தொலைதூர கிராமத்தில் இருந்து புலம்பெயர்ந்த ஒருவர் நகரத்திற்கு வாழ்க்கை நடத்த வந்தார். அவர் தன்னிடம் இருந்த சிறிய வளங்களைக் கொண்டு, பொருட்களை வைக்கும் வாகனத்தை உருவாக்கினார், அதில் அவர் தின்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்து வந்தார். ஒரு தெரு முனையில் அவர் இந்த பொருட்கள் எல்லாம் வைத்து விற்பனை செய்து வந்தார். அதில் ஒரு நல்ல சம்பாத்தியமும் இருந்தது. இப்படியிருக்கும்போது ஒருநாள் ஒரு உள்ளூர்காரர் இந்த வணிக திறனைக் கண்டார், உடனே அவரும் தெரு முனைக்கு அருகில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அதே தின்பண்டங்களை விற்கத் தொடங்கினார். ஆயினும்கூட, மக்கள் தூரத்தில் இருந்து வரும் அந்த நபரிடமே வாங்கிச் செல்வார்கள், அது மலிவானதாகவும் தரமானதாகவும் இருந்தது. இதனால் பொறாமையும் கோபமும் அடைந்த அந்த புதுக்கடைக்காரன் காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்து அழைத்து வந்து, அவர்களும் எந்த காரணமும் இல்லாமல் வெளியூரில் வந்து விற்பனை செய்தவரைத் தாக்கினர், அதற்கு பின்பு அந்த ஏழை வெளியூர் நபர் அந்த தெரு முனையிலிருந்து விற்பதில்லை, காணாமல் போனார். ஆம், இது போன்று உலகில் உள்ள அனைத்து நகரங்களிலும் தினமும் பல சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால் வேதாகமம் நமக்கு கற்பிக்கிறது; "ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்" (சங்கீதம் 82:3-4).
நீதி செய்யுங்கள்:
பலவீனமானவர்கள், தந்தையற்றவர்கள், அனாதைகள், விதவைகள் ஆகியோரை ஊக்குவிப்பதன் மூலமும், அவர்களுக்காக பரிந்து பேசுவதின் மூலமும், அவர்களுக்கு நியாயம் செய்வதின் மூலமும், உலகில் நன்மையான காரியங்களைச் செய்ய தேவ பிள்ளைகள் அழைக்கப்படுகிறார்கள்.
உரிமைகளைப் பேணுங்கள்:
தேவன் மனிதனுக்கான உரிமைகள் மாத்திரமல்ல, ஆவிக்குரிய உரிமைகளையும் அளிப்பவர். மற்றவர்களை அடிமைப்படுத்துவதையோ அல்லது அவர்களை அழிக்க நினைப்பதையோ தேவன் கண்டிக்கிறார். அந்த இளம் புலம் பெயர்ந்தோர் தனது வாழ்வாதாரத்தை சம்பாதிக்கும் உரிமையை இழந்தார். பொறாமை கொண்டவர்களும், ஊழல் அதிகாரிகளும் அவரது வாழ்க்கையை பரிதாபமாக்கினர்.
மீட்டெடுங்கள்:
"மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி" (நீதிமொழிகள் 24:11). அது மரணதண்டனை அல்லது கொலை அல்லது இனப்படுகொலைக்காக மாத்திரம் இருக்க வேண்டிய அவசியமில்லை; ஆனால் ஒடுக்குமுறை, பற்றாக்குறை மற்றும் ஓரங்கட்டப்படுதலுக்கு எதிராகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும், அவர்களை மீட்டெடுக்க வேண்டும்.
விடுவிக்கப்பட உதவுங்கள்:
பலவீனமான, பாதிக்கப்படக்கூடிய மற்றும் தனியாக இருப்பவர்களை அடிமைப்படுத்தவும், துன்புறுத்தவும், ஒடுக்கவும், சுரண்டவும் விரும்பும் தீயவர்கள் உலகில் எப்போதும் இருப்பார்கள். இந்த பொல்லாத மக்களுக்கு அவர்களை ஆதரிக்கவோ அல்லது அவர்கள் சார்பாக பேசவோ யாரும் இல்லை என்பது நன்கு தெரியும்.
நீதிப்பணி செய்யுங்கள்:
ஒடுக்கப்பட்டவர்களுடன் துணை நின்று ஆதரவை வெளிப்படுத்தும் மற்றும் நீதியைப் பெற நீதிமன்றங்களில் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அருட்பணி ஏஜென்சிகளுக்காக தேவனைத் துதியுங்கள். இருப்பினும், அன்றாட வாழ்க்கையில் நீதியைக் கொண்டுவருவதில் அதிகமாக பாமர மக்களும் உள்ளூர் சபைகளும் ஈடுபட வேண்டும்.
நான் இவ்வுலகில் நீதியின் கருவியா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்