நன்கு கற்றறிந்த பேராசிரியர் ஒருவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை இது. அவர் திடீரென்று மனச்சோர்வுக்கு ஆளானார், வாழ்க்கையில் ஒரு விரக்தி, தன்னைக் குறித்தோ அல்லது மற்றவர்களைக் குறித்தோ அல்லது சுற்றியுள்ள சூழ்நிலை என எதைப் பற்றியும் கண்டு கொள்ளாதவர் ஆனார். அவரது வாழ்க்கை நிலைகுலைந்து ஒரு நம்பிக்கையற்ற சூழலுக்குச் சென்றது. ஒரு கற்றறிந்த நபரான அவருக்கு, அறிவுரைகளோ ஆலோசனைகளோ பெரிதாக எடுபடவில்லை. இந்நிலையில் அவரது நண்பர் ஒருவர் அவரைச் சந்தித்து அவருடன் நேரத்தைச் செலவிட்டார்; எச்சூழ்நிலையிலும் தளர்ந்து விட்டு விடாதே என்றார். மேலும்; உன் வாழ்க்கையில் நீ பேராசிரியராக ஆவதற்கு உதவியவர்கள் சிலர் இருக்க வேண்டுமல்லவா என்றார். அதற்கு அப்பேராசிரியரும் ஆம் என்றார். அப்படியென்றால் உன் வாழ்க்கையை வடிவமைத்த ஒரு குறிப்பிடத்தக்க நபரை நினைத்து ஒரு நன்றிக் கடிதத்தை எழுது, என்றார். அந்த மனச்சோர்வடைந்த பேராசிரியரும் தன் பள்ளிக் காலங்களில் தனக்கு உதவிய ஊக்கமளித்த பேராசிரியை பற்றி நினைத்தவராய், தான் சிறப்பாகப் படிக்கவும், புத்தகங்களின் மீதான ஆர்வத்தை வளர்க்கவும், இலக்கியம் படிக்கத் தூண்டவும் உதவியதற்கு நன்றி என தெரிவித்து கடிதம் எழுதி, தன் கையெழுத்தையும் போட்டு அவருக்கு அனுப்பி வைத்தார். அந்த தபாலை பெற்ற வயதான பெண்மணி, அதற்கு பதிலளிக்க நினைத்தார்; நடுநடுங்கும் கைகளால் தன் கையெழுத்தில், அப்பேராசிரியருக்கு; “இந்தக் கடிதத்தை எழுதியதற்கு நன்றி. நான் உன்னை நன்கு நினைவில் வைத்திருக்கிறேன். ஐம்பது வருட சேவையில் எனக்கு கிடைத்த முதல் கடிதம் இது. நான் இறக்கும் வரை தினமும் இதைப் போற்றிப் பாதுகாப்பேன்", என பதில் அனுப்பியிருந்தார். அந்த பதில் பேராசிரியரின் உள்ளத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த மாற்றத்தின் விளைவாக தன் வாழ்வில் சந்தித்த அநேகருக்கு கடிதம் எழுதத் தொடங்கினார், அவை 500 க்கும் மேற்பட்ட நன்றியை வெளிப்படுத்தும் கடிதங்களாக இருந்தன. அதற்குப்பின்பு அவர் மீண்டும் மனச்சோர்வு என்ற ஒன்றை அடையவே இல்லை; விரக்தியடையவும் இல்லை.
கடவுள்:
நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டிய விஷயங்கள் கோடிக்கணக்காக உள்ளன. இருப்பினும், பலருக்கு துதி ஆராதனை அர்த்தமற்றதாகத் தெரிகிறது. தாவீது தேவனைப் போற்றவும், துதிக்கவும், ஆசீர்வதிக்கவும், உயர்த்தவும், ஆசீர்வாதங்களையோ நன்மைகளையோ மறந்துவிடாமல் இருக்க வேண்டும் எனவும் தன் ஆத்துமாவோடு பேசுகிறான் (சங்கீதம் 103:1-2).
பெற்றோர்:
பொதுவாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக அநேக தியாகங்களைச் செய்கிறார்கள். பலர் தங்கள் பிள்ளைகள் சிறந்து விளங்குவதைக் காணுவதில் தங்கள் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அடைகிறார்கள். அதிலும் அற்பமான மற்றும் பயனற்றவர்களும் சிலர் இருக்கதான் செய்கிறார்கள். எப்படியிருந்தாலும், தேவன் அவர்களை பயன்படுத்தும் விதமாக உயிருடன் காக்கிறார்.
பள்ளி:
பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், நன்கு அறிவடையவும், வளமாய் வாழ்வும் ஊக்கமளிக்கிறார்கள், தெளிவுபடுத்துகிறார்கள் மற்றும் வழிகாட்டுகிறார்கள்.
ஆலயம்/சபை:
உண்மையாகவே ஞாயிறு பள்ளி ஆவிக்குரிய வளர்ச்சிக்கு , வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் படியாக இயங்குவதற்கு உள்ளூர் சபை ஒரு பகுதியாக இருப்பது ஒரு பாக்கியமே.
சமூகம்:
எண்ணற்ற நண்பர்கள், உறவினர்கள், அந்நியர்கள், சகாக்கள், அண்டை வீட்டார் ஆகியோரும் வாழ்க்கையை இன்பமாக்கியுள்ளனர்.
ஆகையால் எப்போதும் நன்றியுடன் இருப்போம்.
நான் என் நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்