ஒரு சுவாரஸ்யமான கட்டுக்கதை ஒன்று உண்டு. ஒரு கிராமத்தில் கஞ்சன் ஒருவன் வாழ்ந்து வாழ்ந்தான், அவன் ஒவ்வொரு செயலையும் பணம் மற்றும் லாபத்தின் அடிப்படையில் கணக்கிட்டான். அவனுடைய அன்றாடச் செயல்பாடுகளும் ஆதாயத்தை வைத்தே மதிப்பிடப்பட்டது. முழு கிராம மக்களும் அவனை இலாப நோக்கமுள்ள மனிதன் என்று அழைத்தனர். ஆதாயத்திற்கான உறுதியளிக்கப்படாமல் அவன் எதையும் செய்யமாட்டான் என்று அவர்கள் தீவிரமாக நம்பினர். ஒரு நாள், ஒரு குளத்தில் நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டான். அவன் தண்ணீரில் இருந்து வெளியே வர தீவிரமாக முயன்றான். கிராம மக்கள் கண்டனர், ஆனால் உதவி செய்யவில்லை. அவர்கள் ஒருவரோடொருவர்; "அவனுக்கு ஏதோ இலாபம் இருக்கலாம், அதனால் தான் தண்ணீரில் இருக்கிறான்" எனப் பேசிக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் வெளியில் வர முடியாமல் அப்படியே நீரில் மூழ்கி இறந்தான். இதுபோலதான், பெரும்பாலான ஜனங்கள் தாங்கள் என்ன செய்தாலும் நமக்கு என்ன ஆதாயம் என்ற நோக்கத்துடனே சேவை செய்கிறார்கள்.
1) அங்கீகாரம்:
மற்றவர்கள் தங்களை நேரில் பாராட்ட வேண்டும், அனைவர் முன்பும் கைதட்ட வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். பொதுக் கூட்டங்களில், மேடையில் உயர் மதிப்பு (முதல் வரிசை) இருக்கைகளைப் பெறுவதன் மூலம் அவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
2) ஊதியம்:
ஏழைகள் மற்றும் பணம் செலுத்த முடியாதவர்களிடமிருந்தும் கூட, தங்கள் சேவைகளுக்கு ஈடாக பணத்தை எதிர்பார்க்கும் அநேகர் உள்ளனர். ஏழை எளியோரையும் தேவையில் உள்ளோரையும் ஒதுக்கி விட்டு, பாவத்தடனும் சுயநலத்துடனும் வாழக்கூடிய பணக்காரர்களுக்கு விருப்பத்துடன் ஊழியம் செய்யும் தொலைக்காட்சி சுவிசேஷகர்களும் உள்ளனர்.
3) வெகுமதி:
சிலர் வெகுமதியை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில், சில வெகுமதிகள் மற்றும் விருதுகள் விற்பனைக்காக தான் இருக்குதேயன்றி, தகுதியானவர்களுக்கு அல்ல.
4) ஞாபகம்:
அடுத்த தலைமுறைகள் தங்களை நினைவில் கொள்ள வேண்டும் என்று விரும்பும் சிலர் உள்ளனர். அவர்கள் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்ல விரும்புகிறார்கள். ஒரு பிரபல பாடகர் தனது சொந்த உருவச் சிலையை தனக்கு தானே உருவாக்கினார். ஒரு ஏழையும் அப்படித்தான்; பட்டினியால் வாடி, தன் குடும்பத்தைக் கவனிக்காமல், தன் வருமானம் முழுவதையும் தன் சொந்தச் சிலையை உருவாக்கச் செலவிட்டான்.
பவுல் எழுதுகிறார்: “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்" (பிலிப்பியர் 3:14). பவுல் இவ்வுலகில் வெகுமதியை எதிர்பார்க்கவில்லை. அங்கீகாரம் அல்லது ஊதியம் அல்லது வெகுமதிக்கான சந்தர்ப்பங்கள் ஒருவேளை அமையலாம், சில நேரங்களில் கிடைக்கலாம். இருப்பினும், நித்திய வெகுமதிகளுடன் ஒப்பிடும்போது அவை மதிப்புக்குரியவை அல்ல. இந்த உலகத்தின் மகிமைகளால் திசைதிருப்பப்படாமல், பரலோக பலன் மற்றும் பரம அழைப்பை நோக்கி நிலைத்திருக்க வேண்டும் என்று பவுல் தீர்மானிக்கிறார்.
நான் என் கவனத்தை அல்லது நோக்கத்தை பரலோகத்தின் மீது பதித்துள்ளேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran