நல்ல எண்ணங்கள் நல்ல முடிவுகள் அல்ல. நல்ல முடிவுகளைக்கூட பலரால் செயல்படுத்த முடியவில்லை. லட்சக்கணக்கானோர் செய்த புத்தாண்டு தீர்மானங்கள், சீக்கிரமாகவே அல்லது நாட்கள் செல்லச் செல்ல புதைக்கப்படுகின்றன. மிகச் சிலவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இஸ்ரவேலரின் தொடர்ச்சியான உருவ வழிபாட்டிற்காக தேவன் தண்டித்தார். எரேமியா முன்னறிவித்தபடி அவர்கள் எழுபது ஆண்டுகள் அடிமைகளாக பாபிலோனுக்கு அனுப்பப்பட்டனர். மகா கோரேசு ஆலயத்தைக் கட்டுவதற்கான விடுதலையை அறிவித்ததால் அவர்கள் தங்கள் சொந்த இடத்திற்கு திரும்பினர். எஸ்ராவும் நெகேமியாவும் இஸ்ரேலில் ஆவிக்குரிய மற்றும் சமூக சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயற்சித்தனர். எனினும் அவை வெற்றிபெறவில்லை. தேவபக்தியற்ற பாலியல் தொடர்புகளிலிருந்து விடுபடவும், ஓய்வுநாளில் வாங்குவது மற்றும் விற்பது என எதையும் செய்யாமல் இருத்தல், பணம் மற்றும் காணிக்கைகளைக் கொண்டு தேவ பணியை ஆதரிக்கவும், தேவனின் வீட்டைப் புறக்கணிக்காமல் இருக்கவும் மக்கள் தேவனுடன் உடன்படிக்கை செய்தனர் (நெகேமியா 10:30-39). ஆனால் பத்து அல்லது பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் அதே பாவத்தில் மூழ்கினர்.
பயபக்தியற்ற பாலியல் தொடர்புகள்:
நல்ல தேவ பக்தியுள்ள இஸ்ரவேலர்களை சிலை வழிபாட்டிற்கு தவறாக வழிநடத்தும் இஸ்ரவேலர் அல்லாதவர்களுடன் திருமணம் செய்வதை தேவன் தடைசெய்துள்ளார். இஸ்ரவேலை சபிப்பதில் தோல்வியுற்ற பிலேயாம், மோவாபிய பெண்களுடன் இஸ்ரவேல் ஆண்களை விபச்சாரம் மற்றும் விக்கிரக ஆராதனைக்கு மயக்கினான்; தேவன் இஸ்ரவேலரை ஒரு கொள்ளை நோயை அனுப்பி தண்டித்தார் (எண்ணாகமம் 31:16). மிகவும் புத்திசாலி மற்றும் ஞானமுள்ள ராஜா சாலொமோன் தனது அந்நிய மனைவிகளின் காரணமாக கர்த்தரைப் பின்பற்றுவதை விட்டு விலகினான் (1 இராஜாக்கள் 11:3-4). இந்த பிரமாணம் இன காரணங்களுக்காக அல்ல, ஆனால் ஆவிக்குரிய காரணங்களுக்கானது. மோவாபியரான ரூத் இஸ்ரவேலில் ஏற்றுக்கொள்ளப்பட்டாள், அவள் மேசியாவின் மூதாதையானாள் (மத்தேயு 1:5). மீண்டும், இஸ்ரவேலில் பலர் இந்த சோதனையில் விழுந்தனர் (நெகேமியா 13:23-31). ஆம், தேவபக்தியற்றவர்களுடனான நெருங்கிய உறவுகள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆபத்தானவை.
ஓய்வுநாளில் வணிகம்:
ஓய்வு நாளில் தேவன் மீதும், அவருடைய பிரமாணம், ஆராதனை மற்றும் ஐக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் (நெகேமியா 13:15-22).
தேவனுடைய ஆலயத்தைச் புறக்கணித்தல்:
அவர்கள் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்தையும் பணியையும் ஆதரிக்கத் தவறிவிட்டனர் (நெகேமியா 13:11).
கிருபை தேவை:
பிரமாணங்கள், உறுதிமொழிகள், தீர்மானங்கள், வாக்குறுதிகள் மற்றும் உடன்படிக்கைகள் பாவத்தை வெல்ல ஒரு நபருக்கு அதிகாரம் அளிக்காது. மனித விருப்பம் அல்லது உறுதியான எண்ணங்கள் தேவ சித்தத்தை நிறைவேற்ற இயலாது. தேவனுக்கு நாம் செய்த வாக்கை நிறைவேற்ற தேவ ஆவியின் உதவியுடன் கூடிய கிருபை அவசியம்.
தேவ சித்தத்தை நிறைவேற்ற அவருடைய கிருபையை நான் சார்ந்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்