"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்" (மத்தேயு 7:13). சில சமயங்களில், அது விசித்திரமாகத் தோன்றினாலும், தேவனுடைய வழிகள் மர்மமாகவும் சில சமயங்களில் நகைச்சுவையாகவும் இருக்கும்.
ஆர்வம்
நேபாளத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கொல்கோட்டே என்பவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாட்களில், அவர் தனது கிராமத்திற்குத் திரும்பினார். அவருடைய கிராமத்தில் ஒரு சில கிறிஸ்தவர்கள் ஜெபிப்பதற்காகக் கூடிவருவதை அறிந்தார். மதமாற்றத் தடைச் சட்டம் கடுமையாக இருந்தக் காலக்கட்டம் அது. ஆனாலும் அவர் ஆர்வமாக இருந்ததன் காரணமாக, அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
காவல்துறை சோதனை
சில தகவலறிந்தவர்கள் இக்கூட்டம் பற்றிய விவரங்களைத் தெரிவித்திருந்தனர். போலீசார் அந்த இடத்தை சோதனை செய்து, அங்கிருந்த அனைவரையும் கைது செய்தனர். விசாரணைகளுக்கு பயந்து, கொல்கோட்டே மற்றவர்களுடன் சேர்ந்து தானும் ஒரு கிறிஸ்தவராக இருப்பதை ஒப்புக்கொண்டார். ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
விடுதலை அடைவதும் சிறை செல்வதும்
கொல்கோட் சிறையில் இருந்து விடுதலையடைந்தார், இன்னும் அதிகமாக கிறிஸ்தவத்தைப் பற்றி அறிய விரும்பினார். இதில் சுவாரஸ்யம் என்னவெனில், அவர் கிறிஸ்தவர்கள் மீதோ அல்லது கிறிஸ்தவத்தின் மீதோ கோபப்படவில்லை. அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசமான சீஷரானார். அதற்கு பின்பு அவர் மீண்டும் வேலைக்கு செல்லவில்லை, மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கிக்கத் தொடங்கினார். ஆனால் அவரைக் கைது செய்வதும், பின்பு விடுவிக்கப்படுவதுமாக இருந்தது.
தண்டனை
அவரது கைது கோல்கோட்டின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ஒரு அரசாங்க அதிகாரி கண்டறிந்தார்; அவர் ஒரு தீய திட்டத்தை வகுத்தார். ஏதோ ஒரு பணி நிமித்தம் கொல்கோட்டை தூர இடத்துக்கு அனுப்பினார்கள். இருபது நாட்கள் பயணமாக இருந்தது, கொல்கோட் காட்டு விலங்குகளால் கொல்லப்படுவார் என்று அதிகாரப்பூர்வ எண்ணம் இருந்தது. இருப்பினும், அவர் உயிருடன் திரும்பி வந்தார்.
சாட்சி
அவரது மகனான யெம்பகதூர்; 'தனது தகப்பனார் கொல்கோட்டே, இருபது நாட்கள் பயணத்தில் தங்கியிருந்த ஒவ்வொரு கிராமத்திலும், இன்று செழிப்பான திருச்சபைகள் உள்ளன. அவருடைய பாதம் எங்கு பட்டதோ, அங்கெல்லாம் தேவன் தம் சீஷர்களாக ஆவதற்கு மக்களை எழுப்பினார்' (உபாகமம் 11:24) என்று சொல்கிறார். கொல்கொட்டே மரித்த பின்பும் அவருடைய மகன்கள் போதகர்களாக ஆண்டவருக்குச் சேவை செய்கிறார்கள்.
தேவனின் அருட்பணி (Missio Dei)
இது தேவனின் பணி, அதாவது கிறிஸ்துவைப் பற்றியும் இரட்சிப்பு பற்றியும் அறிவதற்காக சில மர்மமான வழிகள், முறைகள் மற்றும் காரணிகளைத் தேவன் தேர்ந்தெடுக்கிறார். ஆம், அருட்பணிக்கு மூடிய கதவு இல்லை.
அவருடைய அற்புதமான செயல்களுக்காக நான் அவரைப் துதிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்