தொடர் - 19
காலம் வேகமாக ஓடியது. ஒரு திங்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. வசந்தி அழகுப் பதுமையாக ராதாவுடன் சேர்ந்து பள்ளி சென்று வந்தாள். வசந்தியின் வேடிக்கைப் பேச்சுகள் ராதாவை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. இருவரும் தோழியா ஆயினர். ஒரு நாள் மதியம் ராதாவின் டிபன் பாக்ஸைத் தூக்கிய வசந்தி.
“இன்று நான் உன்னை விடமாட்டேன். என்னுடன் தான் சாப்பிட வேண்டும்” என்றபடி டிபன் பாக்ஸைத் திறந்தாள். அதில் பழைய சோறும் ஊறுகாயும் இருந்தது. ஏதோ அவளுக்குப் புரிந்ததுபோல் காணப்பட்டது.
“ஏய் ராதா! தினமும் இதைத்தான் நீ கொண்டு வருகிறாயா? அதுதான் என்னோடு சாப்பிட மாட்டேங்கிறாயா?
“வசந்தி! தினமும் இது எனக்கு வயிறாற கிடைத்தால் போதும்” சோகம் அவள் முகத்தைக் கவ்வியது.
“ராதா! உன் ஹஸ்பெண்ட் மதுரையில்தானே ஒர்க்பண்றார். நீ அவரோடு போக வேண்டியதுதானே. இங்க மாமன் மாமியோடு ஏன் இருக்கே?”
“வசந்தி! நான் மதுரைக்குப் போய்விட்டால் இவர்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்ப முடியாதாம். அதனால் என்னை தனிக் குடித்தனம் அனுப்ப மாட்டேன் என்கிறார்கள். என் நாத்தனர் கோமுவுக்கு மேரேஜ் ஆன பின்னால் தனிக்குடித்தனம் வைப்பார்களாம். அதுவரை நானும் என்பிள்ளையும் கஷ்டப்பட வேண்டியதுதான்”.
“உங்க மாமாவிற்குத்தான் நிலங்கள் நிறைய இருக்காமே. அதை விற்று மேரேஜ் செய்ய வேண்டியதுதானே. நானும் உன்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கேன். இங்க வந்து வேலையைப் பார்த்துட்டுப்போய் வீட்டில் தையல் மிஷினில் தைக்கிறாய். காலையிலே பார்த்தால் நீதான் தண்ணீர் இறைக்கிறாய். உனக்கு சரியான தாக்கமே இல்லைன்னு
நினைக்கிறேன்”.
“வசந்தி! வேலை செய்ய நான் பயப்படலை. சரியான உணவு எனக்குத் தரலைன்னும் கவலைப்படலை. என்னைத் தொட்டதற்கெல்லாம் அத்தையும் கோமுவும் குறைசொல்லி திட்டறதைத்தான் தாங்க முடியலை! இந்த மாதம் பணம் குறைவா அனுப்பிட்டார்ன்னு என்னைக் கண்டபடி திட்டினாங்க!” வேதனை அவள் வார்த்தைகளில் வழிந்தது.
“ஏண்டி ராதா? பேசாம உங்க அப்பா வீட்டுக்குப் போடி. கோமு குண்டு நல்லா தின்னுட்டு தூங்க, நீ பாடு படணுமா?”
“அப்பா வீட்டுக்குப் போக முடியாது! எனக்குக்' கீழே இருக்கிற இரண்டு தங்கச்சிகள் கரையேறணுமே! அதுக்கு வரதட்சணை கொடுக்கவே அப்பா உழைச்சி ஓடாகும்போது நான் வேறு அங்க போய்.... விரக்தியோடு சிரித்தாள்.
“ராதா! கோமு குண்டு மேரேஜ் ஆனபின்னும்கூட என்னால் வேலை செய்ய முடியலைன்னு சொல்லி உன் மாமி உன்னைத் தனிக்குடித்தனம் போகவிட மாட்டான்னு நான் நினைக்கிறேன்”.
“எனக்கும் அப்படி ஒரு பயம் இருக்கு வசந்தி”.
“அப்ப நீ என்னதான் செய்யப்போறே? நீயும் உன் பிள்ளையும் அழுதழுது உருகி, உருகி சாகப்போறர்யா?” ஆத்திரமாகக் கேட்டாள்.
“இல்லை!” ஆணித்தரமாக பதில் வந்தது ராதாவிடமிருந்து. ஒடுங்கிப் போயிருந்த விழிகளில் ஒரு மின்னல் வெட்டு.
“வசந்தி! ஜெபிக்கிறேன். சாந்திக்கா சொன்னதுக்கப்புறம் இப்ப பைபிள் படிக்கிறேன். கண்ணீரோடு வேண்டுகிறேன். எனக்கு ஒரு நல்லவழி இயேசு பகவான் காட்டுவார்ன்னு நம்புகிறேன்” அவள் முகம் அழகாக மலர்ந்தது.
ஒரு பொண்ணுக்கு இவ்வளவு நம்பிக்கையா? அசந்து போனாள் வசந்தி.
மாலை நேரம்! பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பள்ளி மேனேஜரின் வேலைக்காரன் வந்தான்.
“அம்மா! உங்களை ஐயா கூட்டிக்கிட்டு வரச் சொன்னார். பள்ளி விஷயமாக ஏதோ பேச வேண்டுமாம்!” வசந்தியிடம் பணிவாகச் சொன்னான். வசந்தியின் முகம் மலர்ந்தது. ராதா அதிர்ச்சியடைந்தாள்.
போய்விட்டு வருவோமா?” ஆவலுடன் கேட்டாள் வசந்தி.
“நேரமாயிட்டது வசந்தி. நாளை காலை .மேனேஜரைப் பார்த்துக்கொள்ளலாம் என்றவள், வசந்தியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு எட்டி நடை போட்டாள்.
“உன் வகுப்பிற்கு வந்து அடிக்கடி உன்னைப் புகழும் போதே சந்தேகப்பட்டேன். அதிகப் புகழ்ச்சி ஆபத்து. வா நாம் சீக்கிரம் போகலாம்” என்ற ராதாவைப் பார்த்து சிரித்தாள் வசந்தி.
“போடி பைத்தியம், பயந்து, பயந்து சாகிறாய்! அவர் வயது என்ன? நம்ம வயது என்ன? நமக்கு அப்பா மாதிரி அவர்” என்றாள். அதற்குள் வேலைக்காரன், “நீங்கள் வரமாட்டேன் ' என்று சொன்னதாக ஐயாவிடம் சொல்லி விடட்டுமா?” பின்னாலிருந்து கூப்பிட்டான்.
வசந்தியிடம் வகுப்பறையில் இன்னும் சில மாதங்களில் தன்னை தலைமையாசிரியை ஆக்கிவிடுவதாக மேனேஜர் கூறியது நினைவில் எழுந்தது. ஒரு முடிவுக்கு வந்தாள்.
“நீ போ ராதா. நான் சிறிது நேரம் கழித்து வருவதாக எங்கள் வீட்டில் கூறிவிடு என்றவள் ராதாவின் கையை உதறிவிட்டு வேலைக்காரனுடன் வேகமாக நடந்தாள். ராதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
சில கண நேரம் பிரமை பிடித்து நின்றவள் பின் ஓட்டமும் நடையுமா ஊரை நோக்கி நடந்தாள். “உலகம் தெரியாத வசந்தியைக் காப்பாற்று தேவா!” அவள் உள் மனம் இறைஞ்சியது.
பசுஞ்சோலை கிராமத்தில் படுத்திருந்த துரைராஜை ஒரு வலிமையான குரல் எழுப்பியது. “ துரை மயிலாடும் பாறைக்குப் போ!” திடுக்கிட்ட எழுந்தான். வாசலுக்கு வந்தான். ஜன்னலில் எட்டிப் பார்த்தான். யாரையும் காணோம் படுத்தான். மீண்டும் அதே குரல்! ஆண்டவர் கட்டளையிடுகிறார் என உணர்ந்தவன் மோட்டார் பைக்கில் பறந்தான் மயிலாடும் பாறை நோக்கி!
இதன் தொடர்ச்சி விந்தை மாற்றம்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.