கொடுத்தல் என்பது இயற்கையான நிகழ்வு அல்ல. பெரும்பாலான மக்கள் பதுக்கி (சேர்த்து) வைக்கவே விரும்புகிறார்கள், கொடுக்க விரும்புவதில்லை. "தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்" (நீதிமொழிகள் 11:26). கிறிஸ்தவத்தில் கொடுப்பது என்பது தேவனுக்கு நன்றியுணர்வுடன் இருப்பதையும் மற்றும் மற்றவர்களிடம் தாராள மனப்பான்மையை கொண்டிருப்பதையும் அடிப்படையாகக் கொண்டது. கொடுப்பதற்கான தெளிவான கொள்கைகள் வேதாகமத்தில் பவுலால் கற்பிக்கப்பட்டுள்ளன (1 கொரிந்தியர் 16:1-4; 2 கொரிந்தியர் 9).
1) கொடுத்தலின் காலங்கள்:
அவ்வப்போது கொடுப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். சம்பளம் வாங்குபவர்களுக்கு மாதாந்திரம், வணிகர்களுக்கு காலாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை, விவசாயிகளுக்கு பருவகாலம் மற்றும் பல மற்றும் தினசரி சம்பாதிப்பவர்கள் ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கி வாரம் அல்லது மாதம் ஒருமுறை கொடுக்கலாம்.
2) கொடுத்தலின் திட்டம்:
நீண்ட கால கொடுத்தலில் தெளிவான திட்டத்தை கொண்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தையின் கல்விக்கு நிதியுதவி செய்வது திட்டமிடப்பட வேண்டும் மற்றும் சரியான நேரத்தில் உதவி செய்வதாகவும் வேண்டும். ஒரு கல்வி ஆண்டு அல்லது சில ஆண்டுகள் அல்லது மாணவர் ஒரு குறிப்பிட்ட அளவிலான கல்வியை முடிக்கும் வரை இது தீர்மானிக்கப்பட வேண்டுமல்வா!
3) கொடுத்தலின் விகிதம்:
நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் கொடுக்கப்பட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார். புதிய ஏற்பாட்டில், கர்த்தராகிய இயேசு ஒரு சீஷரின் நீதி பரிசேயர்களின் நீதியை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று கற்பித்தார். பரிசேயர்கள் பத்து சதவிகிதம் கொடுத்தால், சீஷர்கள் மகிழ்ச்சியுடன் பத்து சதவிகிதத்திற்கு மேல் கொடுக்க வேண்டும் (மத்தேயு 5:20). வறுமையில் இருந்தபோதும் கொடுத்த ஏழை விதவையை ஆண்டவர் பாராட்டினார், "அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்" (மாற்கு 12:44).
4) கொடுத்தலின் முறை:
"நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது" (மத்தேயு 6:3) என்பதாக ஆண்டவர் அறிவுறுத்தினார். கொடுப்பவர்கள் எல்லாரும காணும்படியாக அல்லது சத்தமாக அறிவித்துக் கொண்டு செய்யக்கூடாது.
5) கொடுத்தலில் தாராளம்:
தேவக் கிருபை நம் வாழ்வில் வெளிப்பட்டிருக்கிறது, அது நம்மிடமிருந்து பெருந்தன்மையைக் கோருகிறது. தாராளமாகவும் மிதமிஞ்சி கொடுப்பது சீஷர்களின் அடையாளமாக இருக்க வேண்டும்.
6) கொடுத்தலில் தூய்மை:
கொடுப்பது என்பது தேவனின் மகிமைக்காக. ஆனால் (மாற்கு 10:30 )ஐ தவறாக மேற்கோள் காட்டி, பல செழிப்பு பிரசங்கிகள் நாம் கொடுப்பதின் மூலம் நூறத்தனையாக திரும்ப கிடைக்கும் என ஏதோ வணிக நோக்கம் போல் போதிக்கிறார்கள்.
7) கொடுத்தலில் மகிழ்ச்சி:
தேவன் மகிழ்ச்சியுடன் கொடுப்பதை விரும்புகிறார். உண்மையில், கொடுப்பதன் மூலம் நம் இதயங்கள் துதியினாலும் மகிழ்ச்சியினாலும் நிரப்பப்பட வேண்டும். ஏனென்றால், தேவன் நம்மை மற்றவர்களை ஆசீர்வதிக்க தனது கருவியாக பயன்படுத்துகிறார்.
நான் மனம் மகிழ்வோடு கொடுக்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokara