தென்கொரியாவின், ஹேப்பினஸ் தொழிற்சாலையில் உள்ள ஒவ்வொரு சிறிய அறையையும் வெளி உலகத்துடன் இணைக்கும் ஒரே விஷயம் கதவில் உள்ள ஒரு துளை மட்டுமே. தொலைபேசிகள் அல்லது மடிக்கணினிகள் இல்லை, நிறுவனத்திற்கு வெற்று சுவர்கள் மட்டுமே உள்ளன. அங்கு குடியிருக்க வருபவர்கள் நீல நிற சிறை சீருடையில் உள்ள பெற்றோர்கள், தென் கொரியாவில் உள்ள இந்த மையத்திற்கு தனிமையாக இருத்தலின் அனுபவத்திற்கு வருகிறார்கள். 19 முதல் 34 வயதுடையவர்களில் சுமார் 5% பேர் வேலையில்லாத் திண்டாட்டம், தனிநபர் பிரச்சனைகள், குடும்பப் பிரச்சனைகள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் போன்றவற்றின் காரணமாக கடுமையான சமூக விலகலுக்கு ஆளாகிறார்கள். அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்கள் 13 வார பெற்றோர் கல்விக்காக தங்கள் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகளை அடையாளம் காணவும் அந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளவும் வருகிறார்கள். உலகிலேயே அதிக தற்கொலை விகிதங்களைக் கொண்ட நாடு தென் கொரியா. குழந்தைகளின் சாதனைகள் பெற்றோரின் வெற்றியாகக் கருதப்படுகின்றன, இதே தோல்வி அடைந்தால் வளர்ப்பில் தோல்வி என்றாகிறது, அதினால் குற்ற உணர்வும் அடைகிறார்கள் (Hyojung Kim, BBC.com ஜூன் 29, 2024).
ஆதாமும் தனிமையும்:
உலகின் மிகச் சிறந்த ஏதேன் தோட்டத்தில் கூட ஆதாம் தனிமையாக உணர்ந்தான். அதனால் அவனிற்கு ஏவாளை மனைவியாகவும், துணையாகவும், உதவியாகவும் கொடுத்தார் (ஆதியாகமம் 2:18-25). தேவன் மனிதர்களை சமூகம் சார்ந்த மனிதர்களாக படைத்துள்ளார். எனவே, குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என ஐக்கியம் தேவை.
குடும்பப் பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள்:
வளர்ப்பதற்கும், பகிர்வதற்கும், கவனிப்பதற்கும் சிறந்த இடம் குடும்பம். ஸ்திரமான குடும்ப வாழ்க்கையில் வளராத குழந்தைகள் சமூகத் திறன்களைக் கொண்டிருக்காமல், நிராகரிக்கப்பட்டவர்களாகவும் ஏமாற்றமடைந்தவர்களாகவும் உணர்கிறார்கள். எனவே, சகாக்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்வதில்லை. சில நேரங்களில், அவர்கள் ஆக்ரோஷமாக இருப்பதால் நிராகரிக்கப்படுகிறார்கள். குடும்பத்தில் அன்பு இல்லாத வாலிபர்கள், மற்றவர்களிடம் இருந்து பெற முயற்சி செய்கிறார்கள். இது எதிர் பாலினத்தவர்களுடன் மோகம் மற்றும் பொறுப்பற்ற, முதிர்ச்சியற்ற மற்றும் ஒழுக்கக்கேடான உறவுகளுக்கு வழிவகுக்கும்.
வாழ்க்கை நோக்கமின்மை:
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் நிறைவேறாத கனவுகளை தங்கள் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை தங்களால் நிறைவேற்ற முடியாது என்று குழந்தைகள் உணரும்போது, அவர்கள் தங்களைத் தாங்களே தனிமையாக்கிக் கொள்கிறார்கள். தேவனே சிருஷ்டிகர் என்றும், இந்தப் பூமியில் அவர் ஒவ்வொருவரையும் ஒரு நோக்கத்திற்காக உருவாக்கியுள்ளார் என்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.
கிறிஸ்தவ ஐக்கியம் (கொயினோனியா):
உள்ளூர் திருச்சபை சமூக வாழ்க்கைக்கு ஒரு சிறந்த இடம். குழந்தைகளுக்கான ஞாயிறுப்பள்ளி, இளைஞர் ஐக்கியம் மற்றும் நடுத்தர வயதினர் ஐக்கியம் ஆகியவை அன்பு, ஏற்றுக்கொள்ளல், கவனிப்பு, அர்த்தம் மற்றும் வாழ்க்கைக்கான நோக்கத்தை வழங்குகின்றன. பெற்றோர்கள் சபையிலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டால், குழந்தைகளும் நிச்சயமாக பாதிக்கப்படுவார்கள்.
சபையில் உள்ள ஐக்கியத்தை நான் மதிக்கிறேனா மற்றும் அதில் கலந்துக் கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்