கின் சதையைக் கூட வேறு எந்த விஷயத்திற்கும் பயன்படுத்தக் கூடாது.
விலங்கின் உரிமையாளர்:
முதல் முறையாக நடந்தால், விலங்கின் உரிமையாளர் தண்டனைக்கு பொறுப்பல்ல. இருப்பினும், விலங்கு மக்களைத் தாக்கும் பழக்கம் கொண்டிருந்தால், அதைக் குறித்து ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தால், அது கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். அலட்சியத்தால், உரிமையாளர் அவ்வாறு செய்யவில்லை என்றால், உரிமையாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
கட்டுப்படுத்தும் சக்தி:
நான்கு விஷயங்களுக்கு உரிமையாளர் பொறுப்பு. முதலில் , விலங்கு/மாடு தவறாக நடந்துகொண்டதாக அவருக்கு எச்சரிக்கப்பட்டது. இது மற்றவர்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தானது. இரண்டாவது , அவர் எச்சரிக்கையை பெரிதாக கவனிக்கவில்லை. ஒருவேளை, மற்றவர்களின் உயிரையும் உடைமையையும் மதிப்புமிக்கதாக கருதவில்லை. மூன்றாவது , அவர் விலங்கைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார். நான்காவது , விலங்கு ஒருவரைக் கொன்றது. உரிமையாளர் கொல்லப்பட வேண்டும். சரியானதை செய்ய அறிந்தும் அதைச் செய்யாமல் போனால் அது பாவம் என்று யாக்கோபு எழுதுகிறார் (யாக்கோபு 4:17).
அறிந்தோ அல்லது அறியாமலோ பாவம் செய்து விடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்